நாளொரு குறள் – 32

நாள் : 32
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : அறன்வலியுறுத்தல்
செய்யுள் :2

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு.

உலகில் மிகச் சிறந்த நன்மையைத் தரக்கூடியது எது?
தர்மம்.

உலகில் மிகப்பெரிய கேட்டைத் தரக்கூடியது எது?
தர்மம் அறியாமை அல்ல. தர்மத்தை மறத்தலே மிகப் பெரிய கேட்டை விளைவிப்பதாகும்.

தர்மம் அறியாதவன் தெரியாமலேயே பல சமயங்களில் நல்லவற்றைச் செய்து விடுகிறான்.
தர்மம் மறந்தவன் தான் தர்மம் தெரிந்தவன் என்ற ஆணவத்தோடு தன்னுடைய மன விகாரங்களை வெளிப்படுத்துவதோடு அவையே தர்மம் என்றும் வலியுறுத்துவான்.

அவன் எதையும் காது கொடுத்து கேட்கவோ அலசி ஆராயவோ தயாராக இருப்பதில்லை. வைக்கோற்போரில் முட்டிக் கொள்வதை விட கரும்பாறையில் முட்டிக் கொண்டால் சேதாரம் அதிகமாக இருக்கும்.

தர்மம் தெரியாதவனுக்கு தர்மம் சொல்லித்தருதல் சற்று எளிதானது. தர்மம் மறுப்பவனுக்கு புகட்டுவது இயலாத காரியம்.

அதனால் தர்மம் மறத்தல் தரும் கேடு மிகப் பெரியதாகும்.