அமரர் முத்தம்மா கதிர்காமநாதன் அவர்களுக்கு மகனின் கவிதைக் காணிக்கை

740

–சிறீதரன் கதிர்காமநாதன்

அம்மா..
எமக்கு உயிர் தந்தாள்.
அம்மா
எமக்கு உதிரம் தந்தாள்..

அம்மா
எமக்கு உறவு தந்தாள்
அம்மா
எமக்கு உணர்வு தந்தாள்..

அம்மா
எமக்கு உணவு தந்தாள்..
அம்மா
எமக்கு உன்னதம் தந்தாள்..

மொத்தத்தில் அம்மா நீ
முத்தம் நித்தம் முழுசாய்த் தந்து
உலகத்தில்
உதிக்கவே வைத்து விட்டாய்..

அம்மா
எம்மைக் காட்டக் கரு சுமந்தாள்.
கருவில் அவளை நாம் காலால் உதைத்த வேளை
எம் குரலும் குணமும் கோணல் முகமும்
குவலயம் தெரிய முன்பு
கொள்ளை அன்பு கன தந்தாள்..

அம்மா..
கண் தந்தாள்.. காது தந்தாள்.. கால்கள் தந்தாள்.. கைகள் தந்தாள்..
களி கொள்ள அங்கங்கள் தங்கமாய் பல தந்தாள்..

கடைசியில்
காலன் கைப்பொருளாய் காலமே ஆகிவிட்டாள்..

அப்பாவின் வியர்வைத் துளிகள்
வீட்டுக்குள் விழுந்தாலும்
எம் வீரியம் விரைந்து வர
விதம் விதமாய் விருப்புடன் உணவு தந்து
வீட்டுக்குள் விறகாகி வெந்தவள் நீ அம்மா..

அப்பா
எங்கள் விரல் பிடித்து
வீதியில் நடப்பித்து
வெளியுலகைக் காட்டி வியந்து நின்றாலும்..

கூட்டுக் குருவி போல்
வீட்டுக்குள் விளையாடிக்
கொஞ்சிக் குலாவிய
கோலத்தாயம்மா நீயம்மா..

அப்பா
எம்மை வித்தகனாக்கி வியக்க வைக்க
சிலவேளை எம்மை விரட்டிவார்.. வெளுப்பார்..
விளையாட்டுக்கூட அம்மா
உன் விரல்கள் எம் உடம்பில் பட்டதில்லை தாயே..

அம்மா.
உன் நா சுடுவார்த்தை சொன்னதில்லை..
கால்கள்
கடுகளவு எறும்பைக் கூட மிதித்துக் கொன்றதில்லை..
உன் எண்ணம் எவரையும் எடுத்தெறிந்து நின்றதில்லை..
வாயில் நீ வசைகள் கூட வைத்ததில்லை.
பாயில் நீ ஏனம்மா
பலநாள் படுத்திருந்தாய்..
நோயில் நீ ஏனம்மா
நொந்துதான் போயிருந்தாய்..

இவ்வளவு வயது வந்தும் – இதயம்
இரும்பு போல் இருந்ததம்மா..
இனிப்பும் உன்னிரத்தத்தில்
இதுவரை இருந்ததே இல்லையம்மா..
இத்தனையும் உனக்கு ஏற்கனவே இருந்திருந்தால்
எப்பவோ நீ இறந்து இருந்திருப்பாய்..

பாலகனாய் நாம் இருந்த போது அம்மா
நீ
படுக்கையில் படுத்த கதை பார்த்ததே இல்லையம்மா..
உன் முள்ளந்தண்டு முறியாதிருந்திருந்தால் அம்மா
முதுகில் பேரப்பிள்ளைகளை முழுநாளும் சுமந்து
சொகுசாய் வைத்து வாழ்ந்திருப்பாய் தாயே..

முரடர் கூட்டத்தால்
உன் வீட்டு முற்றம் முள்ளாகிப் போனதால் தாயே.
முடியும் வேளை வந்தும் உன் முன்னால் நிற்க முடியவில்லை..
பகைவன் அவன் பாம்பு போல்
படம் எடுத்து ஆடியதால்.
படுக்கையில் நீ பலநாள் படுத்திருந்தும்
பக்கத்திலிருந்து பணிவிடைகள் பகிரவில்லை.

மன்னித்துக்கொள் தாயே..
மறு பிறப்பென்று ஒன்று உண்டென்றால்
உன் மடியிலிருந்து விளையாடி
மணிக்கணக்கில் மழலைப்பேசி
மகிழ்ச்சியாய் மனம் மகிழ்ந்து
மண்ணுள்ளவரை உன்னோடு வாழ்வோம் தாயே..