சிவபாத விருதையருக்கும் பகவதி அம்மைக்கும் ஏழாம் நூற்றாண்டளவில் மகனாகப் பிறந்த சம்மந்தருக்குக் குளக்கரையில் வைத்து உமாதேவியார் பால் கொடுத்துப் பசியாற்றினார் என்றும், உனக்குப் பால் தந்தது யாரென்று தகப்பன் மிரட்ட “தோடுடைய செவியன் விடையேறிய” என்ற தேவாரத்தை ஞானசம்மந்தர் பாடியதாகவும் படித்திருக்கின்றோம்.
தமிழ்நாட்டின் சீர்காழியில் அமைந்துள்ள பிரம்மபுரீஸ்வரர் ஆலயமே இப்பாடல் பாடப்பெற்ற தலமாகும்.
இங்கே எழுந்தருளி இருக்கும் இறைவனுக்கு தோணியப்பனெனும் நாமமும் உண்டு. ஊழிக்கால அழிவில் 64 கலைகளையும் ஆடையாக அணிந்த சிவன் தோணி ஓட்டி வந்ததாகவும், சீர்காழி மட்டும் அழியாமல் இருக்கக் கண்டு, அங்கே எழுந்தருளியதாகவும், தோணி ஓட்டி வந்து குடியேறியதால் தோணியப்பரெனும் நாமம் கொண்டாரென்றும் சொல்லப்படுகிறது.
இவ்வாறு எழுந்தருளிய இறைவனை வணங்கிப் பிரம்மன் மீண்டும் படைப்புத் தொழிலைய் தொடங்கியதால் பிரம்மபுரீஸர் எனவும் அழைக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
இவ்வாலயத்தில் நான்கு கோபுரங்கள் உண்டு. கிழக்கில் உள்ள இராசகோபுரம் ஆலய நுழைவாசலாகும்.
இவ்வாலயத்தில் மூன்று சன்னிதிகள் உண்டு. ஆலயத்தில் நுழைந்து மண்டபம் தாண்டிப் போனால் ஆலயக் குளத்துக்கு அருகில் பிரம்மபுரீஸர் சன்னிதி உண்டு. கிழக்கே நோக்கியிருக்கும் இச்சன்னிதியின் வலப்பக்கத்தில் திருஞானசம்பந்தர் உற்சவ மூர்த்தியாக உள்ளார். குழந்தை வடிவில் இருக்கும் இவர் கையில், உமை அம்மை பால் கொடுத்ததை நினைவூட்டும் விதத்தில் கிண்ணி ஒன்றும் உள்ளது.
ஆலயத்தின் மையப்பகுதியில் சட்டைநாதர் சன்னிதி உண்டு. கட்டுமலைப் படியேறிப் போனால் சட்டைநாதரை தரிசிக்க முடியும்.
மகாபலியிடம் மூன்றடி நிலம் பெற்ற செருக்கில் மகாவிஷ்ணு ஆட, சிவனோ மார்பில் தட்டிச் விஷ்ணுவை வீழ்த்த, இலக்குமி அம்மா தாலிப்பிச்சை கேட்க சிவன் கோபம் தணிகிறார். விஷ்ணுபகவான் வேண்டுகோளுக்கிணங்க விஷ்ணுவின் தோலை ஆடையாக அணிந்து எலும்பை கதையாக்கினார் ஈசன். அந்த நிலை உருவே சட்டைநாதர் மூலவர்.
அம்பாள் சன்னிதி ஆலயத்தின் கிழக்குப் பகுதியில் உள்ளது. ஆலயத்தின் பின்னால் தீர்த்தக்கரை உள்ளது. இக்கரையில் வைத்து சம்பந்தருக்கு தேவி ஞானப்பாலூட்டினாள். அதனை சொரூபமாக்கி உள்ளார்கள்.
ஞானசம்பந்தரால் பாடப்பெற்ற இத்தலத்தில் சித்திரை திருவாதிரை சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
ஆலய வளாகத்தில் நின்றபடி சம்பந்தர் பாடிய தேவாரத்தை பொருளோடு பாட ஆலயத்துக்கு வருவோர் அதிகம் பேராவார்.
தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
காடுடையசுட லைப்பொடிபூசியென் னுள்ளங்கவர் கள்வன்
ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்த அருள்செய்த
பீடுடையபிர மாபுரமேவிய பெம்மா னிவனன்றே.
தோடணிந்தவன்.. எருது மீதேறி வந்தவன்.. வெண்ணிலவை கொண்டையில் பூப்போலச் சூடியவன். என் உளம் கவர் கள்வன்.. சுடலைச் சாம்பலை உடல் முழுக்கப் பூசியவன். தாமரை இதழான் பிரமனுக்கு இரங்கி படைக்க ஆசி பழங்கியவன்… அந்தப் பிரம்மதீஸன் தான் பால் தந்தான் என்ற் பொருள்படம் பாடிய இத்தலத்திற்கு என்றேனும் வாய்ப்பமைந்தால் போய் வரவேண்டும்