வாழ்க்கை

681

வாழ்க்கை
வாழ்க்கையே அலைபோல நாமெல்லாம் அதன்மேலே. இது தான் வாழ்க்கை. நகைச்சுவை நடிகர் அழகாகச் சொன்னார் “என்ன பெத்தது பெத்தது எண்டு சொல்லுறியே! பத்து மாதம் நான் உன் வயிற்றில் எவ்வளவு துன்பம் அனுபவித்தேன் தெரியுமா? ஒரே இருட்டு; ரீவி, சினிமா என எதுக்குமே வழி இல்லை” என.

அம்மாவின் வயிற்றிலிருந்து பரந்த உலகிற்கு வந்தவுடன் அடடா எவ்வளவு இன்பமான சொர்க்கத்தை அடைந்துவிட்டோம் என நினைப்போம். அப்போது தெரியாது “இந்த உலகம் மாயைகளாலும் இன்ப துன்பங்களாலும் நிறைந்தது; என்னடா வாழ்க்கை என பிற்காலத்தில் சொல்லப்போகிறோம்” என்று..
அம்மா பாலுட்டக் குடித்துவிட்டு நிம்மதியாக படுத்து பலவிதமான மனிதர்களின் குரல் கேட்டு உருவம் பார்த்துப் படிப்படியாக வளர்கிறோம். அனைவரும் அன்பாய், பாசமாய் பழக ஆகா மனித பிறப்பு மிக உயர்ந்தது என சந்தோசப்படுவோம்.

படிப்படியாக வளர்ந்து உறவுகள், நண்பர்கள் என ஆடிப் பாடி விளையாடி, படித்து, பார்த்து, ரசித்து ஆனந்தமாய் காலம் போக ஆசைகளும் பலவிதமாக வரத் தொடங்கும். 
உதாரணமாக, சிறு பிள்ளையாய் இருக்கும்போது ஆசிரியர் கேட்பார் “பிற்காலத்தில் எப்படியாக வர விருப்பம் “ என. அப்போது சொன்னது போல் பின்பு எத்தனை பேர் அப்படி ஆகியிருக்கிறீர்கள்.

தான் நினைத்தபடிதான் வாழ்க்கை அமையும், போகும் எனத் தான் எல்லோரும் ஆரம்பத்தில் நினைப்போம்.
ஒரு பெண்ணையோ, ஆணையோ விரும்பும் போது அது நிறைவேறாமல் போனால் என்ன வாழ்க்கை என சலிப்பு வரும். கல்வியில் திறமை இல்லது விடில் கவலை வரும்.

உழைக்க வேண்டிய வயதில் எங்கள் திறமைக்கோ, ஆசைக்கோ ஏற்ற வேலை கிடைக்க வில்லை என்றலோ, போதிய வருமானம் இல்லை என்றாலோ ஏமாற்றம் வரும்.

சரி .. இனியாவது இப்படி, அப்படி வாழ வேணும் என பல திட்டங்கள் போடுவோம். நிறைவேறும்.. நிறைவேறாமல் போகும். அப்பதான் மனிதன் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும் எனத் தெரியும்.
குடும்பம் சிறப்பாக அமையவிட்டால் ஏற்படும் மன வலி சொல்லி அடங்காது. ஒவ்வொரு நொடியும், பொழுதும், காலமும் துன்பம், துயரம் தான். போதுமடா சாமி இந்த வாழ்க்கை என்போம்.

ஏமாற்றங்கள், தோல்விகள், துன்பங்கள், துயரங்கள், துரோகங்கள், நோய்கள், இழப்புக்கள், அழிவுகள், இன்னும் எத்தனையோ சம்பவங்கள் ஏற்படுகிறபோது “எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது; எங்களுக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது” என விடை தெரியாது மனம் நோகும். என்ன நரக வாழ்க்கை என சொல்வோம். இங்கேதான் இறைவன் விளையாடுகிறார்.

தாய், தந்தை உயிர் தந்து உருவம் தந்தனர். விதி எனும் மூலத்தை இறைவன் வைத்துக்கொண்டார்.
பரந்த உலகில் மானிட உருவம் தந்து, பல வித பாத்திரங்கள் போட்டுவிட்டு இன்ப, துன்பங்களை தந்து சினிமா இயக்குனர் போல் இறைவன் ஆட்டுவிக்கிறார். இதுதான் எங்களுக்கு விதிக்கப்பட்ட விதி என இருக்கும் போது நல்லதை செய்து சொர்க்கத்தை அடைவோம்.

அன்புடன்

வ.பொ.சு–மாரிட்டி மண்ணின் மைந்தன்.