இயற்கையின் மேன்மை!

ஒன்றுமில்லாதவற்றின் நடுவே எல்லாமும் பிறக்கிறது…
ஒற்றைக்கற்றை ஒளியில் ஆயிரமாயிரம் நிறப்பிரிகை…

ஒவ்வொரு நொடித்துளியும் மாறிக்கொண்டிருக்கும் அற்புதம்
அணுவில் இருந்து அண்டம் வரை
அம்மா தந்த நிலாச்சோற்று உருண்டையாய்
எங்கு ஆரம்பிக்கிறது எங்கு முடிகிறது
என்பது புரியாத கோடிகோடியாய் உயிர்த்துளிகள்
ஒன்றிற்கொன்று ஆதாரமாய் சுழன்று கொண்டிருக்கின்றன

அதிலொன்று இன்று வியக்கிறது…
எல்லாம் ஒன்றுதான் என்கிறது கிட்டப்பார்வை
ஆயிரங்கோடி வித்தியாசம் சொல்கிறது எட்டப்பார்வை

இத்தனைக் கோடி ஆண்டுகளாய்
மாறாமல் மாறிக் கொண்டே
மாறாமல் இருக்கிறது
இயற்கை!