உள்ளத்தில் உருவாகி உயிர்மூச்சில் கருவாகி
உலகத்தில் பிறந்தாயடி – நீ
பள்ளத்தில் பாய்ந்துவரும் பைம்புனல் போலிந்த
பக்தனைக் கவர்ந்தாயடி
அள்ளக் குறையாத அறிவென்னும் செல்வத்தை
அடிமைக்குத் தந்தாயடி – என்
உள்ளத்தில் கோயில்கட்டி உள்ளே எழுந்தருளி
உட்கார்ந்து கொன்டாயடி
எண்ணத்தில் உனைக்கொன்டு ஏட்டில் எழுதிவைத்து
எம்புலவர் வளர்த்தாரடி – பல
வண்ணத்தில் உனைப்பாடி வனப்பூட்டும் அணியாக்கி
வஞ்சியுனக் களித்தாரடி
மண்ணுக்கு எட்டாத மாண்புகழ் அமுதுக்கு
மணம்செய்து தந்தாரடி – என்
கண்ணுக்கு கண்ணான காரிகை உன்காலில்
காவலர் பணிந்தாரடி
காவிரி நதிதந்த கர்னாடக நாட்டினது
கன்னடத்தை யீன்றாயடி – உயர்
மாவரைகள் சூழ்ந்திட்ட மண்ணும்புகழ் கேரளத்து
மலையாளம் யீன்றாயடி
தேவரெல்லாம் போற்றுகின்ற தென்னகத்து ஆந்திரத்து
தெலுங்கை நீதந்தாயடி – இசைத்
தூவானம் போலிருக்கும் துளுவத்தை தந்திங்கு
திராவிடம் படைத்தாயடி
விருந்தோம்பி வாழ்வதிலே வித்தகியே உனக்கிணையாய்
வேறொருவர் கிடையாதடி – பாரில்
உருதோன்றி நிலையாகி உயர்ந்தநிலை எய்தியவர்
உனையன்றி வேறாரடி
அருள்தோன்றும் முகமாகி ஆனந்த மயமாகி
ஆளவந்தாய் நீதானடி – வீசி
வருந்தென்றல் காற்றினைப்போல் வானத்துச் சூரியன்போல்
வையத்தில் வாழ்வாயடி.