முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

72

வல்லாதிக்க வெறியின் அகோரப் பசிக்கு இலட்சக் கணக்கான தமிழர்கள் இரையாகி ஆண்டுகள் பத்தாகி விட்டன.

கொத்துக் கொத்தாக உறவுகள் கொன்று குவிக்கப்பட்ட பேர் வலி ஒரு புறமிருக்க உயிர் தப்பிப் பிணங்களாக நடமாடும் எம்மவர் கொடுந்துயர்………………. என்ன சொல்லை வைத்து முடிப்பது என எனக்குத் தெரியவில்லை. இந்த வசனத்தை முடிக்க முடியாதது போல அவர்கள் துயரமும் முற்றுப் பெற முடியாதது.

என்னை இவ்வாறு துன்புறுத்தினார்கள் என்று மற்றவர்களைப் போல் சொல்ல முடிவதில்லை. அவ்வளவு ஏன்? என்னோடு நின்ற முன் பின் பழக்கமில்லாத தமிழனை இவ்வாறு துன்புறுத்தினார்கள் என்று கூடச் சொல்ல முடிவதில்லை.. கஷ்டபட்டு முயன்றாலும் இத்தனை ஆண்டுகள் கழிந்தும் கூட காட்சிகள் முன்னால் விரிந்து ஊமையாகி விடத்தான் முடிகிறது..

அவ்வளவு கொடூரமான துன்புறுத்தல்கள். ஐம்புலன்கள் வழியாகவும் செய்யப்பட்ட சித்திர வதைகள்.. நினைத்துப் பார்த்தாலே அச்சம் பீறிடும் வகையான மனித குலம் கண்டறியா கொடூர வெறிச் செயல்கள். இதை விடச் செத்து விடலாம் என்று நினைக்கும் செக்கனில், நீ செத்த பின்னும் துன்புறுத்தபடுவாய் என்ற குரூரமான குதறல்கள்.

ஆம்…! தமிழன் வாழவும் கூடாது; சாகவும் கூடாது என்ற ஒற்றை நோக்கத்துடன் நிகழ்த்தப்பட்ட மிலேச்சத்தனத்தை மிஞ்சிய செயல். மனித இனத்திலிருந்து பிறந்த அரக்க இனத்தை விஞ்சிய கொடூர இனத்தை இனங்காட்டிய செயல்…

ஆனாலும் நாங்கள் பீனிக்ஸ் பறவையின் முப்பாட்டன்கள் எனும் அளவுக்கு நிமிர்ந்து நிற்கிறோம்.

நீங்கள் தந்த ஆறாக் காயங்களிலிருந்து புதிதாய்ப் பிறப்பெடுக்கும் பிரவாகம் நாங்கள்…

இதை உங்களுக்குச் சொல்லத்தான் மே 18 இல் நினைவெழுச்சி கொள்கின்றோம்..

இனப்படுகொலை மாதத்தில்
நினைந்து அழுவோம்!

இனப்படுகொலையின் நீதிக்காய்
நினைந்து எழுவோம்!

-முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்