செஞ்சோலைப் படுகொலையின் போர்வெறிப் பின்னணி

 

இன்னுமோர் பிறப்பு இருந்தால் ஆசுகவி கல்லடி வேலனும்,கப்டன் செங்கதிரும் அவதாரம் எடுத்த வயவையில் மறுபடி வந்து அவதாரம் எடுத்துவிடு நிருபா!🙏

யாழ்ப்பாணக்குடா நாட்டுக்கு தெற்கே ஶ்ரீலங்காவின் சிங்களப்படைக்கும் தமிழீழத்தின் தமிழர் படைக்கும் இடையே நீண்ட சமாதானத்தின் பின்னர் 2006 ஆகஸ்ட் 11 திகதி கடுமையான சண்டை ஆரம்பித்தது.

அந்த தொடர் சமரின் மூன்றாவது நாள்தான் இக் கொடிய 2006 ஆகஸ்ட் 14 ம் திகதி ஆகும்.

“வடபோர்முனை” என அழைக்கப்பட்ட முகமாலை,கிளாலி, கண்டல், நாகர்கோவில் என விரிந்த களங்களுக்கான களமுனை வைத்தியசாலையில் (Field Hospital) விழுப்புண் தாங்கிய வீரர்களின் வேதனைகளை வென்று கொண்டிருந்தோம். கரிகாலன் கண்மணிகளின் உயிர்காத்துக் கொண்டிருந்தோம்.

இந்த நேரத்தில்தான் எங்களுக்கு முப்பது(30) கிலோ மீற்றர்கள் பின்னாலிருந்து வந்த கொடுஞ்சேதி காதுகளில் சுடு எண்ணெயாய் பாய்ந்தது.

ஒரு நாளும் இல்லாதவாறு ஒரு கணம் திகைத்தாலும் சுதாகரித்துக் கொண்டோம் ஏனெனில் நாம் ஒரு கணம் சோர்ந்தாலும் எங்கள் கையில் இருக்கும் போராளியின் உயிர் பிரிந்துவிடும்.

ஒருவரை ஒருவர் ஆசுவாசப்படுத்தி பணிதொடர்ந்தாலும் மனம் பதறியது, பேதலித்தது.

சீரணிக்க முடியாத அந்தப் பெருந்துயரிலிருந்து சற்று வித்தியசமாக வேறுவிடையங்களில் மனதை திருப்ப நடைபேசியை (வோக்கி ரோக்கி) கையிலெடுத்து களமுனைத் தளபதி அணித்தலைவருக்கு இடும் கட்டளை கேட்கத் தொடங்கினோம்.

வெஞ்சமராடும் முன்னணி வீரர்களின் நிலைமையும் ஆரோக்கியமாக இருக்கவில்லை.

ஆம், எங்களுக்கு முன்னால் வெஞ்சமராடிக் கொண்டிருக்கும் அவர்களுக்கும் செஞ்சோலையில் இடிவிழுந்த கதை தெரிந்தே இருந்தது.

அவர்களின் குரல்களும் வழமைக்கு மாறாகவே இருந்தது. தென்பின்மை
தெளிவாகவே தெரிந்தது.

 

அடுத்து,

விசேட கட்டளைத் தளபதி களமுனைத் தளபதிகளுக்கு
இடும் கட்டளைகளை நடைபேசியில் (walkie talkie) கேட்டோம் அவர்களிடையேயும் செஞ்சோலை சிறுவர் தலையில் இடிவிழுந்த சேதியின் தாக்கம் தெரிந்தது.

“மலையே சரிந்தாலும் நிலை குலை”யா உளவுரண் கொண்ட புலிகள் சோர்வதா என என் மனம் எண்ணம் கொண்டது.

ஒரே தட்டில் உணவு கொண்டு ஒன்றாய் படுத்துறங்கிய எம் சக போராளிகள் பல நூறு பேர் மடிந்த ஆனையிறவு, பூநகரி, மணலாறு, கொக்குத்தொடுவாய் சமர்களில் செத்துவீழ்ந்த போது நாம் கிறுங்கவுமில்லை, சோரவுமில்லை!

எம் படையியல் வரலாற்றில் முன்னொரு போதும் ஏற்படாத சோர்வு 62 சிறுவர்கள் செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட போது எப்படி ஏற்பட்டது?

எந்த மக்களுக்களின் துன்ப துயரங்களை கண்டு தாங்கிக் கொண்டு அம்மா, அப்பாவின் இதமான இறகுகளுக்குள் இருக்காமல் போராடப் புறப்பட்டோமோ அதே மக்கள் இரத்த வெள்ளத்தில் வீழும் போது எப்படி துவளாமல் இருக்க முடியும்?….

எங்கள் உளவியலை ஆராய்ந்து போராளிகளாகிய எங்களின் “உளவுரண்” தனை தகர்க்கவே எதிரி எங்கள் செஞ்சோலைச் சிறுவர்கள் தலையில் குண்டினை பொழிந்தான்.

சிங்களப் படைத்துறை நினைத்தது போலவே யாழ்ப்பாணத்தை கைப்பற்ற நடைபெற்ற அந்தச் சமரில் எமது முற்றுகையின் இறுக்கம் தளர்ந்தது.

கண்ணில் குத்துவதும், புண்ணில் குத்துவதும் தந்தையை உயிருடன் வைத்து சமாதி கட்டுவதும் சிங்களவன் வரலாற்றின் நீட்சியெங்கும் விரவிக்கிடக்கிறது.

மே 18 இனப்படுகொலை நாளில் முள்ளிவாய்க்கால் படுகொலையுடன் நின்றுவிடாது மாங்கனித்தீவில் தமிழினம் மீது நிகழ்த்தப்பட்ட அனைத்து படுகொலைகளையும் நினைவு கூர்ந்து சர்வதேசத்தின் செவிடான செவிப்பறைகளை தட்டுவோம்.

அம்பாறை கரும்புத் தோட்டப்படுகொலை, மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படுகொலை, வந்தாறுமூலை பல்கலைக்கழக படுகொலை வவுனியா ஒதியமலைப் படுகொலை, வெண்கலச்செட்டிக்குளப் படுகொலை, முல்லைத்தீவு
பிரமந்தன் படுகொலை, யாழ் குருநகர் படுகொலை, குமுதினிப்படகுப் படுகொலை,
செஞ்சோலைப் படுகொலை உட்பட எம் தாயக பூமியெங்கும் சிங்களனால் நடாத்தப்பட்ட அனைத்து படுகொலைகளையும் நினைந்து விளக்கு ஏற்றி ஒன்றாக நிமிர்வோம்!
ஒன்றாகி நிமிர்வோம்!🙏

-வயவையூர் அறத்தலைவன்-