நாளொரு குறள் – 76

பால் : அறத்துப்பால்
அதிகாரம் : அன்புடைமை
செய்யுள் :6

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

1. அன்பு அனைத்திற்கும் ஆதாரம்.. எல்லோரும் ஒத்துக் கொள்வார்கள்.

2. அறம் என்னும் நல்லவற்றிற்கு அன்பே ஆதாரம் … எல்லோரும் ஒத்துக் கொள்வார்கள்.

3. அறமல்லா மற்றவற்றிற்கும் அன்புதான் ஆதாரம்.. இதை ஒத்துக் கொள்ள பலர் தயங்க்குவார்கள்.

முதல் அறிக்கையை ஒத்துக் கொண்டவர்களுக்கு மூன்றாம் அறிக்கையை ஒத்துக் கொள்ள மனம் வருவதில்லை. காரணம் என்ன?

அனைத்தும் என்ற பொழுது அறமும் அறமில்லாததுவும் என்று பொருள் இருந்தாலும் அறமற்றது என்பது வெளிப்படையாக தெரியவில்லை. அங்கு அன்பு என்ற வார்த்தை பிரதானமாக நின்றது.

ஆனால் அறமற்றது என தனியே பிரித்தபொழுது அன்பு அங்கே குறைந்து போய்விட்டது. அறமற்றது என்ற சொல்லின் வலிமை அன்பைக் காண விடமால் தடுத்துவிடுகிறது.

இதை அறியோர் அறமற்ற மறக் காரியங்களுக்கு அன்பு துணை நிற்காது என்பர். ஆனால் அங்கும் அன்புதான் ஆதாரம்.

சுயநலம் என்பதும் ஒருவர் தன் மேல் தானே கொள்ளும் அன்புதானே. அதனால்தானே பல மறக்காரியங்கள் செய்கிறோம்.

நான், என் குடும்பம், என் நண்பன், என் உறவினர்கள், என் இனம், என் மொழி, என் நாடு, மனித இனம், உயிர்கள் என நாம் வைக்கும் அனைத்தும் பற்று அத்தனையும் அன்பின் பாற்பட்டதுதான்.

அதனாலேயே அறமும் மறமும் செய்கிறோம்.

ஆக அன்பின்றி எக்காரியமும் இல்லை.