வானவில்லை வகுத்தெடுத்து – அறிவியல் மைல்கல் – 11

581

வாவில்லை குத்தெடுத்து

(லென்ஸ் – ஒளிவிலகல் – நிறப்பிரிகை)

அல் -ஹய்தம்
(காலம்: கி.பி -965 – 1039 ஆண்டுகள்).

ஆப்டிகல் என்னும் லென்ஸ் பற்றிய நம் புரிதல் –
நம் எல்லாருக்கும் கவிதையாய் பிடித்துப்போன வானவில்லோடு
நெருங்கிய தொடர்புடையது.
ஆரம்பத்தில் அரிஸ்ட்டாடில் சொன்னார்.

 

மேகம் என்பது ஒரு பெரிய லென்ஸ்.
அது ‘பிரதிபலிக்கும்’ சூரிய ஒளியே வானவில்.

வெறும் ‘பிரதிபலிப்பு’ – Reflection- எப்படி வெண்ணொளியை
ஏழுவண்ண ஜாலமாக காட்டுகிறது என அந்த பேரறிஞரால்
விளக்கமுடியவில்லை.
( சூரியதேவனுக்கு ஏழு குதிரைகள் ரதத்தில் பூட்டிய
நம் இதிகாச எழுத்தாளர்கள் – ஒளிவிலகல் பற்றி
அறிந்தவர்களா எனத் தெரியவில்லை.)

அடுத்து வந்தவர் டாலமி (கிபி.90-168).
ஓர் ஊடகத்தில் இருந்து இன்னோர் ஊடகத்துக்குள் பாயும்போது
ஒளிக்கற்றை ‘ வளைகிறது’ -என நீர், வாயுக்கள் வைத்து
நிரூபித்தார். ஆனால் தத்துவ விஞ்ஞானியான டாலமி
வானவில்லை ஒட்டி இந்தச் சிந்தனையைப் பாய்ச்சவில்லை.

தன் அழகைப்பற்றிய புதிர் அறியாமல் ரசிகர்கள் விழிப்பதை எண்ணி
அவ்வப்போது வானவில் ரசித்துச் சிரித்தது-
அடுத்த சில நூற்றாண்டுகளுக்கு.

கி.பி. 1025-ல் அரபு இயற்பியலாளர் அல்-ஹய்தம் ‘Treasury of Optics’
என்னும் ஒப்பற்ற நூலை எழுதினார்.
லென்ஸ்கள், மனிதனின் விழிகள் – இவற்றின் கட்டமைப்பு, செயல்பாடுகள்,
டெலஸ்கோப்( தொலைநோக்கி)களில் பயன்படும் சிறப்பு ஆடிகள் (parabolic mirrors)
ஒளிவிலகல் ( Refraction) –
இவற்றை அழகாய்த் தெளிவாக்கிய அறிவாளர் அல்-ஹய்தம்.
ஒளி திண்மையை ஊடும்போது ( காற்றிலிருந்து நீருக்கு, நீரிலிருந்து பனிக்கட்டிக்கு)
அதன் வேகம் குறையும் என்ற உண்மையைக் கண்டுசொன்னவரும் இவரே.
ஒளி விலகலை விளக்கியவர் இவர் .ஆனால் அல்-ஹய்தமும் வானவில்லை ஒளியின்
‘ பிரதிபலிப்பு’ என்ற அரிஸ்டாட்டில் சொன்ன அதே கருத்தையே சொன்னார்.

அதன் பின் வந்த ஜெர்மன் பேராசிரியர் தியோடரிக் என்பவர்தாம், 1304ம் ஆண்டில்
வானவில்லின் பிறப்பு ரகசியத்தை உடைத்தவர்.
உருண்டையான குடுவையில் நீர் நிரப்பினார் – அது மேகத்துளிகளுக்கு ஈடு.
ஒளியைப் பாய்ச்சினார். ஜெயோமெட்ரி விதிகள் கொண்டு கணக்கு போட்டார்.
1) முதலில் நீர்த்துளியில் ஒளிவிலகல் நிகழ்கிறது.
2) விலகிய ஒளிக்கற்றை துளிக்கு உள்ளேயே பிரதிபலித்துக்கொள்கிறது.
3) பிரதிபலிக்கப்பட்ட ஒளி மீண்டும் ஒளிவிலகல் நிகழ்ந்து துளியைவிட்டு வெளிவருகிறது.
4) வானவில்லின் மையத்துக்கும் வர்ணவட்டத்துக்கும் 42 டிகிரி கோணம் உள்ளது.
5) ஒளி விலகல்களே நிறப்பிரிகைக்குக் காரணம்.

இத்தனைத் துல்லியமாய் வானவில்லின் வர்ணப் பிறப்பை விவரித்த
தியோடரிக் – சில சமயம் குட்டியாய் தோன்றும் இரண்டாம் வானவில்லின்
காரணம் என்ன என்று சொல்லவில்லை.

அதைச் சொல்ல இன்னும் நூறாண்டு ஆனது.
சொன்னவர் – பிரான்ஸின் ரெனே டெஸ்கார்டஸ்.
விளக்கம் – நீர்த்துளிக்குள் ஒளி இருமுறை பிரதிபலித்துக்கொள்வது.

அறிவியலில் இதுபோன்ற நிகழ்வுகள் சகஜம்.
ஒருவர் கோடு போடுவார். எதோ ஒரு தேசத்தில் இன்னொருவர் அதை வைத்து ரோடு போடுவார்.
வானவில்லை முதலில் ஆராய்ந்தவர் – அரிஸ்ட்டாடில்.
ஒளிவிலகலை முதலில் சொன்னவர் – டாலமி.
லென்ஸ்கள், விழிகளின் சூட்சுமம் சொன்னவர் – அல்-ஹய்தம்.
முழு ரகசியம் உடைத்தவர் – தியோடரிக்.
பின்னூட்டம் இட்டவர் – டெஸ்கார்டஸ்.

ஐவரில் யாரிந்த மைல்கல் நாயகர்?
என் தேர்வு – அல்-ஹய்தம்.
ஆடிகள் கண்டு சொன்ன அல்-ஹய்தம்மையே
இந்த மைல்கல்லின் நாயகராய்க் கொண்டாடுவோம்.

 

-இளசு-