கவி ஆவதற்குப் பல காரணங்கள் இருந்தாலும் கவிஞருக்குச் சமூக அக்கறை நிச்சயம் இருக்கும். கவிகள் வெளிப்படுத்தும் காதலாகட்டும், காமம் ஆகட்டும், கோபம் ஆகட்டும், சோகம் ஆகட்டும், எதுவானாலும் சமூக அக்கற்றை இன்றிப் பிறப்பதில்லை.
அந்த வகையில் வயவையூர்க்கவிஞன் லம்போ வெளியிட்ட “நான் உறங்கிய தொட்டில்” கவிநூல் ஈட்டிய காசு வயவைச் சமூக முன்னேற்றத்துக்குப் பயன்படுகிறது.
முன்னர் அவுஸ்ரேலிய வயாவிளான் மக்கள் ஒன்றியம் வயவை லம்போவின் “நான் உறங்கிய தொட்டில்” நூலை விற்றுப் பெற்ற காசை வயவை மக்களின் நலத்திட்டத்துக்கு வழங்கியது.
இப்போது, பிரான்சு வயாவிளான் மக்கள் ஒன்றியம் வயவை லம்போவின் “நான் உறங்கிய தொட்டில்” கவிநூலை விற்றுப் பெற்ற காசில் வயவையூர் வரப்புலத்தில் வாழும் மூன்று குடும்பங்களுக்கு மிதியுந்துகளை வழங்கி உள்ளனர்.
வயாவிளானின் வரப்புல, திடப்புல மக்கள் பள்ளி செல்லவும், கல்வி நிலையங்கள் செல்லவும் போக்குவரத்துப் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக குரும்பசிட்டி ASN கல்விக்கழகச் சமூகம் தந்த தகவலை இங்கே பகிர்வது பொருத்தமாக இருக்கும்.
அச்சிரமத்தைப் போக்க மிதியுந்துகள் மிகவும் சரியான தேர்வு ஆகும். இதன் மூலம் வயாவிளானின் கல்வி மட்டம் மேலும் உயரும். இதனைக் கருத்தில் கொண்டு செயலாற்றிய வயாவிளான் உதவும் கரங்கள் அமைப்புக்கும், பிரான்சு-வயாவிளான் மக்கள் ஒன்றியத்துக்கும் கவிஞன் வயவை லம்போவுக்கும் வயவன் இணையத்தின் நெஞ்சார்ந்த பாராட்டுகளும் அம்மக்கள் சார்பான நன்றியும் உரித்தாகட்டும்.