சந்தைக் கிழவி

350

சந்தைக் கிழவி.. அப்படித்தான் அவன் அந்த மூதாட்டியை அடையாளப்படுத்துவான். பழக்கடை மூதாட்டியான அவளிடமே அவன் தன் பிள்ளைகளுக்கு விருப்பமான தோடம்பழம்  வாங்குவான்.

வாங்கும் ஒவ்வொரு முறையும் ஒரு பழத்தை உடைத்து சுளையொன்றை உண்டுவிட்டு, “என்ன கிழவி.. பழம் புளிக்குது” என்பான். கிழவி அப்பழத்தை வாங்கி தானுண்டு விட்டு “இனிப்பாத்தானேப்பா இருக்கு” என்பாள். அவனும் “அப்படியா.. சரி..” எனச்சொல்லி நகர்வான்..

வாடிக்கையாகிவிட்ட இதனைக் கண்டு அவன் மகள் ஒரு நாள் கேட்டாள் “பாட்டியின் பழம் இனிப்பாத்தானே இருக்கு.. ஒவ்வொரு முறையும் ஏன் குறை கூறுகின்றீர்கள்?”

அவன் சிரித்தபடி சொன்னான். “ஓம்.. இனிப்பாத்தான் இருக்கும்.. ஆனால் அந்தப் பாட்டி ஒரு நாளும் ஒரு பழம் கூட உண்டதில்லை.. உண்ணச் சொல்லவும் அவளுக்கு ஆருமில்லை. நான் இப்படிச் செய்வதால் அவள் பழம் உண்கிறாள்.. நானாகக் கொடுத்தால் வேண்டாம் என்பாள்.. தன்மானக்காரி.. அதுதான்.. குறை கூறி உண்ணச் செய்கிறேன்.” மகள் முறுவி தந்தையின் கையை இறுகப் பற்றினாள்..

சந்தைக்குழவின் பக்கத்துக் கடைக்காரன் கிழவியைப் பார்த்து “ஏன் கிழவி.. அவன் எந்த நாளும் உன் பழத்தைக் குறை சொல்றான்.. நீ என்னடா என்றால் எப்பவும் இரண்டு பழம் கூடக் குடுக்கிறாய்” என்றான்..

சந்தைக் கிழவி சிரித்தபடி “அப்படிச் சொல்லி என்னைப் பழம் தின்ன வைக்கிறான் அவன்.. அவனுக்கு நான் ஒன்றிரண்டு கூடக் குடுக்கிறன்.. இது தாய்க்கும் மகனுக்கும் நடுவில நடக்கிற பரிமாற்றம். வியாபாரம் இல்லை..” என்றாள்..

இவ்வுரையாடலை அருகிலிருந்து கேட்டவனின் வாயிலிருந்த தோடம்பழச் சுளை மேலும் இனிப்பானது.