பாகம் – 04
3. சீர்
சீர் மேவும் வாழ்க்கை செம்மையுடன் விளங்கும், அதே போன்று சீர்கள் கொண்டு விளங்கும் கவிதையும் செம்மையுடன் விளங்கும்.
எழுத்துக்கள் ஒன்று சேர்ந்து அசை உருவாவதைப்போல் அசைகள் ஒன்று சேர்ந்து சீர் உருவாகும்.
உரை நடையில் பதம் அல்லது சொல், வார்த்தை என்பதைத்தான் கவிதையில் சீர் என்று கூறுகிறோம். இனி அவ்வாறே பின்வருவனவற்றில் அழைப்போம்.
சீர்கள் நான்கு வகைப்படும். அவை,
3.1. ஓரசைச்சீர் – ஓர் அசை உடையது
3.2. ஈரசைச்சீர் – இரண்டு அசைகள் உடையது
3.3. மூவசைச்சீர் – மூன்று அசைகள் உடையது
3.4. நான்கசைச்சீர் – நான்கு அசைகள் உடையது
எனப்படும்.
அசைகளால் வடிவமைக்கப்படும் இத்தகைய சீர்கள் நேரசையாகவோ, நிரையசையாகவோ
அல்லது இரண்டும் விரவியோ வரும்.
அசைகளைப்பற்றி நாம் தெளிவாக இருப்பதால் சீர்கள் பற்றி இனி படிப்பது மிகவும் எளிது.
3.1. ஓரசைச்சீர்
ஓரசைச்சீரில் நேரசை, நிரையசை மட்டும் வரும்.
3.1.1. நேரசை
எ.டு:-
பு – நேரசை
தா – நேரசை
கண் – நேரசை
கால் – நேரச
3.1.2. நிரையசை
எ.டு:-
கவி – நிரையசை
கவின் – நிரையசை
கலா – நிரையசை
கலாம் – நிரையசை
(சென்ற பாகத்தில் இதைப்பற்றி விரிவாகப்பார்த்தோம். புதியவர்கள் மேலே காண்க!)
3.2. ஈரசைச்சீர்
ஈரசைச்சீர் என்பது இரண்டு அசைகளைக்கொண்டு வரும். அவை
நான்கு வகைப்படும். அவை
3.2.1) நேர் நேர் – தேமா
3.2.2) நிரை நேர் – புளிமா
3.2.3) நேர் நிரை – கூவிளம்
3.2.4) நிரை நிரை – கருவிளம்
இதை நினைவில் வைத்துக்கொள்ள மற்றொரு சுலபமான வழிமுறையைச் சொல்லித்தரவா?
ஈரசைச்சீரில் நேரசையில் முடிந்தால் அது மாச்சீர், நிரையசையில் முடிந்தால் அது விளச்சீர்.
தேமா, புளிமா, கூவிளம், கருவிளம் – இவற்றை அலகு பிரித்தாலே அவை எந்த அசைகள் எனத் தெரிந்துவிடும்.
தேமா – இதை அலகு பிரியுங்களேன் => தே | மா = நேர் நேர்.
புளிமா – இதற்கு => புளி | மா = நிரை நேர்
கூவிளம் – இதற்கு => கூ| விளம் = நேர் நிரை
கருவிளம் – இதற்கு => கரு | விளம் = நிரை நிரை
மாச்சீர்கள்:-
தேமா => தே | மா = நேர் நேர்
நேரசையுடன் நேரசை இணைந்தால் தே மா
புளிமா => புளி | மா – நிரை நேர்
நிரையசையுடன் நேரசை இணைந்தால் புளி மா
விளச்சீர்கள்:-
கூவிளம் => கூ| விளம் – நேர் நிரை
நேருடன் நிரை இணைந்தால் கூ விளம்
கருவிளம் => கரு | விளம் – நிரை நிரை
நிரையுடன் நிரை இணைந்தால் கரு விளம்.
இப்போது நன்றாக மனதில் பதிந்து விட்டது தானே! இனி அடுத்த சீர் பார்ப்போம்.
3.3. மூவசைச்சீர்
ஈரசைச்சீர் நன்றாக தெரிந்தால் மூவசைச்சீரும், நான்கசைச்சீரும்
கண்டுபிடிப்பது மிக எளிது. ஈரசைச்சீரில் மேலும் ஒரு ‘நேர்’ அசை இணைந்தால்
காய்ச்சீர் என்றும் ‘நிரை’ அசை இணைந்தால் கனிச்சீர் என்றும் அழைப்போம்.
அதைப்பார்க்கலாமா?
3.3.1. நேர் நேர் நேர் – தேமாங்காய்
3.3.2. நிரை நேர் நேர் – புளிமாங்காய்
3.3.3. நேர் நிரை நேர் – கூவிளங்காய்
3.3.4. நிரை நிரை நேர் – கருவிளங்காய்
3.3.5. நேர் நேர் நிரை – தேமாங்கனி
3.3.2. நிரை நேர் நிரை – புளிமாங்கனி
3.3.3. நேர் நிரை நிரை– கூவிளங்கனி
3.3.4. நிரை நிரை நிரை – கருவிளங்கனி
எவ்வளவு எளிமையாக உள்ளது!
இதேபோல் நான்கசைச்சீர்களைக்காண்போம்.
3.4. நான்கசைச்சீர்
மேற்கூறிய எட்டு வகையான மூவசைச்சீருடன் நேர் அசை இணைந்து 8ம்,
நிரை அசை இணைந்து 8ம் மொத்தம் 16 சீர்கள் நான்கசைச்சீர்களாகும்.
இதைச் சிறிது கவனமாகப் பார்க்கவேண்டும்.
மூவசைச்சீருடன்,
நேர் அசை இணைந்தால் ‘பூ’ சீராகவும்
நிரை அசை இணைந்தால் ‘நிழல்’ சீராகவும் அழைக்கப்படும்.
ஆனால்,
ஈற்று நேர்ச் சீருடன் இணைந்தால் ‘தண்’ என்றும்
ஈற்று நிரைச் சீருடன் இணைந்தால் ‘நறு’ என்றும் இணைந்து அழைக்கப்படும்.
அவை,
3.4.1. நேர் நேர் நேர் நேர் – தேமாந்தண்பூ
3.4.2. நிரை நேர் நேர் நேர் – புளிமாந்தண்பூ
3.4.3. நேர் நிரை நேர் நேர் – கூவிளந்தண்பூ
3.4.4. நிரை நிரை நேர் நேர் – கருவிளந்தண்பூ
3.4.5. நேர் நேர் நிரை நேர் – தேமா நறும்பூ
3.4.6. நிரை நேர் நிரை நேர் – புளிமா நறும்பூ
3.4.7. நேர் நிரை நிரை நேர் – கூவிள நறும்பூ
3.4.8. நிரை நிரை நிரை நேர் – கருவிள நறும்பூ
3.4.9. நேர் நேர் நேர் நிரை – தேமாந்தண் நிழல்
3.4.10. நிரை நேர் நேர் நிரை – புளிமாந்தண் நிழல்
3.4.11. நேர் நிரை நேர் நிரை – கூவிளந்தண் நிழல்
3.4.12. நிரை நிரை நேர் நிரை – கருவிளந்தண் நிழல்
3.4.13. நேர் நேர் நிரை நிரை – தேமா நறு நிழல்
3.4.14. நிரை நேர் நிரை நிரை – புளிமா நறு நிழல்
3.4.15. நேர் நிரை நிரை நிரை – கூவிள நறு நிழல்
3.4.16. நிரை நிரை நிரை நிரை – கருவிள நறு நிழல்
காய்ச்சீரைப் பின்னொட்டி வரும் நான்கு நேரசை தண்பூ எனவும்,
கனிச்சீரைப் பின்னொட்டி வரும் நான்கு நேரசை நறும்பூ எனவும் பெறும்.
அதே போல்
காய்ச்சீரைப் பின்னொட்டி வரும் நான்கு நிரையசை தண்ணிழல் எனவும்,
கனிச்சீரைப் பின்னொட்டி வரும் நான்கு நிரையசை நறு நிழல் எனவும் பெறும்.
கவிதைகளில் நான்கசைச்சீர்கள் வருவது தற்போது வழக்கத்தில் இல்லை.
எனவே நான்கசைச்சீர்களைக்கண்டு மலைத்து விட வேண்டாம்.
ஆரம்பத்தில் ஈரசைச்சீர்களைக்கொண்டு எழுத முற்படலாம். பழக்கத்தில் இவை
சரளமாக வந்துவிடும்.
மீண்டும் ஒரு மீள்பார்வைக் காண்போமா?
ஓரசைச்சீர் – நேர், நிரை
ஈரசைச்சீர் – மாச்சீர், விளச்சீர்
மூவசைச்சீர் – காய்ச்சீர், கனிச்சீர்
நான்கசைச்சீர் – பூச்சீர், நிழல் சீர் ( காய்ச்சீருடன் இணைந்தால் ‘தண்’, கனிச்சீருடன் இணைந்தால் ‘நறும்’ என இணைத்துக்கூறல் வேண்டும். )
அடுத்த பாடத்தில் சீர்களைக்கொண்டு அமைக்கப்பெறும் தளைகளைப்பற்றி பார்ப்போம்.
அதற்கு முன் ஒரு சிறு கேள்வி : வரும் மொழி, நிலை மொழி என்றால் என்ன?