பெண்கள் பாதுகாப்பும் சமூகக் கோட்பாடும்

67

“இவனுகளை இழுத்து வைச்சி நசுக்கணும்” எனச் சொன்ன கணத்தில் அண்டப் பேரழகியாகத் தெரிந்தாள் உக்கிரமான அக்கிழவி.

“பொம்பிளப்பிள்ளை நடக்கிற மாதியா நடக்கிற.. பொம்பிளப் பிள்ளை உடுத்துற மாதிரியா உடுத்துற… பொம்பிளப் பிள்ள போலவா சிரிக்கிற.. ஆம்பிளங்க இருக்கிற இடத்துல அடக்க ஒடுக்கமா இருக்க மாட்டியா” என்றெல்லாம் நடக்கிறதுக்கும், உடுத்துறத்துக்கும் இருக்கிறதுக்கும் படுக்கிறதுக்கும் பெண்பிள்ளைகளுக்கு ஒழுக்க விதிகளை உருவாக்கியவள் அக்கிழவிதான்..

அதிலும் ஆண்கள் இருக்கும் சபையில், பெண்ணை அறியாமலே அவளது ஆடை சற்று விலகினால் போதும். “ஏதோ கொலைக் குற்றம் புரிந்தது போல, கற்பு எனும் வஸ்து கலைந்தது போல” தாம் தூம் என்று குதித்து அப்பெண்ணை மானபங்கப்படுத்தி விடுவதும் அக்கிழவிதான்.

அவ்வாறு தவறுதலாக விலகிய ஆடைக்குள் கண்களை நுழைக்கும் ஆணைப் பற்றி அந்தப் பெண் குறைபட்டால் “ அவன் ஆம்பள.. நீ காட்டினால் அவன் பாப்பான்.. நீதான் ஒழுக்கமா இருக்கோணும்” என ஆணுக்கு வக்காளத்து வாங்குவதும் அக்கிழவிதான்..

தமிழகத்தின் பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்புணர்வு மூலம் மனச்சித்திரவதை செய்தவர்களைக் கண்டு கொதித்து “இழுத்து வைச்சு நசுக்கணும்” என்று சொன்ன உக்கிரக் காளிக் கிழவி அக்கணத்தில் அண்டத்தின் பேரழிகயாகத் தெரிந்தாள்.

இதுவரை காலம் பெண்களின் வளர்ப்பு முறையில் மட்டும் அக்கறை கொண்ட “கிழவிகள்” ஆண்கள் வளர்ப்பு முறையில் அக்கறை கொள்ளத் துவங்கி இருப்பது பெண்கள் பாதுகாப்பு மீதான நம்பிக்கையை தோற்றுவிக்கிறது.

ஆம்.. ஆண்கள் வளர்ப்பு முறை பற்றியும் பேசாத வரை இச்சமூகத்தில் பெண்கள் பாதுகாப்பு சாத்தியமில்லை.

அவளை அறியாமல் விலகும் ஆடையைக் கண்டு அவளை வையும் அதே வேளை விலகிய ஆடைக்குள் தான் நுழைய எத்தனிக்கும் அவனைதும் வைய வேண்டும். விலகிய ஆடை கண்டால் அவ்விடத்தை விட்டு அகன்றிடுமாறு அறிவுறுத்தப்பட்டு ஆண்களை வளர்க்க வேண்டும்.

விலகிய ஆடை எவளுடையதாக இருந்தாலும் அதை சரி செய்திடல் வேணுமெனும் வளர்ப்பு இன்னும் சிறப்பானது.

பெண்களை வெறும் போகப் பொருளாகவோ காமப் பொம்மைகளகாவோ நோக்காமால் ஆண்கள் வளர்க்கப்படல் வேண்டும்.

காதலியோ, தோழியோ, தாலி கட்டிய மனைவியோ, “தொழில்” முறைப் பெண்ணோ, எவளாக இருந்தாலும் இல்லை என்று அவள் சொன்னால் “இல்லை”த்தான் என்பதை உணர்த்தி வளர்க்க வேண்டும்..

“இழுத்து வச்சு நசுக்கலை” ஆண்களுக்கு வக்காலத்து வாங்கும் “கிழவிகள்” ஆண்களுக்கு ஊட்டி வளர்க்க வேண்டும்.

எல்லாவற்றுக்கும் முதற்படியாக பெண்கள் பாதுகாப்புக்கு என்ன எல்லாம் தேவையோ அதை எல்லாம் ஆண்கள் ஒழுக்கமாக வகுத்து ஆண்களை வளர்த்தெடுக்காதவரை பெண்கள் பாதுகாப்பு ஒரு போதும் சாத்தியமில்லை என்பதை உணர்ந்து சமூக வெளியில் ஆண் ஒழுக்கமும் பேசு பொருளாக்கப்படல் வேண்டும்.

ஆக்குவோமா…? ஆகுவோமா… ?