தமிழகத்தின் பொள்ளாச்சியில் நிகழ்ந்த பெண்கள் துன்புறுத்தல் தொடர்பாக ஈழத்திலிருந்து ஒருவருடைய கண்டனங்கள் சமூக வலைகளில் பரவி வருகிறது. அவர் சொன்ன விடயங்கள், சொன்ன விதங்கள் ஏற்புடையதாக இல்லாவிட்டாலும் அவரால் குறிபிடப்பட்டுள்ள விடயம் ஒன்று கவனம் கவர்ந்தது.
ஈழத்தில் களத்திலும் பெண்கள் சமமாக நடத்தப்பட்டனர் என்றும் வன்புணர்வுக் குற்றங்கள் நிகழவில்லை என்றும் அக்காணொளியில் அவர் பெருமைப்பட்டிருந்தார். உண்மையான்.. மறுதலிக்க இயலாது எவராலும்.. ஆனால் அந்நிலையை எட்ட கடந்து வந்த பாதைகள்..
கடும் இறுக்கமான காலப்பகுதிகளிலும், பொருளாதாரத் தடை மூலம் தமிழர்களை முடக்க முயன்ற போதும், எவ்வித தொழில்நுட்ப வசதிகளும் அற்ற சூழலிலும் நடைபெறும் குற்றங்களை கெதியாகக் கண்டு பிடிக்கும் திறன் தமிழர் நிழலலரசின் காவல் துறையின் சிறப்பு.
அதிலும் பெண்கள் மீதான வன் கொடுமைகள் எனில், சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டு 24 மணி நேரத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அறமன்றில் நிறுத்தப்பட்ட சம்பவங்கள் நிழல் அரசின் காவல் துறையில் மின்னிடும் நட்சத்திரங்கள்.
அக்குற்றவாளிகளுக்குக் கொடுக்கப்படும் தண்டனைகள் மிகக் கடுமையாயனவை. மக்கள் மத்தியில் வைத்து அத்தண்டனைகள் நிறைவேற்றப்படுகையில் அதைக் கண்ணுறும் எவருக்கும் குற்றம் இழைக்கும் எண்ணம் வரவே வராது.
“இவங்களிடமிருந்து தப்ப முடியாது. இவங்கள் எப்படியாவது கண்டு பிடிச்சு விடுவாங்கள்”என்ற அச்சமும் கொடுக்கப்பட்ட தண்டனைகளின் கடுமையும் ஈழத்தில் குற்றங்கள் குறைய காரணமாயின.
இந்தப் பயத்தோடு தமிழர் நிழல் அரசின் குடிமக்கள் மனங்களில் இருந்த சமூக அக்கறையும், தங்கள் சமூகக் கடனை ஆற்றுவதில் அவர் கொண்டிருந்த பற்றும் குற்றங்கள் குறையக் காரணமாயின. இதையிட்டு பெருமையுறும் நாம் இன்றைய நிலையையிட்டு சற்றே வருத்தமுற்று சிந்திக்கவும் வேண்டும்.