ஜப்பான் நாட்டில் புகழ் பெற்றப் புத்த துறவியாக பாங்கே என்பவர் இருந்தார். அவர் மக்களுக்குத் தியானம் செய்வதைப் பற்றி அவ்வப்போது வகுப்பு நடத்தி வந்தார். இதில் கலந்து கொள்வதற்காக பலர் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்தனர்.
இப்படி வந்தவர்களில் ஒருவன் திருடன்! ஒருமுறை அவன் திருடுவதைக் கையும் களவுமாகப் பிடித்து விட்டனர். அவனை நேராகத் துறைவியிடம் அழைத்துச் சென்று இவனை உடனே இங்கிருந்து அனுப்பி விடுங்கள் என்றார்கள். ஆனால் துறவியோ இந்த நிகழ்ச்சியைச் சிறிதும் கண்டுகொள்ளவில்லை. அவனை அப்படியே விட்டு விட்டர். மீண்டும் அவன் திருட முயலும் போது பிடிபட்டான். துறவியிடம் அழைத்து வரப்பட்டான். இந்த முறையும் துறவி அவனை விட்டு விட்டார். இதைக் கண்டு மற்றவர்கள் எல்லோரும் கோபம் கொண்டனர். ஒன்று நாம் தங்க வேண்டும். இல்லையேல் அவன் தங்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். இந்தத் தகவலை ஒரு ஓலையில் எழுதி அனைவரும் கையெழுத்திட்டுத் துறவியிடம் கொடுத்து விட்டு அவருடைய பதிலுக்காகக் காத்திருத்தனர்.
அதைப் படித்துப் பார்த்த துறவி நீங்கள் அறிவுள்ளவர்கள். உங்களுக்கு நல்லது எது? கெட்டது எது? என்று தெரிந்துள்ளது. நீங்கள் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். நீங்கள் விரும்பிய யாரிடமும் படிக்கலாம். ஆனால் இவனைப் பாருங்கள். இவனுடைய நிலை பரிதாபமானது. இவனுக்கு நல்லது கெட்டது எது என்ற விபரம் இன்னும் புரியவில்லை. நான் கற்றுத்தரவில்லை என்றால் யார் இவனுக்குக் கற்றுத் தருவார்கள். நீங்கள் எல்லோரும் இங்கிருந்து போனாலும் பரவாயில்லை. நான் இவனுக்குக் கற்றுத் தருவேன் என்றார். அதனைக் கேட்ட திருடன் கண்ணிலிருந்து பொல பொல எனக் கண்ணீர் கொட்டியது. திருட்டுக் குணத்தை விட்டு விட்டு திருந்தி வாழத் துவங்கினான்.