ஆறு நாளைக்குப் பிறகு ஆமி பிடிச்ச வீட்டைப் பார்க்க அன்ரி போனா.. வேலிக்குக் கிட்டப் போய் விட்டா.. பொம்பிளப் பிள்ளையள் இருக்கினம் எண்டு ஆளை விட உசரத்துக்குக் கட்டின வேலி.. அங்கால ஆமி நிக்கிற தெரியாமல் எட்டிப் பார்த்தா..
ஒரு ஊரில ஒரு ராசா என்று கதை கேட்டு வளர்ந்த தலைமுறையிடம் அடுத்த தலைமுறைக்குச் சொல்ல இப்பிடியான சம்பவங்களும் உண்டு..
1996 ஆம் ஆண்டு ஆடி மாதம் ஆனையிறவுப் பெருந்தளத்தில் நிலை கொண்டிருந்த ஶ்ரீலங்கா இராணுவம் கிளிநொச்சி மாநகரத்தை கைப்பற்ற நகர்ந்து கொண்டிருந்தது.
அந்த ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்கு அப்போதைய பிரதி பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அனுரத்த ரத்வத்தையும் ஶ்ரீலங்கா இராணுவப் படைத்தலைமையகமும் சூட்டிய பெயர் “சத்ஜெய”ஆகும்.
சத்ஜெய எனும் சிங்களமொழிச் சொல்லின் தமிழாக்கம் “உண்மை வெற்றி” என்பது ஆகும்.
சுட்டதீவு, உமையாள்புரம், ஊரியான் ஆகிய தமிழர்தம் தொல்லூர்களில் மகிழ்வோடு மேய்ந்து கொண்டிருந்த பசுக்கள்,ஆடுகள் என கண்ணில் தென்பட்ட உயிர்களை எல்லாம் சுட்டுத்தள்ளியபடி வெறியோடு நகர்ந்தனர்.
இச்சையூட்டும் பச்சைக் கடலெனப் பரந்து விரிந்த பரந்தன் எனும் எங்கள் திருவூரின் வயல்களை இராணுவ டாங்கிகள்(Battle Tanks) உழுது அழித்துக் கொண்டு கிளிநொச்சி மாநகரையும் ஆக்கிரமித்துக் கொண்டது.
உழுதூண் விரும்பும் கிளிநொச்சி மண்ணின் பூர்விகக் குடிகளுடன் “சூரியக்கதிர்-01, சூரியக்கதிர் -02, சூரியக்கதிர் – 03″ இராணுவ நடவடிக்கைகளால் கட்டங்கட்டமாக யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்களாலும் அந்த மண் நிரம்பியிருந்த காலம் அதுவாகும்.
இறுக்கமான பொருளாதார தடைகள்(Economic embargo) மற்றும் மலேரியாத் தொற்று(Uncontrolled Malaria Infections) என பல வகையான முற்றுகைக்கு உட்பட்டிருந்த கிளிநொச்சி மண்ணில் எதிரி ஏவிய எறிகணை மற்றும் விமானக் குண்டு வீச்சுக்களல் பேரவலம் பெருக்கெடுத்தது.
கிளி மாநகரின் மத்தியிலும் நகரை அண்டிய திருவையாறு கிராமத்திலும் இட அமைவு பெற்றிருந்த எங்கள் வைத்தியசாலைகளும் இடப்பெயர்வின் அவலங்கள் அத்தனையையும் சந்தித்து அக்கராயன்,கோணாவில் பகுதியிலே இயங்கிக் கொண்டிருந்தது.
சத்ஜெய – 01,02,03 என கட்டங்கட்டமாக மேற்கொள்ளப்பட்ட படை நடவடிக்கை ஏறத்தாழ எழுபது(70) நாட்கள் நீடித்து ஈற்றில் முழுதாக அந்த அழகிய “நகரம்” பச்சைப் பேய்கள் தங்கும் “நரகம்” எனவானது.
இந்த நிலையில் இடம்பெயர்ந்த அயலூர்களுக்கு சென்ற எங்கள் மக்கள் அடிக்கடி கிளிநொச்சி நகரை அண்டிய பகுதியில் உள்ள தங்கள் வீடுகளைப் பார்க்க வருவதுண்டு.
அன்றாடம் உழைத்து வாழும் மக்களுக்கு கைவிடப்பட்ட வளவுகளில் கிடைக்கும் தேங்காய், மாங்காய், பலாக்காய், முருக்கங்காய் போன்ற காய்கறி பழவகைகள் ஒரு நாள் வாழ்க்கையை ஓட்டக் கூடியதாக இருப்பதால் ஆபத்து எனத் தெரிந்தும் அங்கு வருவார்கள்.
ஆதலால்,
நாங்கள் எவ்வளவு ஆலோசனை சொல்லியும் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாடுவோம். சில வேளைகளில் நாங்களும் சேர்ந்து அவர்களின் வளவில் கிடைக்கும் விளைபொருட்களை சேகரித்து கொடுப்பதன் மூலம் வேகமாய் திருப்பி அனுப்பி வைப்போம்.
நாங்கள் தலைகிழாக நின்றாலும் குண்டு மழைக்கு எங்களால் குடை பிடிக்க முடியாது.
வீடுகள் வளவுகளை பார்வையிட வந்த பொதுமக்கள் படுகாயமடைந்த, படுகொலை செய்யப்பட்ட, கைது செய்யப்பட்ட பல துயரங்கள் நிகழந்த கொடும் காலமது.
எமது உயிரிலும் மேலாக நாங்கள் நேசித்த மக்கள் படுகாயம் அடைந்த பொழுதெல்லாம் அவர்களுக்கான ஆரம்பகட்ட சிகிச்சை அளித்து அக்கராயன் வைத்தியசாலைக்கு வாகனத்தில் வாரியே அணைத்து எடுத்துச் செல்வோம்.
எமது மக்களின் உன்னத உயிர் காத்த என் வாழ்விலும் எனைப் போன்ற களமுனை மருத்துவச் செயற்பாட்டாளர்களின் வாழ்வில்
பெறுமதி மிக்கவை ஆகும்.
தமிழினத்தை பூண்டோடு அழித்தொழிக்க இசுரவேல்,உக்ரைன் போன்ற நாடுகளில் இருந்து ஶ்ரீலங்கா அரசு பெற்றுக் கொண்ட இயந்திர வல்லூறுகள் எமைக் கலைத்துக் கலைத்து தாக்குவதும் உண்டு
அக் கணப் பொழுதுகளில் சாதுரியமாகவும் மெத்தப்பக்குவமாகவும் வாகன ஓட்டிய ஓட்டுனர்களுக்கு சிரம் தாழ்த்தி எந்தன் நன்றிதனைக் கூறுவதுடன் எந்தன் இரத்த சாட்சியத்தை அடுத்த பதிவில் தொடர்வேன்!