நாளொரு குறள் – 43

நாள் : 43
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : இல்வாழ்க்கை
செய்யுள் :3

தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

இல்வாழ்வோன் எந்த வரிசையில் எப்படி பேண வேண்டும்.

தென்புலத்தார் – முன்னோர்
தெய்வம் – இறைவன்
விருந்து – விருந்தினர்
ஒக்கல் – உறவினர்கள், கூட வாழ்பவர்கள்
தான்

இதுதான் இல்லறத்தான் பேண வேண்டிய வரிசை.

ஒற்றை வாழைப்பழம்தான் இன்று கிடைத்தது யாருக்கு கொடுக்க?

பெற்றோருக்குக் கொடு. உன் வீட்டு முதியோருக்கு கொடு என்கிறார்.

இரண்டு வாழைப் பழம் கிடைத்தது என்றால்

முதல் பழத்தை பெற்றோருக்கு கொடு. இரண்டாம் பழத்தை இறைவனுக்குக் கொடு என்கிறார். இறைவன் எந்த காலத்தில் வாழைப்பழம் சாப்பிட்டான் என்று கேட்பவர்கள் புரிந்து கொள்ளவேண்டியது பசித்தோனுக்கு தானமாய் கொடுத்து விடு என்று. இதை பின்னொரு செய்யுளில் வள்ளுவர் சொல்லுவார்.

மூன்றாவது பழம் வரும் விருந்தினனுக்கு. விருந்தினர் என்போர் மாமன், மச்சான், பெரியப்பா சித்தப்பா இல்லை. உறவின்றி உன்னை நாடி வந்தோர் விருந்தினர் ஆவர்.

நான்காவது பழம் உன்னுடன் ஒருங்கு சேர்ந்து வாழ்பவர்கள், உறவினர்கள், நண்பர்கள், குழந்தைகள் ஆகியோருக்கு.

இத்தனை பேர் பசியைத் தீர்த்த பிறகு தான் உண்ண வேண்டும்.

அதுதான் இல்ல அறம். இல்லை என்றால் இல்லை அறம்.

ஆக மூத்தவர்களை பேணுதல் முதற்கடன். தன்னைக் காத்துக் கொள்ளுதல் கடைசிக் கடன்.

இன்று அப்படியே தலை கீழாய் மாறி இருந்தால் கூட பரவாயில்லை.

இதில் விருந்தினருக்கு ஒன்றுமே கொடுப்பதில்லை. ஏனென்றால் முன்பின் தெரியாதவரை வீட்டில் சேர்க்க முடியலை.
தெய்வத்திற்கு கொடுப்பது என்பது தானம் இல்லை.. இலஞ்சம் அல்லது பங்கு வியாபாரம்.
முன்னோருக்கு கடைசி இடம்.

இப்படி மாறிக் கிடக்கும் சமுதாயத்தில் இல்லறத்தான் யாரைப் பேணவேண்டும் என்ற வரிசை அறிந்து கொள்ள வேண்டியது.

இப்பொழுது முதலிரண்டு செய்யுளில் வருவோர் எங்கு இதில் வருகிறார்கள் என்று பார்க்கலாம்.

இயலாதோர், வறியவர் எல்லாம் தெய்வத்தின் வரிசையிலும். மூவகை இயல்பினர் விருந்தினர் வரிசையிலும் வருகிறார்கள்.

இப்போது கோர்வை சரியாக அமைந்து உங்களுக்குத் தெளிவாகப் புரியும்.

முதலில் பெற்றவர்களைப் பேண்.
அடுத்து வறியவர்கள், இயலாதவர்கள், மரணப்படுக்கையில் உள்ளவரைப் பேண்.
பிரம்மச்சாரிகள், சன்னியாசிகள், அறியாதோர் ஆகியோரைப் பேண்.
உறவினர், நண்பர், குடும்பத்தினரைப் பேண்.
கடைசியாக உன்னையும் காப்பாற்றிக் கொள்.

இதுதான் வள்ளுவர் காட்டும் இல்லற வழி.