அதிக இரசிகர்களைக் கொண்ட விளையாட்டான உதைபந்தாட்டம், பண்டைய நாகரிகங்களில் ஆடப்பட்டிருந்தாலும் நவீன உதைபந்தாட்டத்தின் தாயகம் இங்கிலாந்து ஆகும்.
1872 இல் இங்கிலாந்துக்கும் ஸ்கொட்லாந்துக்கும் இடையில் முதலாவது உதைபந்தாட்டப் போட்டி நடைபெற்றது.
1900 ஆண்டளவில் இதர நாடுகளில் உதைபந்தாட்டம் புக நாடுகளில் சம்மேளனங்கள் உருவாகின.
1904 ஆம் ஆண்டு பாரிசு நகரில் பிரான்சுக்கும் பெல்ஜியத்துக்கும் இடையிலான சர்வதேசப் போட்டி நடந்தது. இதுவே இங்கிலாந்துக்கு வெளியே நடந்த முதலாவது அதிகாரபூர்வமான போட்டி ஆகும்.
இப்போட்டிக்குக் கிடைத்த வரவேற்பு அடங்கலான பட்டறிவைக் கொண்டு பாரிசு நகரில் பிரான்ஸ், பெல்ஜியம், டென்மார்க், நெதர்லாந்து, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து சர்வதேச உதைபந்தாட்டச் சம்மேளனத்தை உருவாக்கினர்.
உதைபந்தாட்டத்தின் போது ஏற்படக்கூடிய உடல், உள பாதிப்புகளையும், வீரர்களின் ஆக்ரோசமான விளையாட்டு அணுகுமுறையையும் கருத்தில் கொண்டு, குழுமனப்பாங்கையும் நட்பாடலையும் பேணும் பொருட்டு இறுக்கமான பொது விதிகள் அதன் பின்னரே உருவாக்கப்பட்டன.
ஆனாலும், அவ்விதிகளைக் கொண்டே “விளையாடி” வென்றவர்களும் உண்டு. அவ்வாறான நேரங்களில் தோல்வியுற்றது சகிப்புத் தன்மையே.
நிற்க, 1928ம் ஆண்டு சர்வதேச உதைபந்தாட்டச் சம்மேளனத்தின் (FIFA) தலைவராக இருந்தவரான ஜூல்ஸ் ரிமெட், சர்வதேச அளவில் ஒரு தொடரை நடத்த திட்டமிட்டார்.
இதையடுத்து விறுவிறுவனெ திட்டங்கள் தீட்டப்பட்டு 1930ம் ஆண்டு முதலாவது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி உருகுவே நாட்டில் நடைபெற்றது. இந்த தொடரில் மொத்தம் 13 அணிகள் மட்டுமே கலந்து கொண்டன.
முதலாவது உலகக் கிண்ணப் போட்டி நடந்த நாடு என்ற வரலாற்றுப் பெருமையைப் பெற்ற உருகுவேயே முதலாவது உலகக் கிண்ணத்தை வென்ற சிறப்பையும் தன்னக்கதே கொண்டுள்ளது.
இந்த ஆண்டு ரஷ்யா உலகக் கிண்ணப் போட்டியை நடத்துகிறது. இன்னும் மூன்றரை மணி நேரத்தில் ரஷ்யாவும் சௌதியும் மோதுகின்றன.