மரத்தில் ஏறிய தனியன் பண்டி!

வேட்டைக் கலாச்சாரத்தில் இருந்து
வேளாண்மை கலாச்சாரத்திற்கு வந்தவர்கள் தான் நாம் எல்லோருமே!

என்னதான் ஜீவகாருண்ணியம் எங்களிடம் இருந்தாலும் வேட்டை என வந்தால் நாங்கள் வேங்கைகளேதான்!

“கொன்றால் பாவம் தின்றால் போச்சு” எனும் வேட்டையின் வேததத்துவத்தை உச்சரித்தவாறே வேகங்கொள்ளும் குணம் எங்கள் உதிரத்தில் உள்ளது!

தாய் வீடு செல்லும் ஒரு மகவை போல குதூகலித்து கொண்டு நாமும் அடிக்கடி வேட்டைக்கு சென்றதுண்டு.

அன்று போலவே அச்சம் என்பது அணு
அளவும் இன்றி வேட்டைக்கு செல்லும் நிலைமைகள் இன்று இலாவிட்டாலும் வேட்டை கதைகளை கேட்பதில் ஆர்வம் காட்டியே வருகின்றோம்.

எம் முந்தையர் இயல்புகள் எங்களது மரபணு வழியாக பக்குவமாய் கடத்தபடுவதால் வேட்டை பற்றிய கதைகளை அறிவதிலும் கதைப்பதிலும் மாந்தருக்கு அலாதிப்பிரியம் உண்டு.

வேறு விலங்குகளால் நாங்கள் வேட்டையாடப்படாமல் நாம் விரும்பி உண்ணும் விலங்குகளை வேட்டையாடுவது என்பது அதிக உடல்வலுவும் உளவுரணும் கூடவே நுண்ணறிவும் கலந்த ஒரு கலை ஆகும்.

வேட்டையில் பல விதங்கள் உண்டு.

(01)காடுகலைத்து வேட்டையாடுதல்

(02)பரண் அமைத்து
தங்கு வேட்டையாடுதல்

(03)இரவு வேட்டை

என இன்னும் பல வகையான வேட்டைகளை யான் கேள்விப்பட்டிருக்கின்றேன்.

அந்த வகைகளில் ஒரு வகை வேட்டைதான் இது.

இலை குழைகளின் மறைவை சரியாக பயன்படுத்தி மரத்தில் பரண் அமைத்து இரவு பன்றி வேட்டைக்காக காத்திருந்தார் எந்தன் நண்பர்.

இரவிரவாக விழித்த வண்ணம் அந்த நண்பன் ஒளித்திருந்த அந்த மரத்தடிக்கோ அல்லது அண்மையிலோ
அன்று ஒரு மிருகமும் வரவில்லை.

மனித வாடையை காட்டு மிருகங்கள் தெளிவாக முகர்ந்து கொள்ளும் மோப்ப சக்தியை அதிகமாய் கொண்டவை
ஆதலினால் வேட்டைக்கனவும் நனவாகவில்லை.

விடிந்தவுடன் சோர்ந்து வாடிய முகத்துடன் அந்த உயர்ந்த மரத்தின் பரணிலிருந்து பக்குவமாக இறங்கி வருவார்.

அம்புலிமாமா கதையில் வரும் “சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போலவே அடுத்த நாளும் அந்த மரத்தின் பரணில் தவம் இருந்தார்.

பாவம் அடுத்த நாள் மட்டுமல்ல அடுத்தடுத்து வந்த அத்தனை
நாட்களும் அதே நிலைதான்.

அவர் சோரவில்லை ஒரு கிழமையாகியும் அந்த மரத்தடிச் சேற்றுக்கு ஒரு பன்றிதானும் வரவில்லை.

அருவிகள் மற்றும் நீர்சுனைகள் கொண்ட கொண்டதால் அது நுளம்புகளும் அதிகமுள்ள அடர்ந்த அடவி(காடு)யாகவே காணப்பட்டது .

இரவில் நுளம்புக்கடிக்கு (Mosquito Bite) நுளம்புதிரி கொளுத்த முடியாது. மனிதரைவிட மணநுகர்ச்சி பலமடங்கு கொண்ட விலங்குகள் அந்த மணத்தில் தமக்கான ஆபத்தினை புரிந்து கொண்டுவிடும் தன்மையை தாராளமாய் கொண்டவை ஆகும்.

ஏன் இரவில் நுளம்புக்கடித்தால் கூட பலமாக அடிக்க கூட முடியாத ஒரு காத்திருப்பில் ஒரு மாதம் முழுமையாகவே கழிந்தது.

ஏமாற்றம் மட்டுமே மிச்சம் ஆனாலும் அவர் ஓயவில்லை.

பன்றி (பண்டி) வேட்டைகாய் ஓய்வொழிச்சல் இல்லாமல் முயற்சி செய்வதை பார்த்த எந்தனது இன்னொரு நண்பன் அவரை கேலி செய்தான்.

“என்ன மரத்திலை ஏறி இறங்கும் பயிற்சி ஏதுமோ?” அல்லது “இரவு நேர உடற்பயிற்சியா?” எனவும் கலாய்த்தான்.

வேட்டையில் பெரும் அனுபவம் கொண்ட அந்த நண்பரோ வேட்டையில் இவை எல்லாம் சகஜம் என பக்குவமாய் பதில் சொன்னார்.

கலாய்க்கும் இயல்புடைய எனது மற்றைய நண்பனோ அவரை விடுவதாய் இல்லை.தொடர்ந்தும்
கலைத்து கலைத்து கலாய்த்தே வந்தான்.

வேட்டையில் வேட்கையுடைய நண்பரோ ஈற்றில் தொல்லை தாங்க முடியாத கட்டத்தை எட்டினார்.

தினமும் கலாய்க்கும் அந்த நண்பனுக்கு வேட்டையில் உண்டாகும் கடினங்கள் அனுபங்களை கற்றுக் கொடுக்க நினைத்தார்.

வேட்டையின் அனுபவத்தையும் மனப்பக்குவத்தையும் செயல்முறையூடாக கற்பிக்கும் முகமாக அடுத்த நாள் தன்னுடன் வேட்டைக்கு வருமாறு கலாய்க்குன் நண்பரை அழைத்தார்.

ஆர்வக் கோளாறு காரணமாக வேட்டையில் முன் அனுபவம் ஏதுமில்லாத கலாய்க்கும் நண்பரும் அதற்கு சம்மதித்தார். மரத்தில் ஏறத்தெரியாத நண்பருக்கு பகலில் மரம் ஏறி இறங்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டது.

இரவு நேரத்தில் மரத்தின் பரணில் சிறுநீர் கழிக்க ஒரு பிளாஷ்ரிக் போத்தலையும் எடுத்துக் கொண்டார்.

அன்று இரவு வேட்டைக்காக மாலையிலேயே வேட்டையில் வேட்கை கொண்ட நண்பருடம் கலாய்க்கும் நண்பரும் இணைந்து மரத்தில் ஏறினார்கள்.

இருவருமே இப்போது கருத்தொருமித்து முழுமையான மன ஈடுப்பாட்டுடன் பண்டி வேட்டைக்கு தயாரானார்கள்.

எங்களில் இருவர் வேட்டையில் ஈடுபட்டிருப்பதால் நாளைக்கு பண்டி இறைச்சி காய்ச்சி எமது விழுப்புண் அடைந்த வீரர்களுக்கும் கொடுத்து மகிழ்ந்து உண்ணும் கற்பனையும் கதையுமாக நாங்களும் படுக்கைக்கு சென்றுவிட்டோம்.

ஒரு மாதம் சரியான நித்திரை இல்லாத வேட்டைக்கார நண்பருக்கு இன்று கொஞ்சமாவது நித்திரை செய்யலாம் என ஒரு வகையான மனமகிழ்வும் ஆறுதலும் ஏற்பட்டது.

உற்சாகம் ததும்ப பரணில் இருந்த நண்பரிடம் வேட்டைத் துப்பாக்கியை கொடுத்துவிட்டு நித்திரையானார்.

அவர் நீண்ட நாள் எதிர்பார்த்தது போலவே நள்ளிரவு கழிந்த நிலையில் பன்றி மூசும் சத்தம் கேட்டது.

வேட்டைக்கார நண்பர் வேட்டையில் வேட்கையுடையவர் அல்லவா முழுமையாக விழித்துக் கொண்டார்.

எழுந்தவுடன் மரத்தடியைப் பார்த்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

காரணம் பண்டி பலமாக மூசும் சத்தம் மரத்தடியில் கேட்கவில்லை.

மாறாக மரத்தின் மேலேயே கேட்டது.

தனியன் பண்டி ஏதும் வந்திருந்தால் இவர்களை தாக்கவும் கூடும் என்ற சிறு அச்சமும் வேட்டைக்கார நண்பருக்கு மேலிடத்து.

கண்களை கசக்கியபடி கூர்ந்து பார்த்தார் அவர் பக்கத்திலேயே அந்த மூசும் சத்தம் கேட்பதை உணர்ந்து கொண்ட போது அதிர்ந்தே போனார்!

“பன்றி மரத்தில் ஏறுமா!?” என உங்களை போலவே அவரும் அதிர்ச்சியில் முதலில் உறைந்தாலும் மூச்சை சற்று ஆழமாக இழுத்துவிட்டவாறே தன்னை சமநிலைப்படுத்தினார்.

நித்திரை தூக்கம் கலைந்து மேலும் நிதானமாவர் “தனது நண்பன் ஆழ்ந்த நித்திரைக்குச் சென்று குறட்டைவிடுகின்றார் என்பதை பின்னரே புரிந்து கொண்டார். 🤣

1 COMMENT

  1. தமிழர்தம் வழிப்பாடுகளோடும் பன்னெடுங்காலமாக இந்த வேட்டை கலந்துள்ளதை நாங்கள் காணமுடியும்.

    ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் வேட்டைத்திருவிழா மிகவும்
    சிறப்புற இடம்பெறுவது என்பது வேட்டைக்கும் எமக்குமான காதலையும் ஊடலையும் இயம்பி நிற்கின்றது.

Comments are closed.