இருள் அகற்றிட ஒளிர்ந்த “அருள்” தீபம்.

“இருள்” அகற்றிட ஒளிர்ந்த “அருள்” எனும் தீபம் ஒரு போதும் அணையாது!

கொழும்பு நகரில் அவதாரம் எடுத்து எங்கள் வவுனியாவிலும் முல்லைத்தீவிலும் வளர்ந்து ஆழ வாழ்ந்து வாலிப பருவம் எய்தி தன்னினத்திற்காய் வலி சுமந்த ஓர் அற்புதமான மாந்தனின் வரலாறு என்பது ஒரு பெருங்காப்பியம் ஆகும்.

அந்த பெருங்காப்பியம் அன்பு, கருணை, பாசம், சகோதரத்துவம் எனும் ஆரம்ப அத்தியாயங்களைக் கொண்டது.

அருளாளன் எனும் எங்கள் காப்பியம் பழந்தமிழரின் வீரம், மானம், காதல் எனும் இடை அத்தியாங்களையும் தன்னகத்தே கொண்டது.

அருளாள காப்பியத்தின் கடை அத்தியாயம் இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய மனிதப் பேரவலத்தின் நேரடி சாட்சியத்தையும், அதனால் உண்டான வலிகளையும் கொண்டது.

பெறுமதி மிக்க இந்த வீரகாப்பியத்திற்கு சில பக்கங்களை எழுதும் ஒரு பெரும் பொறுப்பினை காலம் என் கரங்களுக்கு தந்துள்ளதால் அதன் ஒரு பக்கத்தை குழந்தைப் பருவம் தாண்டாத என் மொழியறிவு கொண்டு கீழே பதிவு செய்திட விழைகின்றேன்.

தமிழீழ விடுதலைப் போரில் குதித்து படையப் பயிற்சிகளையும் நிறைவாய் நிறைவு செய்தவரிடம் தமிழர்தம் விடுதலை அமைப்பு கொடுத்த பணி அரசியல் பணி ஆகும்.

பிரசவவிடுதி, முன்பள்ளி முதல் சுடுகாடு அல்லது இடுகாடு வரையான மாந்தரின் அந்திமகாலம் வரையான அத்தனை சேவைகளையும் தனது மக்களுக்காய் நல்கியதால் உண்டான ஒரு பெரிய முதிர்ச்சி (Matured stage) நிலையுடன் மருத்துவம் படிக்க யாழ்ப்பாணம் வந்தவரை யான் 1993 ஆம் ஆண்டில் கண்டடைந்தேன்.

மருத்துவமானி சத்திரசிகிச்சைமானி (MBBS) கற்கையை நாங்கள்
தமிழீழ மருத்துவ கல்லூரியில் கற்கத் தொடங்கிய ஆரம்ப காலத்தில் அதீத ஆர்வமுடன் தனது கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.

மருத்துவ கல்வியின் ஆரம்ப
காலத்திலும் சரி இறுதியாண்டிலும் சரி எதையும் இலகுவாக விளங்கி கொள்ளும் ஆற்றல் கொண்டவராய் விளங்கினார்.

நீண்ட பெரிய பாடப் பரப்பினை (Curriculum) கொண்ட எங்கள் மருத்துவ கல்வியில் பல விடையங்களை மீண்டும் மீண்டும் எழுதியே மனதில் இருத்த வேண்டியவையாக இருக்கும்.

எம்மில் பலரும் இரவிரவாக படித்து பின்னர் எழுதி எழுதியே நினைவிருத்தும் விடையங்களை எல்லாம் மிகச் சாதாரணமாக படித்து முடித்தவர்.

விரிவுரைகள் நடைபெறும் நேரங்களில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் சொல்வதை நேடியாக செவிவழி மனதில் இருத்தி பரீட்சை நேரங்களில் வேகமாக நினைவு மீட்டி அற்புதமாக பரீட்சைகளை எழுதி சிறப்பு சித்திகளை பெற்றுக் கொள்ளும் திறனை கொண்டிருந்தார்.

“செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்”

எனும் பொய்யாமொழி புலவரின் பொய்யா மொழி இவரிடம் பொய்க்காதிருந்தது.

பெருத்த செவி கொண்டிருந்த இவரிடம் பெருத்த மனமும் பெருந்தன்மையும் இயல்பாய் பதின்ம காலத்திலேயே குடிகொண்டிருந்தது.

முழுமையான ஐந்தாண்டுகள் கொண்ட எம்.பி.பி.எஷ் பட்டப்படிப்பினை போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் இடையறாது தொடர்ச்சியாக படிக்கும் வாய்ப்பு தமிழீழ மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கிடைக்கவில்லை.

விரிவுரைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே இடையில் படிப்பினை நிறுத்திவிட்டு களங்களில் களமருத்துவ பணிகளை செய்யும் பொறுப்பும் எங்களின் தோள்களில் இருந்தது.

படித்து படித்துக் கொண்டே களங்களில் பணி செய்வதை எமக்கான நல்ல வாய்ப்பாக மனத்திருப்தியுடனும் மகிழ்ச்சியுடனும் செய்து முடித்திருந்தோம்.

களமருத்துவம் என்பது பூந்தோட்டத்தில் மலர் பறிப்பது போன்ற செயல் அல்ல மாறாக பூகம்பத்திடை பூப்பறிப்பது போன்றது.

சகபோராளி மாணவர்கள் களத்திடை
விழுப்புண் அடைந்திருக்கின்றார்கள் அதன் பின்னரும் களத்திடை பணி செய்து வீரச்சாவும் அடைந்திருக்கின்றார்கள்.

அவ்வாறு எம் சக மாணவர்கள் வீரச்சாவு அடைந்தால் மீண்டும் கல்லூரிக்கு திரும்பி படிக்கும் மனநிலை அறவே இருக்காது. தொடர்ந்தும் களமுனைகளில் தங்கிவிடவே மனம் ஏக்கம் கொள்வதுண்டு.

சகதோழரின் உயிரை எடுத்தவனை நாம் எமது இன்னுயிரிலும் மேலாய் நேசித்த மக்களை ஈவிரக்கம் இன்றி கொன்றவனை தண்டிக்கவே வாலிப மிடுக்கில் நாம் எல்லோரும் முயன்று கொண்டிருப்போம்.

ஒரு கூட்டு பறவைகளாய் கூடி வாழ்ந்த தோழர்களின் இழப்பால் துவண்டு கொண்டிருக்கும் காலகட்டத்தில் மனதை சமநிலைப்படுத்தி படிக்கவும் மேலும் கருமம் ஆற்றவும் துணை நின்றவர்தான் அருள் எனும் அருளாளன்.

உலகிலேயே மிக இறுக்கமான
கட்டுக்கோப்பான இயக்கத்தின் உறுப்பினர்களாக நாங்கள் வாழ்ந்திருந்தாலும் சாதாரண மானுட உணர்களுக்கு உட்பட்டு வாழ்ந்த காலங்களும் உண்டு.

காலத்தால் அழியாத கானங்களை பெருங்குரலெடுத்து இசையோடு பாடும் பழக்கமும் எங்கள் நண்பரோடு கூடிப் பிறந்திருந்தது.

கருத்துச் செறிவும் இலக்கிய ஆழமும் கொண்ட இடைக்கால மற்றும் புதிய பாடல்களை விரும்பிக் கேட்கும் பழக்கமும் நண்பரிடம் காணப்பட்ட எனக்கு மிகவும் பிடித்த அம்சங்கள் ஆகும்.

பண்ணோடு அவர் விரும்பி பாடும் பாடல்கள் பல உண்டு.அந்த அரும்பெரும் பாடல்களில் காதல் மன்னன் ஜெமினி கணேசன் நடித்த திரைப்படத்தில் இடம்பிடித்த பாடல்களும் உண்டெனவே உண்டு.

ஒரு முறை தனக்கே உரித்தான மிடுக்குடன் பலமாக செருமிட்டு
A.M.ராஜா எனும் பெருத்த ஆளுமையின் குரலை இலாவகமாய் தன்வயப்படுத்திக் கொள்வார் எங்கள் அருளாளன்.

ஆம்,

பாட்டு பாடவா பார்த்து பேசவா
பாடம் சொல்லவா பறந்து செல்லவா
பால் நிலாவை போல வந்த பாவை அல்லவா
நான் பாதை தேடி ஓடி வந்த காளை அல்லவா!”….

எனும் பாடலை அங்க அசைவுகளுடன் அருள் எனும் எங்கள் மருத்துவர் பாடும் அழகு கண்களுக்குள் இன்றும் வாழ்கின்றது.

நான்கு பிள்ளைகளை கொண்ட ஒரு நல்ல குடும்பத்தின் தலைமகனாய் பிறந்த அருள் எனும் நன்மாந்தனில் அவரது ஆளுமை மிக்க தந்தையால் ஊட்டப்பட்ட நிறைந்த தலைமைத்துவ பண்பு(Leadership)இருந்தது.

ஆட்லெறி, அஞ்சிஞ்சி எறிகணைகளுடன் ஆயிரம் கிலோ விமான குண்டுகளும் ஆர்ப்பரித்த வியன் களங்கள் எங்கும் நித்தம் நித்தம் நிதானமாய் மகத்தான மருத்துவபணி செய்த செங்களச் செம்மல்களில் நண்பர் அருள் தனித்துவம் கொண்டவர்.

வட தமிழீழம் எங்கும் நடைபெற்ற அனேக சமர்களில் பங்கெடுத்த ஒரு போராளி மருத்துவர்.

அஃதே,

தென் தமிழீழத்திலும் தன் பொற்தடம் பதித்து சேவை செய்தவர்.

கொடிய போரினால் ஏலவே சொல்லொண இன்னல்களை அனுபவித்த அம்பாறை மாவட்ட தமிழ்பேசும் மக்களுக்கு ஆழிப்பேரலை காலத்தில் மருத்துவ சேவை ஆற்றியவர்.

அந்தக் காலகட்டத்தில் இயற்கையின் சீற்றத்தினால் அழகிய மாங்கனித்தீவின் ஒட்டுமொத்த மாந்தரினம் அல்லலுற்ற போது சிங்கள மக்களையும் தனது அன்புக் கரங்களால் தொட்டு சிகிச்சை செய்தவர்.

Our loving batch mate Dr.Arul is an excellent story teller too!

“அறம்”தனை காத்த எங்கள் அருளாளன் நல்ல சுவையான கதைகளை சொல்லும் “திறம்”தனையும் பெற்றவர்.

அவர் கதை சொல்ல தொடங்கினால் நாங்கள் எல்லோரும் சின்னஞ் சிறு குழந்தைகளாகி அருகிருந்து சுவாரசியமாக கேட்டுக் கொண்டேயிருப்போம்.

அடர் அடவிகளிலும் குளிர் அருவிகளிலும் அவர் அடைந்த அனுபவங்களை அங்கதச் சுவையுடன் சொல்லும் போது பல நாங்கள் நேரம் போவதே தெரியாமல் கேட்டு இன்றும்
இளையோருக்கும் எங்கள் பிள்ளைகளுக்கும் சொல்வதுண்டு.

தனது நீண்ட நாள் வேட்டை அனுபவங்களை எம்மோடு பகிரும் போது ஒரு நாள் இராஜ நாகத்தின்(King cobra 🐍) கதை சொன்னார்.

ஒரு அளவான உயரமுடைய மரத்தின் உச்சிக்கு மின்சூழ்(Torch)வெளிச்சம் பாய்ச்சப்பட்ட போது அங்கே ஒரு பாம்பு படமெடுத்தபடி இருந்துள்ளது.

அச்சம் என்பது கொஞ்சம் கூட இல்லாத அந்த வாலிப வயதில் குறித்த மரத்தின் அடியில் சென்று பாம்பினை நெருங்கிப் பார்க்க முற்பட்ட போது மரத்தின் அடிவரை அதே பாம்பின் வால் நீண்டிருப்பதை வியப்பு மேலிட பார்த்திருக்கின்றார்.

கனதியான அந்த காட்டு அனுபவத்தினை தென்னிலங்கையில் வாழ்ந்த அல்லது வாடிய நாட்களில் ஒரு முறை எங்களுக்கு சொன்னார்.

ஆம்,

ஓர் இராச நாகம் ஏறத்தாழ 20 – 22 அடிகள் வரை வளரக்கூடியது. உலகின் மிக நீளமான நச்சுப் பாம்பினை எங்கள் நாட்டில் கண்டவர்கள் மிக குறைவானோரே ஆகும்.

அனுமானங்கள் இன்றி அனுபவங்களை சொல்லும் அவரது கதைகளை தனியாக தொகுத்தால் அதையே ஒரு பெரும் பொத்தகமாக எழுத முடியும்!

நல்ல நண்பன் வேண்டுமென நமனும் எண்ணியதால் எங்கள் நண்பரை உடலால் பறித்துக் கொண்டான்.

ஆனாலும் பெருந்தன்மையினதும் பெருத்த திறமைகளதும் இருப்பிடமாய் வாழ்ந்து எமக்கு வழிகாட்டிய நண்பர் எங்கள் தமிழினத்தின் தவப்புதல்வனாக எல்லோர் மனங்களில் இனியும் வாழ்வார்!