வயவையூரில் வாழ்ந்த சிறுபராயத்தில் பொங்கல் என்றால் வெடியும், தீபாவளி என்றால் வாழ்த்து மடலும் ஞாபகத்துக்கு வருவது போல் சித்திரை வருடப்பிறப்பு அன்று கைவிஷேடமும் கோவில்களில் நடக்கும் சிறப்புப் பூசைகளும் நினைவுக்கு வரும்.
விடியல் காலையில் எழுந்து, முழுக்கொன்று போட்டு விட்டு, வீட்டில் என்னதான் கஷ்டம் இருந்தாலும் வாங்கிய புது உடுப்பைப் போட்டுக் கொண்டு, பால் ரொட்டி, முறுக்கு, பயிற்றம் பனியாரம் என நாவூற வைக்கும் பலகாரங்களை தின்னலாம் என்று நினைத்தால் கோவிலுக்குப் படைத்த பிறகுதான் சாப்பிடலாம் என்பார்கள்.
பலகாரக்கதையை சொல்ல வெளிக்கிட்டால் பொழுது போறதே தெரியாமல் சொல்லிக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இருக்கலாம்.
ஒன்று இரண்டு கிழமைக்கு முன்னமே அரிசியை ஊற வைச்சு, உரலில இடிச்சு மாவாக்கி, பலகாரச் சூட்டுக்கு அச்சாரம் போடப்படும். மாவிடிக்கும் போது ஒன்று இரண்டு குடும்பம் சேர்ந்து ஒருத்தருக்கொருவர் உதவியாக இடிப்பதும் உண்டு. அப்படி இடிக்கும் போது, சிறு சண்டை சச்சரவுகள் இருந்த குடும்பங்களுக்குள் இருந்த கோவங்கள் உரலிடியில அலறி அடித்து ஓடிவிடும்.
பிறகு என்ன நடக்கும் தெரியுமோ.. நாசிக்குள் புகுந்து தொண்டைக்குள்ளால் போய் குடலை சுரண்டி இழுக்கும் மணத்தோடு பயறு வறுப்பினம். அப்பிடி பயிறு வறுக்கும் போது வேறு வீட்டு விடுப்புகளும் சேர்ந்து வறுபடும்.
இப்படி இடித்ததாலும் வறுத்ததாலும் ஊரே மணக்க தொடங்க புதுவருட கொண்டாட்டம் களை கொள்ளும். இன்றைக்கு என் வீட்டில்; நாளைக்கு உன் வீட்டில்; நாளாண்டைக்குப் பின் வீட்டில்; என்று அட்டவணை போட்டு பலகாரச் சூடு நடக்கும்.
இப்படி எத்தனை வீட்டில பலகாரச் சூடு நடந்தாலும், எல்லா வீட்டு பலகார மணமும் குடலை விராண்டினாலும் ஒரு சின்னக் கடிப் பலகாரம் கூட ஒருத்தரும் தரமாட்டினம். எல்லாரும் ஏமாந்த நேரம் பார்த்து ஒரு பலகார்த்தை களவாகத் தின்னப் போனால் பல கரங்கள் சேர்ந்து அதை பறிச்சு விடுவினம். கேட்டால் சாமிக்குப் படைச்சாப் பிறகுதான் ஆசாமிகள் சாப்பிட வேண்டும் என்பினம்.
கண்ணுக்கு முன்னால மணக்க மணக்க பலகாரத்தை வைச்சிட்டு, சாப்பிட விடாமல் கட்டிப் போட்டாலும், எந்தப் பெரிய சண்டியனாக இருந்தாலும், ரோசக்காரனாக இருந்தாலும், அந்தப் பலகாரத்தை தின்னாமல் விட்டதில்லை.
பலகாரம் தின்ன வேண்டும் என்றே கோவிலில் நடக்கும் விஷேட பூசைக்கு காத்திருப்போர் பட்டியல் வெகு நீளம். விஷேட பூசைகளில் நிற்கும் வரிசையின் நீளத்தைக் கண்டால் தெரியும் ஊருல சுட்ட பலகாரத்தின் ருசி.
பகிடிக்காக இதை சொன்னாலும் பக்தி மேலிட பிள்ளையார் கோவிலில கொஞ்சப் பேரும், கண்ணகி அம்மனில கொஞ்சப் பேரும் என குறிச்சி தோறும் குல தெய்வங்களுக்குப் பூசை செய்து படைச்ச அடுத்த நிமிடம் நறுக் நொறுக் தான்.. அதில் இருக்கும் அலாதி சுகம் எல்லாம் எதிலயும் கிடைக்காது.
அந்த சுகத்தை திரும்பவும் நாங்கள் அனுபவிக்க வேண்டும் என்றால், எங்கள் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கு அந்த அனுபவத்தை நாங்கள் குடுக்க வேண்டும் என்றால் எங்கள் வயவையூர்க் கோவில்கள் எங்களுக்கு வேண்டும்.
எங்கள் கோவிலை, எங்கள் சாமிகளை கும்பிட விடும் நாட்களில் எல்லா வயவர்களும் ஏலுமானவரை ஒன்றாகக் கூடி கோவிலுக்குப் போனால் அந்த பழைய இனிய நாட்களை திரும்ப நாங்கள் பெறலாம்.
கடந்த காலங்களை விட கடைசியாக பிள்ளையார் கோவிலுக்குப் போன ஆட்களின் எண்ணிக்கை கூடி இருக்கு. மகிழ்ச்சி. இன்னும் கூடப் பேர் அடுத்த முறை போக வேண்டும். அதுக்கான நாள் 19/04/2019 அமைஞ்சிருக்கு.
ஓம்.. 19/04/2019 வெள்ளிக்கிழமை அன்று மானம்பராய்ப் பிள்ளையார் கோவிலில் விசேட பூச நடக்க உள்ளது. உடையார் கட்டிலிருந்து சனம் பஸ் பிடிச்சு வர இருக்கினம். அந்த தூரத்தில இருந்தும் அதுக்கு கூடின தூரத்தில இருந்தும் சனம் வரும் போது கிட்ட இருக்கும் சனம் மட்டும் விசேட பூசைக்கு வராமல் விட்டிடுவினமா என்ன?
அந்தன்று ஊர் விடுதலைக்கு என்ன செய்வது என்றும் கதைத்து முடிவெடுக்க இருக்கினம். நல்ல விசயங்கள் நடக்க வேண்டும் என்றும்,
பழைய படி வயாவிளானில் சித்திரை திருவிழா களைகட்ட வேண்டும் என்றும் நம்பிக்கையோடு பிள்ளையாரைக் கும்பிடுவோம்..