வயவையூர் மக்கள் பக்தி மிக்கவர்கள். ஆலயப் பூசைகள், பெருநாட்கள், திருவிழாக்கள் என ஆலயமும் அவர்கள் வாழ்வும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை.
ஆலயங்களில் நாள்தோறும் பூசைகளும், பெருநாட்களிலும் பண்டிகைகளிலும் சிறப்புப் பூசைகளும், வருடாந்த திருவிழாக்களும் நடக்கும் பொழுது மக்கள் திரண்டதைக் கண்டிருக்கின்றோம்.
விடுவிக்கப்பட்ட வயவையின் பகுதிகளில் உள்ள ஆலயங்களில் மீண்டும் பூசைகளும், சிறப்பு வழிபாடுகளும், திருவிழாக்களும் நடந்தால், மீள் குடியேறிய மக்கள் மனங்களில் மகிழ்வும் உறுதியும் பிறக்கும். வாழ்வாதாரப் பிரச்சினைகள் இருந்தாலும் மீள் குடியேறியதையிட்டு சந்தோசம் அடைவார்கள்.
பல்வேறு காரணங்களால் மீள் குடியேறத் தயங்குவோர் மனங்களில் மாற்றம் ஏற்படும். வயவையில் மீள் குடியேறத் தலைப்படுவர். இதனால் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் குடியிருப்புச் செறிவுறும்.
செறிவுற்ற குடியிருப்புகளில் பழைய வயவையைக் கண்ணுறும் விடுவிக்காத பகுதியைச் சேர்ந்த மக்கள் மனங்களில் சலனம் பிறக்கும். தமது பகுதிகளும் விடுவிக்கப்பட வேண்டுமென்று ஏங்குவார்கள். அதற்கான அடிகளை எடுத்து வைக்கத் தொடங்குவார்கள். காலப்போக்கில் எங்கள் வயவையூர் எங்களை அடையும்.
கனவு காண்பது போல் தோன்றினாலும் நனவாகக் கூடிய கனவே.. அதனை உறுதிப்படுத்தும் எடுத்துக்காட்டு வயாவிளான் புனித யாகப்பர் ஆலயம்.
35 ஆண்டுகளின் பின் 2015 இல் விடுவிக்கப்பட்ட இவ்வாலயம் கொஞ்சம் கொஞ்சமாகப் புனரமைக்கப்பட்டு, அன்றாடப் பூசைகள், திருநாள் திருப்பலிகள், கூட்டங்களென்று மக்களை தன்வசம் இழுத்துள்ளது.
இவ்வாறு இழுக்கப்பட்ட மக்கள் “எங்கட கோவில் எங்களிட்ட வந்திட்டுது. இவ்வளவுநாள் அகதியாய் திரிஞ்ச எங்களுக்கு இப்பதான் மனம் குளிர்ந்திருக்கு” என மீள் குடியேறியோர் மகிழ்வுடன் கூறுவதைக் கேட்க எவ்வளவு சந்தோசமாக இருக்கு..ஃபேஸ்புக்கில படங்களைப் பார்க்கும் போது எனக்கும் அங்க போக வேணும் போல இருக்கு… அங்கயே இருக்க வேணும் போல ஆசையாகக் கிடக்குது… இது என்னுடன் வேலை செய்பவர் சொன்னது..
இந்த ஆசை இன்னும் பல பேருக்கு தொற்று வியாதியைப் போல தொற்ற வேண்டும். அதற்கு வருகின்ற ஜூலை மாதம் நடக்க இருக்கும் புனித யாகப்பர் ஆலயத் திருநாள் தடல் புடலாக மக்கள் வெள்ளத்துடன் நடக்க வேண்டும்.
அதற்கான உதவிகளையும் ஊக்கத்தையும் எந்த வித பாகுபாடும் இல்லாமல் வயவையூர் மக்கள் கொடுக்க வேண்டும். இவ்வாலய நிர்வாகத்துடனோ, பங்குத்தந்தையுடனோ, அல்லது இவ்வாலய முகநூல் முகவரியூடாகவோ தொடர்புகளை ஏற்படுத்தி இயன்றளவில் முயன்று உதவுவோம்.
இது எங்கள் கோவில் இல்லை.. நாங்கள் ஏன் உதவ வேண்டும் என்றெண்ணாமல், இன்று இந்தக் கோவிலின் திருநாளுக்கு உதவி வெகு விமரிசையாகக் கொண்டாடிவிட்டு அதன் நீட்சியாக விடுவிக்கப்படாத பகுதி கோவில் திருவிழாக்களையும் ஒற்றுமையுடன் சிறப்பாக நடத்தினால் வயவை நிலம் எங்களுக்குக் கிடைக்க வாய்ப்புகள் பிரகாசமாகும்.
புனித யாகப்பர் ஆலய விழாவில் பங்காளி ஆவோம். ஊர் மீட்புப் பணியை விரைவுப்படுத்துவோம்.