நாள் : 77
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : அன்புடைமை
செய்யுள் :7
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.
அன்பு துணை நிற்காத காரியம் எதுவுமில்லை என்றார் வள்ளுவர் போன செய்யுளில்.
இச் செய்யுளிலோ அன்பில்லாதவற்றை, எலும்பு இல்லா புழுக்கள் கடும் வெய்யில் துன்புறுத்துவதைப் போல அறம் வாட்டும் என்கிறார். முரணாக இருக்கிறதல்லவா?
இல்லை. ஏனென்றால் ஒரு காரியத்திற்கு நான்கு விஷயங்கள் முக்கியத்தேவையாகிறது.
கர்த்தா – செய்பவன்
காரணம் – ஏன் செய்கிறோம் என்ற நோக்கம்
கருவி – எதைக் கொண்டு செய்கிறோம். எவை எவை துணையாக இருக்கின்றன.
மூலம் – எதை மாற்றவோ, திருத்தவோ, வினைக்கு ஆட்படுத்தவோ போகிறோம் என்பது
இதனால் நாம் பெறுவது பலன் – நாம் அதனால் பெறும் இறுதி மற்றும் பக்க விளைவுகள்.
இதில் அனைத்து செயல்களுக்கும் காரணமாக அமைவது அன்பு… கர்த்தாவுக்கு ஒரு விருப்பம் உண்டாகிறது.
பலன் மீது அன்பு இருக்குமா என்றால்.. இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம். அது விரும்பிய பலன் கொடுத்ததா இல்லையா என்பதைப் பொருத்தது.
ஆனால் கருவி, மற்றும் மூலம் ஆகிய இரண்டின் மீதும் அன்பு இருத்தல் வேண்டும் என்கிறார் இங்கே வள்ளுவர்,
அப்படி அன்பில்லாமல் காரண அன்பினால் காரியம் ஆற்றுவோருக்கு தோன்றுவதுதான் குற்ற உணர்ச்சி.
இந்தக் குற்ற உணர்ச்சி நம் மனதை பாடாய்படுத்தும் வல்லமை கொண்டது.
ஒரு செயலில் முக்கிய உறுப்புகளான காரணம், கருவி, மூலம் மூன்றின் மீதும் கர்த்தாவிற்கு அன்பு இருக்க வேண்டும்.
அப்படி இல்லாவிடில், பின்னர் தர்மசிந்தனை கொண்ட மனம் குற்ற உணர்ச்சியில் தீயில் சுடப்பட்டாற்போல் துன்புறும் …