வயாவிளான் எனும் பெரும் கிராமம் – நினைவில் கொள்வோம்

567

அண்மையில் புதிதாக ஒருவர் என்னுடன் வேலையில் இணைந்தார். கதைத்துக்கொண்டு போனபோது, தன் சொந்த இடம் வயாவிளான் என்றார். வழக்கம் போலவே அடுத்த கேள்வி என்னிடமிருந்து.. “வயாவிளானில் எவடம்?”.

ஒட்டகப்புலம் என்றார் புதிய நண்பர். விழிகளைச் சற்று மேலுயர்த்தி அவரைப் பார்த்தேன். அதில் என்ன அர்த்தம் கண்டாரோ தெரியவில்லை. அவருடைய முகம் மாறுவதை உணர்ந்த நான் “நான் சந்திச்ச எல்லாரும் எந்த ஊர் எண்டு கேட்டால் ஒட்டகப்புலம் எண்டுதான் சொல்லுவினம். வயாவிளான் எண்டு சொல்றது இல்ல” என்றேன். புதிய நண்பன் முகத்தில் சிறு புன்னகை அரும்ப மௌனமானான். அந்த மௌனத்தில் நான் தொலைந்து என்னைத் தேடினேன். அதன் போது கிளர்ந்தெழுந்த சில உணர்வுகள்… உங்களோடு… மனம் விட்டு.. உணர்வின் உரையாடலாக..

அதற்கு முன் கீழே உள்ள ஒளிவீச்சைக் காணுங்கள். வயாவிளான் என்ற பதம் எங்கும் இல்லை.. நேர்காணல் எடுப்பவர் ஒரு படி மேலே போய், பலாலி-தோலகட்டி என்கிறார். இதெல்லாம் ஏன்? எதனால்?

தோலகட்டி நெல்லி ரசம், ஒட்டகப்புலம் செல்லப்பா (சரியா) என்று பிரபல்யமடைந்ததே அன்றி வயாவிளான் என்று அல்லவே? ஏன்?

எங்கிருந்து தொடங்கின இவை எல்லாம் என அறியேன். ஆனால் இங்கிருந்து தொடங்கினால் மாற்றலாம் என எண்ணுகிறேன்.

முகநூலில் ஒரு பதிவு கண்டேன்; “உதவிக்கு விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டுள்ளது” என்றவாறு பகிரப்பட்ட அந்த மனசில் புதைக்கப்பட்டிருக்கும் விம்மலை என்னால் கேட்க முடிந்தது. நான் குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவன் என நினைத்து என்னுடன் கருத்தாடிய பழைய ஆதங்கங்கள் இத்தருணத்தில் உயிர்த்தெழுந்து எதையோ உணர்த்தின..

“ உதவுவது பெருமை அல்ல.. உதவி என்று கேட்க இடம் கொடாமையே பெருமை”. ஆம்.. தொண்டு நிறுவனங்கள் என்ற பெயரின் கருத்தாழமும் அதாகத்தான் இருக்கும். எங்கள் ஊர்த் தொண்டு நிறுவனங்கள் உதவிகள் கோரப்படும் வரை காத்திருக்கத் தேவை இல்லை. உதவிகள் தேவைப்படுவோரைக் கண்டறிந்து உதவிகளைச் செய்ய வேண்டும். அதற்கு பெரிதளவில் மனித வளம் தேவை. அந்த வளம் எங்களிடம் இல்லை என்று சொல்ல முடியாது.

மூளை எப்படி உடலெங்கும் பரந்துள்ள நரம்புகள் மூலம் தகவல்களை வாங்குதோ, அதே போல ஊரின் மூலை முடுக்கெல்லாம் தகவல் வழங்கிகளை உருவாக்க வேண்டும்.

வயாவிளானில் பல குறிச்சிகள் உண்டு. அப்படிப்பட்ட சற்றேப் பெரிய குறிச்சிகளாகத்தான், சிறுன்கிராமமாக முன்னிறுத்தப்படுகின்ற ஒட்டகப்புலம், குட்டியப்புலம், தோலகட்டி போன்றவற்றைக் காண்கிறேன். அப்படிப் பெரிய குறிச்சிகளிலிருந்து செயற்பாட்டாளர்களை உள் வாங்க வேண்டும்.

அப்படி உள்வாங்கினால் கட்டுரையின் முற்பகுதியில் எழுப்பப்பட்டிருக்கும் கேள்விகள் காணாமல் போய்விடும். ஆம்.. இங்கிருந்து தொடங்கினால் வயாவிளான் என்ற ஒற்றைக் குடைக்குள் பெய்யும் ஆனந்த மழையில் நாமெல்லாம் நனையலாம்.

இல்லையேல், வெளி நாடுகளில் கூட ஒட்டகப்புல ஒன்றியம், தோலகட்டி ஒன்றியம் என அமைப்புகள் உருவாக்கம் பெறக் கூடும். அதற்கான அறிகுறிகள் சில நாடுகளில் தோன்றி இருப்பதையும் இங்கே குறிப்பிட வேண்டிய கடமை எனக்குண்டு.

1 COMMENT