பல இடப்பெயர்வுகளையும் ஆக்கிரமிப்புகளையும் சந்தித்ததையே வரலாற்றில் பெரும்பகுதியாகக் கொண்ட இனம் கிரிமிய இனம். இன்று கூட உக்ரேனிய-ரஷியக் களங்களில் உலக ஆதிக்க வாதிகள் ஆடி வரும் ஆட்டத்தில் உதைக்கப்படும் பந்தாக கிரிமியர்கள் உள்ளார்கள்.
13 ஆம் நூற்றாண்டுக்கு முன் சிமேரியன்கள், கிரேக்கர்கள், ஸ்கைத்தியர்கள், கோத்துகள், பல்காரிகள், கசாருகள், பைசாந்திய கிரேக்கர்கள், கிப்ச்சாக்குகள், உதுமானியத் துருக்கியர், மங்கோலியர்கள் போன்றோரால் ஆக்கிரமிக்கப்பட்டு ஆளப்பட்டது கிரிமியப் பிரதேசம்.
13 ஆம் நூற்றாண்டில் கிப்சாக்-மொங்கோலிய ஆக்கிரமிப்பால் கிரிமியாவில் முதன் முதலாக இசுலாம் புகுந்தது. 13 ஆம் நூற்றாண்டு வரை கிரிமியர்கள் எனப்பட்டோர் இசுலாத்தை தழுவிய பின் கிரிமிய தத்தார்கள் எனப்பட்டார்கள். இது கூட ஒரு வகை இன அழிப்பு அல்லவா?
13 முதல் 14 ஆம் நூற்றாண்டு வரை வெனிசியர்களாலும், ஜெனோவியர்களும் கிரிமிய தத்தாரை ஆண்டனர். 15 முதல் 18ம் நூற்றான்டு வரை கிரிமிய கனாட்டூம், உதுமானியப் பேரரசும் கிரிமிய தத்தார்களை ஆண்டனர். பின்னர் 18 முதல் 20ம் நூற்றாண்டு வரை ரஷ்யப் பேரரசால் ஆளப்பட்ட இவர்கள் இரண்டாம் உலகப் போரின் போது ஜேர்மனால், கைப்பற்றப்பட்டனர்.
சோவியத் யூனியன் உருவாக்கப்பட்ட போது, சோவியத் யூனியனில் உக்ரேன் நாடு இணைந்தமைக்கு சன்மானமாக கிரிமியப் பிராந்தியம் வழங்கப்பட்டது.
உக்ரேன் நாட்டின் பகுதியாக இருந்தாலும், தனியரசு ஒன்றுக்குரிய பாராளுமன்றம், அதிபர் உள்ளிட்ட அலகுகளை கொண்ட சிற்றரசாகவே கிரிமியா விளங்கியது. ஆனாலும் கிரிமிய அரசின் தலைவரை உக்ரேன் தலைவர் நீக்கலாம் நியமிக்கலாம் என்றவாறு நிலமை இருந்தது.
2014 ஆம் ஆண்டளவில் மீண்டும் ரஷ்யா எழுச்சி கண்டபோது, உக்ரேன் ஐரோப்பா ஒன்றியத்துடன் இணைய விரும்பியது. கிரிமியாவோ மீண்டும் ருஷ்யாவின் பக்கம் போக விரும்பி, நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, பல இடர்களை அடைந்தது.
இரண்டாம் உலப் போருக்குப் பின் கிரிமியா யுத்த பூமி ஆனது..
தமிழரின் பெருந்துயர நாளான மே 18 இல் இது எதற்கு என்ற கேள்வி எழலாம்.
கிரிமிய இனம் இனவழிப்புக்கு ஆளாகி கிரிமிய தத்தார்களாக, உக்ரேனியர்களாக, ரஷியர்களாக சுயமிழந்து வாழ்கின்றனர்.
எந்த ரஷ்யா 1944 இல் நாட்டை விட்டு வெளியேற்றி, பேரிடப்பெயர்வுக்கும், பேரிடருக்கும் வித்திட்டதோ, அந்த ரஷ்யாவுடன் இணைந்து வாழப்போகின்றோம் என்று 2014 இல் கூறுகின்றார்கள்.
இத்தகு இரு நிலையும் நாளை எமக்கு வந்து விடக் கூடாது எனில் எம் இழப்பை மட்டும் அல்லாமல் கிரிமியா போன்ற எடுத்துக்காட்டுகளையும் நாம் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.