நெடுநேரத் தொடரிப்பயணம் ஒன்றில், அருகிலிருந்த குடும்பம் தன்பால் என்னை ஈர்த்தது.
நான்கு அல்லது ஐந்து அகவை இருக்கும் ஆண்பிள்ளை..இனிப்புப் பண்டம் கேட்டு அழுதது. அடிக்கடி உண்பதாகத் தகப்பன் மறுக்க, சற்றே அமைதியானது.
மடிக்கணியை விளையாடத் தருமாறு அண்ணனை வேண்ட அவனோ தன் விளையாட்டை விட்டு விட மறுத்தான். அண்ணனின் மறுப்பு சின்னவனிடம் சிணுங்கலை உருவாக்கியது..
அதே சிணுங்களுடன் அலைபேசியில் முகம் புதைத்திருந்த தகப்பனிடம் அலைபேசியைத் தருமாறு வேண்டியது. அவனுடைய வேண்டுதல் தப்பனால் உதாசீனம் செய்யப்பட அவனிலிருந்து அழுகை வெடித்தது.
இந்த முறை அம்மாவினுடையது. களைத்துக் கண்ணுறங்கிய அவளை எழுப்பி விளையாட அழைத்தது. அவளோ அசதி மொழியில் நிராகரித்தாள்.
சின்னவனின் அழுகை அடமாக வடிவெடுக்க அத்தொடரிப் பெட்டி பேரவல ஓலமானது. சக பயணிகள் கவனம் அக்குடும்பம் நோக்கிக் குவிய, சின்னவன் கேட்ட இனிப்பில் கால்பகுதியைக் கொடுத்தார் தகப்பன்..
அவனோடு இணைந்து பெட்டிக்குள் இருந்த அல்லோலமும் அடங்கியது. பயணிகள் பழையபடி பயணிக்கத் தொடங்கினர்..
நானும் என் அலைபேசியில் மேயத் தொடங்க, காணிகள் விடுவிப்புச் செய்தி கண்ணில் பட்டது..