சிறுத்தை.. வீரத்தின் குறியீடு.. வேகத்தின் எல்லைக்கோடு.. திறமையின் உச்ச வரம்பு. ஆபத்தின் அடையாளம்… அச்சுறுத்தலின் மாறுவேடம்… இனிய முரணாக அன்பு கொண்ட ஆருயுரியாகவும் அவ்வப்போது முகம் காட்டும் அன்பகன்.
ஒரே நேரத்தில் முன்னங்கால்கள் பின்னால் வர பின்னங்கால்கள் முன்னே செல்ல பறப்பதைப் போல் பாயும் சிறப்புத் திறமை கொண்ட பூனையினமாம் சிறுத்தை, தன்னினத்தில் பலம் மிக்க சிங்கம் புலியை விட திறமை மிக்கது.
ஆறடி ஆளைக் கூட கழுத்தடியில் ஒரு கடி கடித்து அடித்துத் தின்னக் கூடியது. அடித்த இரையை கவ்விக்கொண்டு மரமேறி இரசித்து உருசித்துத் தின்னும் பழக்கத்தைக் கொண்டது. தான் தின்ற மிச்சத்தை கழுதைப் புலிகளுக்குத் தானம் கொடுக்கும் வள்ளல் பரம்பரை சிறுத்தை..
அடர்காட்டுக்குள் அரவிமின்றி அருகில் வந்து அச்சுறுத்தி அடித்துத் தின்னும் சிறுத்தை தன் பிள்ளை மீது பாரிய அன்பைக் காட்டும். குறிப்பாக பெண் சிறுத்தைகள் பேறுக் காலத்தில் அடிக்கணக்கில் தடுப்பமைத்துக் குட்டி ஈனும். அத்தடுப்ப்புக்குள் தப்பித் தவறி எதாவது புகுந்து குட்டியை நெருங்கினால் இரட்டிப்பு மூர்க்கத்துடன் தாக்கும் இயல்புடையது பெண் சிறுத்தை..
அது மட்டுமல்லாது தாக்குதல், தற்காத்தல், வேட்டையாடல், இரைதேடல் எல்லாவற்றையும் பிள்ளைக்குக் கற்றுக்கொடுத்து தன்னின மாண்மைப் பேணும் இனமான உயிரி சி்றுத்தை..
அத்தகு அபாயகரமான சிறுத்தைக்கு இரையாகிய குரங்கின் பிள்ளையைக் காக்கும் பணியை செவ்வனே செய்கிறது சிறுத்தை ஒன்று. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில் தான் தின்ற மிச்சத்தைத் தின்ன வரும் கழுதைப்புலி குட்டியைத் தின்று விடாமலிருக்க காவலிருப்பதுதான்..