தெரு விளக்கே திரு “விளக்காய்”

விண் முட்டும் – பெரும்
வெண் மொட்டுக்களாய்!

மண் விட்டு விண்ணேகும் ராக்கட்டாய்!,
கண் கவரும் ஆதிமாந்தரின் ஆயுத எழுத்தாய்!!

ஜாலமிடும் தெருவிளக்குகள்!

மனம் வெட்டிச் செல்லும் இக் காட்சியில் அழகியல் பேசிடும் இந்த தெருவிளக்குகள் எனை பின்னோக்கி நகர்த்துகின்றன.

ஆம்,…

தெருவோர மின் விளக்குகள்
“திருவிளக்காய்” ‘ஞானவொளி’ தந்த காலமொன்றை கண் முன்னே கொண்டு வருகின்றது…!

1990 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில்
இரண்டாம்( 2ஆம்) கட்ட ஈழப்போர் வெடித்தது.

ஆதலால்…

தமிழர் நிலத்துக்கு லக்சபானா(Laxapana Power Station) மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

பெற்ரோல்,டீசல், மண்ணெண்ணை போன்ற எரிபொருட்கள்தான் இனி மாற்றீடு என்றிருந்த போது அவையும் வட மாகாணத்துக்கு பேரினவாத ஶ்ரீலங்கா அரசால் தடை விதிக்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட பொருட்களின் பட்டியலில் பெற்ரோல்,டீசல், மண்ணெண்ணை முறையே முதலாவது, இரண்டாவது, மூன்றாவது
இடத்திலும் இருந்தது.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் (ICRC) மட்டும் முப்படைத் தலைமைக் காரியம் (JOC) மற்றும் பாதுகாப்பு அமைச்சின் (Ministry of Defense)அனுமதி பெற்று மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வடக்கிற்கு எரிபொருள் கொண்டு வந்தனர்.

அந்த எரிபொருள் மூலம் ஜெனரேற்றர்களை இயக்கி யாழ்ப்பாணம் போதான வைத்தியசாலை,சங்கானை மாவட்ட
வைத்தியசாலையின் பாதுகாப்பு வேலிகளில் மின் விளக்கு ஏற்றினர்.🚨

இரவில் வான் தாக்குதல் செய்யும் இலங்கை வான் படையின் இயந்திர வல்லூறுகளுக்கு வைத்தியசாலை இருப்பதை தெரியப்படுத்தவே சிகப்பு நிற சக அடையாளத்தின் மீதிலே அல்லது அருகிலே
மின் விளக்குகள் ஒளிரவிடப்பட்டன.🚨

இருள் மிகுந்த இக்கால கட்டத்தில் வைத்தியசாலைகளைச் சூழ வாழ்ந்த
மாணவர்கள் அங்கே தெருவோரத்தில் வெறுந்தரையில் உட்கார்ந்து கற்றல் நடவடிக்கையில் ஈடுபடுவர்.

நீண்ட நெடிய பெரும் கல்விப் பாரபரியம் கொண்ட தமிழர்கள் கல்விக் கண்களைத் திறந்துவிட உதவிய தெருவிளக்கை
திருவிளக்காக் கண்டனர்.