வயாவிளான் பெயர்கொண்டு தலையாய வேலை..

170

சிரிப்பும் நிமிர்ந்த நிலையும் மனிதனை மிருகங்களிடமிருந்து பிரித்துக் காட்டும் இயல்புகள் என்பார்கள் அறிவியலாளர்கள். அம்மனித இயல்புகளைப் பறித்துத் தமிழரை மிருகங்களாக்கும் திட்டமிட்ட சதிச்செயல்கள் காலங்காலமாக உலகில் நடந்து வருகின்றன.

1956 இல் தொடங்கி 2009 இல் முள்ளிவாய்க்கால் வழியாக உச்ச நிலையில் கட்டவிழ்த்து விடப்பட்ட அச்சதிச் செயலை ஈழத்தமிழினம் முறியடித்து மனிதனாக நிமிர்ந்து நிற்கிறது. 

அம்முறியடிப்பு பொருளாதாரப் போராக நிலையெடுத்து நிற்கும் இக்காலத்தில், ஈழத்தமிழினம் மனிதனாக நிலைத்திருக்கக் களமாட வேண்டிய காலப் பொறுப்பு புலம்பெயர்ந்து வாழும் ஈழவனின் வீட்டு முற்றத்தில் காத்திருக்கிறது.

என் வீட்டில்தான் முற்றமே இல்லையே என எவரும் விலகிச் செல்லாமல் பொறுப்பேற்று பொருளாதாரக் களமாடி வருவது தமிழனின் போர்க்குணத்தைப் பறைசாற்றுகிறது.

ஆனாலும், அண்மையில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, ஈழத்தை விட வெளி நாடுகளில் வாழும் ஈழத்தமிழனின் எண்ணிக்கை அதிகம் என்பதைக் கருத்தில் கொண்டால், பொருளாதாரப் போரில் நாங்கள் பின் தங்கியே உள்ளோம்.

உதவும் குணமும் மனமும் உள்ள எங்களுக்கு அங்குள்ள இருளில் நடப்பது தெரியாத காரணத்தால் இப்பின்தங்கல் ஏற்பட்டதென்றால் எள்ளளவும் அதில் பொய்யில்லை. (எனும் நம்பிக்கையுடன்)….

அங்கே நடந்தவையையும் நடப்பவற்றையும் நடக்க வேண்டியவற்றையும் ஊடக வெளிச்சம் கொண்டு தெரிய வைக்க வேண்டியது கட்டாயமாகும். 

இப்பணியைச் சிறப்பாகச் செய்து வரும் வயாவிளான் பெயர் தாங்கிய ஊடகங்களும் அமைப்புகளும் இன்னும் வீச்சாகச் செயல்பட வேண்டும்.

இதன் மூலம் மனங்கள் பல ஆறக்கூடும். கரங்கள் பல கூடக் கூடும். எங்கள் பக்கம் பலம் பெறக் கூடும். 

தொடர்வோம்..