தமிழீழம் நான் கண்டதும் என்னைக் கண்டதும்!

தந்தை செல்வா காலம் வரை எம் மண்ணில் பக்தி இலக்கியங்களே இலக்கியவாதிகளால் பெரும்பாலும் படைக்கப்பட்டது.

தமிழீழ மண் தலைவர் மேதகு வே.பிரபாகரன் காலத்தில் போரிலரிலக்கியங்களும் படைக்கப்பட்டது.

புதிய புறநானுறு என வியந்துரைக்கப்படும் அளவில் போரிலக்கியத்தை கவிஞர் புதுவை இரத்தினதுரை, கவிஞர் நாவண்ணன் போன்றவர்கள் படைத்தனர்.

அந்த இலக்கியங்களில் கவிதை வடிவம் கொண்டவை விடுதலைப்பாடல்களாகி என் போன்ற இளைஞர்களையும் இளைஞிகளையும் களத்துக்கு அழைத்தன.

அதே நேரம் பக்தி நெறியை உய்விக்க தெய்வப்படங்களையும் கோவில் சுவர்களில் புராணக் கதைகளையும் ஓவியம் ஆக்கித் தந்த பலர் தமிழீழ மண்ணின் வலியையும் வலிமையையும் ஓவியமாக்கியது மிகச் சொற்பமே அல்லது
அந்த ஒரு சிலரின் முயற்சி போதாமலே இருந்தது.

அந்த பாரிய இடைவெளியை தனது தூரிகை கொண்டு நிரப்பிய பெரும் பணியை ஆற்றி தமிழினத்துக்கு அருந்தொண்டாற்றி உள்ளார்.

பேரிடர்கள் பல கடந்து மானுட வலிகளை ஓவியமாக்கிய பெருமை ஓவியர் புகழேந்தி அவர்களையே சாரும்!

இன,மத,பூகோள எல்லைகள் கடந்து மானுடத்தை செப்பனிடும் இசை போல
ஓவியர் புகழேந்தி அவர்களின்
ஓவியமும் எல்லா வகையான கோடுகளை கோட்பாடுகளையும் திமிறி கிழிக்கும் தன்மை வாய்ந்ததாக உள்ளது.

உலகத் தமிழர் எம் ஆன்மாவில் கலந்த ஓவியர் புகழேந்தி அவர்களின் இந்த
எழுத்தாவணமும் எங்கள் தேசவிடுதலைக்காய் தொடர்ந்தும் பங்கு கொண்டு பயணிக்கும் என்பது என் எண்ணம் அல்லது அதுவேதான் திண்ணம் ஆகும்.

உலக விடுதலைப் போராட்ட வரலாறுகளில் மிக நீண்ட காலம் அடிமைத் தளைகளில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்ள போராடியவர்கள் தென்னாபிரிக்காவின் கறுப்பினத்தவர்கள்.

தென்னாபிரிக்காவின் விடுதலையின் இறுதி அத்தியாங்கள் எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் போது இசைக் கலைஞர்கள் காத்திரமான பங்கினை வகித்தனர்.

பலமொழி பேசப்படும் அந்த நாட்டில் இசையை பொது மொழியாக்கி கறுப்பர்கள் நீதி கேட்டனர்.

நீதியின்பால் நெருங்கி நின்ற வெள்ளையர்களையும் இணைத்துக் கொண்டு உலகின் பல பாகங்கள் எங்கணும் இசைக்கச்சேரி வைத்து இசை முழங்கினர்.

ஒரு கட்டத்தில் அவர்கள் இசை இங்கிலாந்தை வந்தடைந்தது.

இங்கிலாந்து மண்ணில் பிரபல அரங்கமான வெம்பிலி அரங்கத்தில்(Wembley Arena) அவர்களுக்கு இசை முழங்கவாய்ப்பு கிட்டியது.

அங்கே “நெல்சனை விடுதலை செய்” என ஆங்கிலத்தில் இசை முழங்கினர் அந்த இசை ஆங்கிலேயரின் இனவெறி உணர்வைத் தணித்து அவர்களின் நெஞ்சம் புகுந்து மானுட நீதியை வலியுறுத்தியது.

பயனாய் சிறையில் மக்களுக்காய் தவமிருந்த கறுப்பின விடுதலைச் சூரியன் நெல்சம் மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்.

கறுப்புத் தங்கமாகிய நெல்சன் வெளியே வந்த சொற்ப காலத்தில் அவர் தென்னாபிரிக்க விடுதலையை சாத்தியம் ஆக்கினார்.

செவிவழி புகுந்து ஆக்கிரமிப்பாளரின் ஆன்மாவை அசைக்க வல்ல இசை போல விழிவழி புகுந்து எங்கள் அயலரினதும் ஆக்கிரமிப்பாளரதும் ஆன்மாவை ஆட்டம் காண வைக்கும் ஓவியத்தையும் நாங்கள் ஆயுதம் ஆக்குவோம்.

இன,மத, பூகோள எல்லைகளை எகிறி கடக்கவல்ல ஓவியர் புகழேந்தி அவர்களின் ஓவியமும் தமிழின விடுதலையை விரைந்து சாத்தியமாக்கிடத் துணை நிற்போம்.

நன்றி புகழேந்தி ஐயா! 🙏