பாதுகாப்பு வலயமெனும் ஆபத்து வளையம்

479

உயர் பாதுகாப்பு வலயத்துக்குள் அடைபட்டுக் கிடந்த பலாலியின் பகுதிகள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. மக்கள் அங்கே வாழப்பழகி விட்டனர். வெளிநாட்டில் உள்ள சமூக அமைப்புகள் மக்களுக்குப் பக்கபலமாக உள்ளன.

இன்னும் விடுவிக்கப்படாத பலாலியில் அமைந்திருக்கும் பலாலி சித்தி விநாயகர் வித்தியாலம் இயங்க, விடுவிக்கப்பட்ட பகுதியில் தற்காலிகக் கட்டடம் கட்ட  நேற்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. 

இனி என்ன நடக்கும்? இலகுவாகக் கணிக்கலாம். கட்டடம் விரைவில் கட்டப்படும். பள்ளி இயங்கும். சொந்தப் பள்ளியில் படிப்பதாக எல்லாரும் மகிழ்வர். பழைய பள்ளிக் கட்டடம் மறக்கப்படும். கடைசிவரை உயர் பாதுகாப்பு வலயமாகாவே பழைய பள்ளி இருக்கும். இதுதான் வளையம்.

எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல், “அகிம்சா வழியில்”, காணிகள் கையகப்படுத்தும் வளையம். நாங்களும் ஏமாற்றப்படுவதை அறியாமல் மகிழ்வுறும் வண்ணம்.. இதுதான் பலாலியின் அயல் கிராமமான வயாவிளானிலும் நடக்கும். 

காணிகளை விடப்போகின்றோம். பதியுங்கள் என்றார்கள்.  பாதிக்கும் குறைவானோரே பதிந்தனர். அரசின் எதிர்பார்ப்பும் இதுதான். இனி பாதிக்கும் குறைவான ஊரை விட்டிட்டு, இருக்கும் வயாவிளான் மக்களுக்கு அதை பங்கிட்டுக் கொடுப்பார்கள்.

அந்தப் பாதிக்கும் குறைவான பகுதியில் கல்லூரி, ஆலயம் என “சகல வசதியும்” செய்து கொடுப்பார்கள். அதிருப்தியாளர்கள் சவுண்டு குடுத்தால் விமான நிலைய விஸ்தரிப்புக்காக என சட்டப்படி காணிகளைக் களவெடுப்பார்கள். 

எங்கள் அரசியல்வாதிகள் சிலரும் பெரிய விமான நிலையம் வருவது எங்களுக்கு நல்லதுதானே என்று சமாதானம் செய்வார்கள். 

ஒட்டு மொத்தத்தில் சத்தமே இல்லாத யுத்தம் முன்னெடுக்கப்படுகிறது. இதிலிருந்து நாம் தப்ப முடியாது என்பதே யதார்த்தம் என்றாலும் எதிர்வினையாற்றாமல் இருக்கக் கூடாது. அறிவு சார் உழைப்பைக் கொடுப்போம். அதிஷ்டமிருப்தால் நாம்தான் வெல்வோம்.