கவிதை எழுதுவது எப்படி – 7 (படித்ததில் பிடித்தது)

648

காட்சிபடுத்தும் கவிதைகள் : இரண்டாம் வகை.

இந்த பதிவு எழுதுவதற்கு முன்னர் அலுவலகத்தில் மின்சாரமில்லை. அது இரவு நேரம். ஒரே புழுக்கமாக இருந்தது… உடனே எனக்குத் தோன்றிய எண்ணம்..

இரவு நேரத்தில் மின்சாரத் தடை
இருக்கும் இடத்தில்
ஒரே புழுக்கம்
அதனால் வியர்வை.

இதுதான் செய்தி. இங்கே “இருக்கும் இடத்தில்” தேவையில்லை. ஏனெனில் நாம் இருக்கும் இடத்தில் தான் மின்சாரத்தடை என்பதால் அந்த வார்த்தைகள் தேவையில்லை. படிப்பவர் நெஞ்சில் தானாகவே அந்த வரி அமைந்துவிடும்.. அடுத்து, புழுக்கத்தால்தான் வியர்வை வரும். ஆகவே புழுக்கம் என்ற வார்த்தையும் கட்.

இரவு நேரத்தில் மின்சாரத் தடை
அதனால் வியர்வை.

இன்னும் கவிதை வடிவம் வரவில்லை. “வியர்வை வழிகிறது” என்று இடுவோமா?

இரவு நேரத்தில்
மின்சாரத்தடை
வியர்வை வழிகிறது.

வியர்வை வழிகிறது என்ற வார்த்தை அதிக உபயோக வார்த்தையாக இருக்கலாம். சற்றே மாற்றினால் வடிகிறது என்று வரும்.. இல்லையா?, அதேசமயம் மேற்கண்ட கவிதை சற்றே வார்த்தைகள் ஒட்டாமல் இருக்கின்றன. ஆகவே இறுதியாக மாற்றியமைத்தபடி,

இரவு நேர மின்சாரத் தடையால்
வடிகிறது
வியர்வை.

அவ்வளவுதான்… இதில் நீங்கள் பல்வேறு அர்த்தங்கள் பொருத்திக் கொள்ளமுடியும். அதுசரி, இதெல்லாம் ஒரு கவிதையா என்று நீங்கள் கேட்பது எனக்குக் கேட்கிறது.. ஒரே கருத்தை எழுதிக் கொண்டிருப்பதைவிட சற்று வித்தியாசமாக சிந்திப்போம். உலகம் வித்தியாசப்படுபவர்களை மட்டுமே நோக்கும். உங்கள் சிந்தனை வித்தியாசமாக இருக்கவேண்டும். மேற்படி மூன்று வரிக் கவிதை பிற்பாடு நீங்கள் உபயோகித்துப் பழகலாம்..

என்னிடம் வந்த ஒரு மாணவனிடம் ஆங்கிலம் பற்றி சொல்லிக் கொண்டிருந்த பொழுது அவன் சொன்னான்,

Please come
The office
Meet him
Go fast

போன்ற சிறு சிறு வார்த்தைகளை விடுத்து பெரிய வார்த்தை சொல்லிக் கொடுங்கள் என்றான்… நீங்கள் யோசித்துப் பாருங்கள்.. இந்த சிறு வார்த்தைகள் இல்லாவிடில் எந்த பெரிய வார்த்தைகளும் அமைக்கமுடியாது,… சிறு சிறு வார்த்தைகள் சேர்ந்ததுதான் ஒரு மொழியே!! இல்லையா?

சிறு சிறு கவிதைகள் மூலமும் பெரிய கவிதை எழுதி வாருங்கள். வெற்றி நிச்சயம்..