இனப்படுகொலை ஒன்றின் இன்னோர் சாட்சி இழக்கப்பட்டுவிட்டது.
எமது தேசத்தின் காவல்த்துறை உயர் நிலை அதிகாரி திரு ரஞ்சித்குமார் அவர்களும் அமரராகிப்போனார்.
எமது மக்கள் இலங்கை இராணுவத்தால் ஆகாய கடல் தரை முனைகளிலிருந்து ஏவப்பட்ட ஆயுதங்களால் கொன்றழிக்கப்பட்ட இறுதி யுத்த சூழலில் காவல்துறை தமது சீருடையில் நின்றபடி தமது கடமைகளை நிறைவேற்றிக்கொண்டிருந்து.
இலங்கை அரசால் அறிவிக்கப்பட்ட இடம்பெயர்வு நெருக்கடிகளிலும் யுத்தமற்ற வலயத்தில் மக்கள் சேவையிலும் போர் முனைகளிலும் வெவ்வேறு நிலைகளில் பங்காற்றிக்கொண்டு சிவில் நிர்வாக கடமைகளோடு உயிர்காக்கும் மீட்பு நடவடிக்கைகள் மற்றும் இறந்த உடல்களை அகற்றுவது புதைப்பது வரையான பணிகளிலும் தமது உயிர்களின் ஆபத்துக்களின் நடுவிலும் இறுதிவரை செயற்பட்டார்கள் தமிழீழக் காவல்த்துறை.
ஒரு தேசத்தின் அச்சாணியான சிவில் நிர்வாகத்தின் சகல பரிமாணங்களையும் உலகம் வியக்கும் விதத்தில் கட்டமைத்ததில் காவல்த்துறையின் பங்கினை நாம் நினைவில் வைத்துள்ளோம்.
தமிழீழ தேசத்தின் சட்டத்தையும் நீதியையும் சிவில் பாதுகாப்பையும் நேர்பட நிறுவி எமது தேசத்தின் ஆட்சியை வலுப்படுத்தினார்கள்.
இந்த செயல்களில் ஆழுமை மிக்க பணி நிலையில் கடமையாற்றியவர்தான் தலைமை ஆய்வாளர் திரு ரஞ்சித்குமார் அவர்கள்.
சட்ட வைத்திய கடமைகளின்போதும் சட்ட மருத்துவ மற்றும் உயிர்காத்தல் பயிற்சிகளை ஒழுங்கமைத்து நடாத்தும்போதும் ஆய்வாளர் ரஞ்சித் அண்ணையோடு நெருங்கி பழகியிருக்கிறேன்.
அவர் சார்ந்த கடமைகள் அத்துணை பொறுப்புவாய்ந்தது என்பதையும் அவசிய சேவைகளான சிவில் பாதுகாப்பு மற்றும் மருத்துவம் என்பவற்றில் பணியாற்றியதால் அவரும் நானும் ஒருவரை ஒருவர் ஆழமாகப் புரிந்து நட்பும் மதிப்பும் கொண்டு பழகினோம்.
அவரது அர்ப்பணிப்பு வாழ்வு எமது தேசத்தின் வரலாற்றில் நிலைத்து நிற்கும். அவரது சேவை எமது நேசத்தின் உயர் கௌரவத்துக்குரியது.
– மருத்துவர் வாமன் தருமரட்ணம் –