கார்த்திகை மாதமும் களமுனை நினைவுகளும்.

காணரும் வீரர்கள் வாசம் செய்த களத்துக்கு வரும் உணவில் பெரும்பாலும் சோறுதான் இடம் பெற்றிருக்கும்.

ஆயிரக்கணக்கானவர்களுக்கு எல்லா நாளும் இடியப்பம், பிட்டு அவிப்பதென்பது நடைமுறை சாத்தியம் அற்றது என்பதாலேயே எங்கள் உணவில் சோறு அதிக இடம்பிடிக்கும்.

காய்ச்சல் அல்லது ஏதாவது வருத்தம் எனச் சொன்னால் சாப்பாடு வரும் வாகனத்தில் ஒரு சொப்பிங் பையில் கொஞ்ச இடியப்பமும் இன்னொரு பையில் கொஞ்சம் பால் சொதியும் வருவதுண்டு.

சிலர் கொஞ்சம் உடல் சூடு கண்டாலே காய்ச்சல் என்று சொல்லி இடியப்பம் வாங்கிச் சாப்பிடுவதும் சில வேளை நடைபெறுவதுண்டு.

அப்பம், இட்லி போன்ற உணவை நினைத்தே பார்க்க முடியாது.

களத்திலும் களத்திலிருந்து சற்று பின்னே பணி செய்த போராளிகளாகிய நாங்கள் எல்லோரும் உண்ட பின் மீதமான சோற்றை வெளியே கொட்டுவதில்லை.

மாறாக அந்த சோற்றை நீரால் நன்கு கழுவி நன்றாக வெய்யிலில் காயவிடுவோம்.

உழவு இயந்திரத்தில் ஏறி மெல்ல மெல்ல சொப்பிங் பைகளின் உள்ளே இருந்து வெகு தூரம் பயணித்து வந்த வியர்த்த சோறு சில வேளை பழுதடைந்துவிடும் என்பதால் நன்றாக கழுவுவோம்.

அந்தச் சோறு நன்கு உலர்ந்த பின்னர் பார்ப்பதற்கு வெளிறிய அரிசி போன்றோ அல்லது கொஞ்சம் அவல் போன்றோ என்னவென்றே சொல்ல முடியாத தோற்றத்தில் இருக்கும்.

அவற்றை அப்படியே அள்ளி போத்தலில் இட்டு மூடிவைப்போம்.

சில வேளைகளில் எதிரியின் மூர்க்கமான தாக்குதல்களால் களநிலைக்கு உணவு வரமுடியாத நிலை உண்டாகும்.

புகை கண்டு பகை விமானம் தாக்கி சமையல்கூடமே சாம்பலான சம்பவங்களும் நடந்தேறியதுண்டு.

உணவு ஏற்றி வரும் உழவு இயந்திரம் ஆழ ஊடுருவும் படையினரின் பதுங்கித் தாக்குதலுக்கு உட்பட்டுச் சிதறிய துன்பியலும் எமக்கு நிகழந்ததுண்டு.

இப்படியான உணவு இல்லாத நேரங்களில் எம் கையிருப்பே கைகொடுக்கும்.

அந்த நேரத்தில் போத்தலில் இட்டுப் பாதுகாத்த காய்ந்த சோற்றை எம்மால் முடிந்தளவு இடித்து அருவல் நொருவல் ஆக்கி நீர்விட்டுக் குழைத்து கொஞ்சம் சீனியும் போட்டுச் சாப்பிடுவோம்.

களமுனை குடியிருப்பு பிரதேசமாயின் எங்கேயாவது தேங்காய் பொறுக்கி வந்து முடிந்தால் திருவியோ அல்லது திருவவே வசதி இல்லாவிட்டால் தேங்காயை உடைத்து சொட்டாக்கி அந்த உருண்டையுடன் சேர்த்து உண்டு மீதமான வயிற்றை நீரால் நிரப்பி தேசக்கடமையை செவ்வனே செய்தோம்!

குடிக்க சுத்தமான நீரோ உண்ண நல்ல உணவு கூட இல்லாமல் எமக்காய் களமாடிய எங்களில் பலர் வீரசுவர்க்கம் அடைந்துவிட்டனர்.

அந்தப் புனிதர்கள் களத்திலும் தளத்திலும் சுமந்த பாரச்சிலுவைகள் சாதாரணமானது அல்ல அவை எம் செம்மொழியாலும் செப்பிட முடியாதவை.

கார்த்திகை மைந்தரை இந்த ஆண்டும்
ஆழ நினைந்து உங்கள் ஒவ்வொருவரதும் கார்த்திகை மாதக்கடனைச் செய்யுங்கள் என் தமிழுறவுகளே!🙏