“விழுப்புண் அடைந்த வீரர்களை ஏற்றிக் கொண்டு மின்னலெனப் பாயும் பச்சை ஆடைகட்டிய அந்த வாகனங்கள்!
வீடுகளில் உள்ள அம்மாக்களும் அக்காக்களும் மாரியம்மனுக்கும் மடுமாதாவுக்கும் நேர்த்தி வைத்து தொழுதபடி இருப்பார்கள்!
தாத்தாக்களும் பாட்டிகளும் தவண்டு தவண்டாவது சென்று பக்கத்து ஆலயத்தில் ஒரு கற்பூரமோ அல்லது மெழுகுவர்த்தியோ ஏற்றிவிட்டு வருவார்கள்!
அப்பாக்களும் அண்ணன்மார்களும் அவரவர் வீடுகளுக்கு முன்னே உள்ள தெருவில் உள்ள பள்ளங்கள் அனைத்துக்கும் மண் வெட்டிப்போட்டு நிரப்பிக் கொண்டிருப்பார்கள்.
ஆம், விழுப்புண் அடைந்த எங்கள் வீரர்களின் வாகனங்கள் மெத்தப் பக்குவமாய் வைத்தியசாலையைச் சென்றடைய வழி சமைப்பார்கள்!
தம்பி வீட்டிலிருந்து தப்பிச் சென்று இரகசியமாய் விழுப்புண் தாங்கிய வீரர்களுக்காய்
இரத்ததானம் செய்துவிட்டு வருவான்!
தங்கையின் காதுகளுக்கு தம்பியின் இரகசியச் செயற்பாடுகள் கசிய அவளும்
இரத்ததானம் செய்ய வெளிக்கிட்டுப் போய் ஏச்சு வாங்கி அழுதபடி வருவாள்!
நாற்பது (40Kg) கிலோ கூடத் தேறாத உன்னில் எப்படி இரத்தம் எடுப்பதென அவர்கள் சொல்ல இவளோ தானும் வடம் பிடிக்க வேண்டுமென அடம்பிடிப்பாள்!
மாமி அவசரமாய் பாலுடன் ஊர்க்கோழி முட்டை கலந்து இலகுவாய் சமிபாடு அடையக்கூடிய சத்தான “புடிங்”(Pudding)செய்து கொண்டிருப்பார்!
பன்னிரண்டு (12.00) மணிக்கு பஷ்ஷினை பிடித்து பென்னம் பெரிய “ரிவ்வன்”( Tiffin carrier) பொக்சுடன் மாமா வைத்தியசாலை வாசலில் தவம் கிடப்பார் !
களத்தில் ஏற்பட்ட கனத்த இழப்புக்களுக்காய் மக்கள் குடிமனைகளில் பலி எடுக்க வெறி கொண்டு குண்டுவீச்சு விமானங்கள் அலையும்,…
கழுகுக் கண்களுடன் வேவுவிமானங்கள் தலைக்கு மேலே வட்டமிட வட்டமிட அத்தனையும் நடைபெற்றது!
அன்று அத்தனை கடமைகளும் யாரும் சொல்லாமலே எங்கள் ஊர்களில் கனசச்சிதமாய் கண்ணும் கருத்துமாய் நடந்தது!”
என்றார் எந்தன் தாய்நாட்டில் உள்ள ஒரு அருமை நண்பர்.
ஆம், “கொரனா” ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பைத் தேடிக் கொண்டு உங்கள் கார்த்திகை மாதக்கடமையினை கனிவுடன் செய்யுங்கள் என கேட்டுக் கொண்டபடி என் அழைப்பினை துண்டித்தார் என்னரும் நண்பர்!
27/11/2020