20 ஆடுகளும் 200000 ரூபாய் மோட்டார் சைக்கிளும்.

71

தன் தந்தையிடன் சென்ற அவன் உயர் ரக உந்துருளி Motor Bike) ஒன்றை வாங்கித் தருமாறு கேட்டான். அவனுடைய அப்பாவோ 20 ஆட்டுக் குட்டிகளைக் கொடுத்தார்.

உந்துருளி கேட்டால் ஆட்டுக்குட்டிகளைக் கொடுக்கிறாரே அப்பா என்றவாறு ஆடுகளை மேய்க்கத் தொடங்கினான் அவன். 

ஆரம்பத்தில் விருப்பமின்றி மேய்த்த அவன் ஆடுகள் வளர வளர அவற்றின் அழகிலும் துடுக்கிலும் கவரப்பட்டு ஈடுபாட்டுடன் ஆடுகளை மேய்க்கத் தொடங்கினான்.

அவனுடைய கவனிப்பில் ஆடுகள் கொழு மொழு வளர்ச்சியைக் கண்டன. பத்து மாதத்தில் அவை பேராடுகளாகின. காண்போரெல்லாம் ஆடுகளை வாஞ்சையுடன் கொஞ்சி வாங்கிச் செல்ல ஆசைப்பட்டனர்.

அவனும் ஒரு கட்டத்தில் ஆடுகளை நல்ல விலைக்கு விற்றான். கிடைத்த காசைக் கொண்டு உந்துருளி விற்பனை முகவரிடம் சென்றான். தனக்குப் பிடித்த உந்துருளியை விலை கொடுத்து வாங்கினான்.

மீதமாக இருந்த காசைக் கொண்டு போய் தகப்பனிடம் கொடுத்தான். அவர் அக்காசுக்கு மீண்டும் பத்து ஆடுகளை அவனுக்கு வழங்கினார். ஆடுகளுடன் அவன் புல் வெளி நோக்கி நடந்தான். அவனுடைய புதிய உந்துருளி வீட்டு முற்றத்தில் அவனுக்காகக் காத்திருந்தது.