மன்னார் வளைவும் தமிழர் நெளிவும்

95

மன்னாரின் திருக்கேதீசுவர வரவேற்பு வளைவு அகற்றப்பட்டுருப்பது பற்றிய அனல் பறக்கும் கருத்து மோதல்களை நான் உலவும் வலையுலகில் காணக்கூடியதாக உள்ளது. அதனால் பெரு நெருடல்கள்  உருவாகியுள்ளன. அவற்றைப் பகிந்து கொள்ள முன் நினைவலைகள் சிலதை மீளுருவாக்குவோம்.

யாழ் நிலம் விட்டு வன்னிப் பெரு நிலம் நோக்கி ஒட்டு மொத்தமாக ஓடிப் போன காலமது. சொந்த பந்தம் பார்க்காமல் தங்கள் வீடுகளில் எங்களை தங்க வைத்தார்கள் வன்னி மக்கள். அங்கேயேதான் இனிமேற் காலமெனும் போது, தங்கள் வளவுகளில் வீடுகள் அமைத்து தங்க அனுமதி அளித்தார்கள்.

தமிழர் நிழலரசின் கட்டுப்பாடுகளும், மக்களின் கடப்பாடுகளும் யாழ்-வன்னி மக்களை கட்டுக்குள் வைத்திருந்தாலும் அவர்கள் மனமொத்து வாழ்ந்தனர்.

யாழ் மக்களிடம் நன்றி உணர்வும், வன்னி மக்களிடம் பெருந்தன்மையும் காணப்பட்டது. வன்னி மக்களின் அடையாளங்களையும் தனித்துவத்தையும் யாழ் மக்கள் குலைக்க முனையவில்லை. அதே போல் இருக்க இடங்கொடுத்தோம்; எங்களுடன் ஒத்துப் போக வேண்டும் என்ற ஆதிக்க மனப்பாங்கு வன்னி மக்களிடம் இருந்ததில்லை. அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும் எனும் பெருந்தன்மை வன்னி மக்களிடம் இருந்தது.

ஆனால் இன்று, மன்னார் வீதியில் அகற்றப்பட்ட வரவேற்பு வளைவு பற்றிய கருத்தாடல்களில் நன்றி உணர்வும் பெருந்தன்மையும் புறக்கணிக்கப்படுகின்றன.

எங்கள் இடத்தில் இருந்து கொண்டு எங்களையே “அழிக்க” நினைக்கிறீர்களா என்று சைவர்களும், எங்கள் ஆலயம் இருக்கும் இடத்தில் சைவாலய வரவேற்பு வளைவா என்று கிறித்தவர்களும் பெருந்தன்மையும் நன்றியுணர்வும் இன்றிக் கருத்தாடுகின்றார்கள்.

இன்னொரு பக்கம், நால் மத மக்கள் வாழும் நிலத்தில் எதுக்காக மத அடையாளங்கள் இருக்க வேண்டுமென கருத்து முன் வைக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் வாதாடப்படுகிறது. சமத்துவநிலமாக மன்னார் இருக்க வேண்டுமெனில் பொது இடங்களில் இருக்கும் இவ்வாறான மத அடையாளங்கள் அகற்றப்படல் வேண்டும் என்கிறார்கள் அவர்கள்.

இலங்கைத் தீவின் அனைத்துப் பகுதிகளிலும் இவ்வாறான மத அடையாளங்களை அகற்றும் நடவடிக்கை நடைபெறுகிறதா என்பதை வசதியாக மறந்து விட்டு வாதிடுகிறார்கள்.

அந்தப்ப்பக்கமும் கொஞ்சம் பார்வையை திருப்பினால் இந்தப் பிரச்சினையின் வேர் பிடிபடும்.

அப்படியானால் இதற்கு என்னதான் தீர்வு?

என் சகோதரனுக்குப் பிடிக்கவில்லை; அதனால் எனக்கு இந்த வளைவு வேண்டாம் எனும் பெருந்தன்மையை சைவர்கள் காட்ட வேண்டும்.

இல்லையேல், என் சகோதரனுடைய அடையாளமாக இருந்த வளைவை தொடர்ந்தும் இருக்க  சகோதரத்துவத்துடன் கிரித்தவர்கள் உதவ வேண்டும்.

இல்லையேல் காலங்காலமாக எம்மைத் தின்றுகொண்டிருக்கும் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு தமிழர் நாம் இரையாகுவோம்.