நாளொரு குறள் பொருளுடன் – 81

நாள் : 81
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : விருந்தோம்பல்
செய்யுள் :1

இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.

இல்லறத்தான் அன்பு என்னும் பண்பு கொண்டு செய்யவேண்டிய கடமைகளில் முக்கியமானது விருந்தோம்பல் ஆகும்.

இல்வாழ்வோன் எந்த வரிசையில் எப்படி பேண வேண்டும்.

தென்புலத்தார் – முன்னோர்
தெய்வம் – இறைவன்
விருந்து – விருந்தினர்
ஒக்கல் – உறவினர்கள், கூட வாழ்பவர்கள்
தான்

இதுதான் இல்லறத்தான் பேண வேண்டிய வரிசை என்று இல்வாழ்க்கை அதிகாரத்தில் சொன்னார் வள்ளுவர்.

இதில் முன்னிரண்டும் கண்ணுக்கு புலப்படாதோர். பின்னிரண்டும் தம்மோடுள்ளோர். அது சுயனலத்தின் பாற்படும்.

அதனாலேயே பிறருக்கு ஈதல் என்னும் விருந்தோம்பல் சிறப்பு பெறுகிறது.

பொருள்களை, சொத்துக்களை, உடைமைகளை உரிமையாய் இல்வாழ்வான் மட்டுமே கொள்ள முடியும். ஆனால் பூமியில் உள்ள அனைத்துமே அனைவருக்குமே சொந்தமானது. அதை தனிமனிதன் உரிமை கொண்டாடலாமா?

தனிமனிதன் சொத்துக்களின் உரிமை பெறவேண்டுமானால் அவன் உலகின் மற்றவருக்கு திருப்பி எதாவது செய்தல் வேண்டும். ஒரு ஏக்கர் நிலத்தை ஒருவன் உரிமை கொண்டாடுகிறான் என்றால் அதில் விளைவிப்பதின் பயனை மற்றோரிடம் பகிர்ந்து கொள்வதாலேயே அவன் உரிமை நியாயமானதாகிறது. உழைப்பை விதைத்து பயனை அறுவடை செய்பவன், நிலத்திற்கான பங்கை அனைவருக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும். அதற்கான வழியே விருந்தோம்பல் ஆகும்.

Agriculture என்ற மேல் நாட்டு பெயருக்கு நிலத்தைப் பண்படுத்தல் என்று பொருள். ஆனால் வேள் என்னும் சொல்லின் அடியாகப் பிறந்த வேளாண்மை என்னும் சொல் பொதுவாக கொடை, ஈகை ஆகியற்றைக் குறிக்கும். நிலமானது தரும் கொடையாதலால் இப்பெயர் வழங்கியிருக்கலாம். வேளான் என்னும் சொல் வெள்ளத்தை (நீரை) ஆள்பவன் என்னும் பொருளது என்பர்.வேளாண்மை என்ற சொல் “விருப்பத்துடன் பிறரைப் பேணுதல்” என்ற பொருளும் கொண்டதாகும்

ஆக இயற்கை கொடுப்பதை கொண்டு தானும் உண்டு பிறரையும் விருப்பத்துடன் பேணுதல் என்பதை வேளாண்மை என்கிறது தமிழ் பண்பாடு.

இல்லறத்தான் இருந்து வாழ்ந்து பாதுகாத்து பராமரிப்பது அத்தனையும் எதற்காக என்றால்…

விருந்தினராக வரும் மற்றோரை  விருப்பத்துடன் பேணுதலுக்காக.

மேலை நாட்டு கலாச்சாரத்திலே நமக்கு நன்மை செய்ய வருவோரை மட்டுமே விருந்தினர் என்பர். தமிழ் கலாச்சாரத்தில் வரும் அனைவருமே விருந்தினர்தான். அதனாலேயே வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்றும் பெயர் பெற்றது.

இப்படிப்பட்ட ஒரு அப்பழுக்கில்லாத, சுய நலமற்ற அறக்கலாச்சாரத்தை  நாம் கொண்டவர்கள் எனப் பெருமையாய் சொல்லிக் கொள்ள இந்த ஒரு குறள் போதும்.