வீட்டுப்பாடம்

205

நாம் வசிக்கும் வீட்டைப் பார்த்து கற்றுக் கொண்டால் எமது வாழ்க்கை ஆயிரம் ஜன்னல் வீட்டுக்கு குடிபெயரும்.

வீட்டின் கூரை உயர்வாகச் சிந்திக்கச் சொல்கிறது. தன்னைப் போல் எல்லோருக்கும் உதவச் சொல்கிறது.

தரையோ பொறுமையைக் கற்றுத் தருகிறது. மட்டுமல்லாமல் தன்னைப் போல் எல்லாத்தையும், எல்லாரையும் தாங்கச் சொல்கிறது.

எல்லாவற்றையும் வரையறைக்குள் வைத்திருக்க கற்றுத்தரும் சுவர் ஒவ்வொருவருடனும் பழகும் போது எல்லையை வகுக்கவேண்டியதன் முக்கியம் பறைகிறது. ஒருவர் சுதந்திரத்தை, பிரைவசியை கெடாமல் காக்கச் சொல்கிறது.

ஏறும் போது சறுக்காமல் இருக்க கவனம் தேவையென சொல்லாமல் சொல்லுமது படிக்கட்டு. தன்னைப் போல் அனைவருக்கும் பரவசம் வழங்கச் சொல்கிறது சன்னல்..

டிக் டிக்கென்று நேரம் காட்டும் கடிகாரமோ உழைப்பைப் பற்றிக் காது கடிக்கிறது. திகதி காட்டும் நாட்காட்டி நாள் தோறும் எம்மை புதுப்பிக்கும் சூட்சுமம் சொல்கிறது.

முகம் பார்க்கும் கண்ணாடி அடிக்கடி எம்மை சுயபரிசோதனை செய்ய வேண்டும் என்கிறது. எற்றப்பட்ட விளக்கோ வெளிச்சம் கொடுக்க வேண்டும் என்கிறது.

அட… மேலே சொன்னவற்றில் உடன்பாடில்லையா.. இல்லாள்களின் மேதைமையை கூர்ந்து கவனித்தால் நிச்சயம் வீட்டோடு உடன்பாடு உண்டாகும்.