வல்லமையுடன் ஒற்றுமையும் தந்தருளும் தமிழர்களின் தூய ஆவிகளே சாணக்கியமும் தாருங்கள்!

எங்கள் மாவீரர்களே!
மண்ணக வாழ்வுதனை முடித்து,
விண்ணக வாழ்வுக்கு நீவிர் சென்றாலும்,..

நெஞ்சக பரப்பெங்கும்,
சிரஞ் சீவியாக நீவிர்தானே வாழ்கின்றீர்கள்!
தூய ஆவியாக நீவிர்தானே வாழ்கின்றீர்கள்!

எங்கள் மாவீரர்களே!
எங்களைத்
தூய்மைப் படுத்தியத்தியபடியே
உங்கள் தூய ஆவிகள் எங்களுடன்தானே இருக்கின்றது.

எங்கள் மானமாவீரர்களே!
நயவஞ்சகரின் வலையில்
நாம் வீழ்ந்து போகாமல் பார்த்தபடி
உங்கள் தூய ஆவி
எங்களை பாதுகாக்கின்றது.

எங்கள் மானமாவீரர்களே!
சாதி பேய்கள் எமை அண்டாமல்
உங்கள் தூய ஆவி
எங்களை பாதுகாக்கின்றது.

எங்கள் மானமாவீரர்களே!
மதங்கள் மதம் கொள்ளாமல்
உங்கள் தூய ஆவி
எங்களை பாதுகாக்கின்றது.

எங்கள் மானமாவீரர்களே!
பிரதேசவாதப் பிசாசுகள்
எங்களிடையியே சன்னதம்
கொள்ளாமல் உங்கள் தூய ஆவி
எங்களை பாதுகாக்கின்றது.

எங்கள் மானமாவீரர்களே!
வல்லமையுடன் ஒற்றுமையும்
தந்தருளும் தமிழர்களின் தூய ஆவிகளே
சாணக்கியமும் தாருங்கள்!

எங்கள் மானமாவீரர்களே!
தூய ஆவிகளாக எம் செம்மண்ணில்
வலம் வரும் வீரக் கொழுந்துகளே
காலமுள்ள காலம் வரை தயவு கூர்ந்து
எம்முடனேயே இருங்கள்!

 

வல்லமை தரும் நினைவுகளுடனும்
வலிகளுடனும்…………………

– வயவையூர் அறத்தலைவன் –