கர்ண வதம்
——————–
கர்ணனின் கவச குண்டலப் பாதுகாப்பால் கர்ணன் தன்னுடைய எல்லாப் போரையுமே வென்றிருக்க வேண்டும். ஆனால் வென்றானா என்பது முதல் கேள்வி. கந்தர்வர்களுடன் தோற்றான், துருபதனிடம் தோற்றான், அர்ச்சுனனிடம் தோற்றான். இதெல்லாம் கவசம் அவன் உடலில் இருந்த காலத்தில்தான்.
ஆக வெற்றி தோல்வி கவசத்தில் இல்லை. குருஷேத்திரப் போருக்கும் அதற்கு முன் நடந்த போர்களுக்கும் மிக முக்கிய வித்தியாசம் குருஷேத்திரப் போர், நீண்ட யுத்தம். மரணிக்கும் வரைப் போராடும் யுத்தமாகும்.
கர்ணனைக் கொல்ல அர்ச்சுனன் பாசுபதாஸ்திரம் பயன்படுத்தி இருக்கலாம். உலகின் மிக உயர்ந்த மூன்று அஸ்திரங்கள் பிரம்மாஸ்திரம் – நாராயணாஸ்திரம் – பாசுபதாஸ்திரம். அர்ச்சுனன் கர்ணனைக் கொல்ல வேண்டும் என வெறியுடன் இருந்திருந்தால் பாசுபதாஸ்திரம் உபயோகித்துச் சாய்த்திருக்கலாம். அபிமன்யூ இறந்தவுடனே பாசுபதாஸ்திரம் உபயோகித்திருக்கலாம். ஆனால் அவன் கண்ணனிடம் அவன் தன்னை முற்றிலும் ஒப்படைத்திருந்தான். கண்ணன் சொன்னதை மட்டுமே செய்தான். அதனால் கண்ணனின் தர்மமே அவன் தர்மம் ஆகியது.
கண்ணனே, கர்ணனுக்கான மரணத் திட்டத்தை வகுக்கிறான்.
கர்ணன் செய்த தவறுகள் அத்தனையும் அவன் வீழ்ச்சியில் பங்கெடுக்கின்றன. அதுதான் பரசுராமரின் சாபம், பிராம்மண சாபம், பூமாதேவியின் சாபம் இவை அனைத்தும் பலிக்க வேண்டிய மிகப் பெரிய கடமை கண்ணன் தலையில் அல்லவா உள்ளது. அவையெல்லாம் உண்டாக்கினான்.
பீஷ்மருக்கு ஞானம் வழங்கி அவர் ஆசையை நிறைவேற்றினான். துரோணருக்கு கத்தி எடுத்தவன் கத்தியால் சாவான் என்பது போல பிள்ளைப்பாசத்தால் சாகவைத்தான்.
கர்ணனுக்கு?
கர்ணன் என்ன செய்ய ஆசைப்பட்டான்? அர்ச்சுனனை விடத் தான் சிறந்த வில்லாளி என நிரூபிக்க வேண்டுமென ஆசைப்பட்டான். அதனால்தான் தன் திறமை முழுக்க வெளிப்படும் வரை அவன் சக்தி ஆயுதத்தை உபயோகிக்கவில்லை. ஆனால் கண்ணன் கடோத்கஜன் மூலம் அதை பறித்துவிட்டார்.
கர்ணனின் ஆசையை நிறைவேற்றவே அவன் ஆயுதம் ஏந்தாக் காலத்தில் அவனைக் கொல்ல உத்தரவிட்டார். அர்ச்சுனனை பாசுபதாஸ்திரம் உபயோகி எனச் சொல்லி இருந்தால் கர்ணனால் என்ன செய்திருக்க முடியும்? கர்ணன் மிகப் பெரிய வில்லாளி என இன்று பேச எதாவது உங்களிடம் மிச்சமிருக்குமா?
பீஷ்மர், கர்ணன், துரோணர் ஆகிய மூவருமே ஆயுதம் இல்லாமல் இருக்கும் போதுதான் வதைக்கப்பட்டனர். மேலோட்டமாகப் பார்க்கப்போனால் அது அதர்மம். ஆனால் இப்படித்தான் சாகவேண்டும் என்பதைத் தர்மம்தான் தீர்மானிக்கிறது.
ஐந்து வீடுகள் கொடுக்க விரும்பாமல்தான் இத்தனைப் பெரிய வீரர்களைப் பலியிட்டான் என துரியோதனனின் மேல் கோபமே வரவில்லை அல்லவா?
கர்ணனுக்கு மாவீரன் என்ற பட்டத்தைக் கண்ணனே அளித்திருக்கிறான். அவன் அதற்காகத்தான் போரிட்டான். அதை அளிக்க இதை விட உன்னதமான வழி இல்லை.