பால் : அறத்துப்பால்
அதிகாரம் : நீத்தார்பெருமை
செய்யுள் : 6
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்.
பெரியவர் யார் ? சிறியவர் யார்? மிக எளிமையாக அறியலாம்.
அரியவற்றைச் செய்வர் பெரியர். செய்யாதவர் சிறியர். இது மிக எளிது போல தோன்றினாலும் சற்று ஆழ்ந்து பார்க்கலாம்.
செயற்கரிய – செய்வதற்கு கடினமான வேலைகளை அவற்றின் செயற்கடினங்களை எண்ணாது பலனை எண்ணிப் பார்த்து செய்பவர்கள் பெரியவர்கள். இதைப் பின்னே ஒரு குறளில் தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலிதரும் என ஊக்குவிப்பார்.
ஒரு செயல் முக்கியமானதா இல்லையா என்ற தராசில் எடைபோட்டே பெரியவர்கள் செய்வார்கள்.
ஒரு செயல் செய்ய எளிமையானதா என எடைபோட்டே சிறியவர்கள் செய்வார்கள். ( இணையதளம் வருபவர் பெரியவர். வாட்ஸப்பிலே காலத்தை ஓட்டுபவர் சிறியர்.)
இதுதான் இச்செய்யுளின் ஊடே வரும் செய்தி. முதன்முறையாக எதையும் செய்தல் கடினம். அடியொற்றி நடத்தல் எளிது, முன் செல்பவன் தலைவனாகிறான். பின் செல்பவன் தொண்டனாகிறான்.