மனதிற்கினியான்.. மரணத்திலும் வாழ் “வான்”..

தன்னலமற்ற தலைவன்
பாதச்சுவடுகளை பணிந்து நின்ற பணிவாளி!
தற்துணிவும் தன்னம்னம்பிக்கையும்
கொண்ட போராளி!

ஆடம்பரமில்லா அறிவாளி
தாயன்பும் தயவும் நிறைந்தநல் மருந்தாளி!
துன்பங்களை கண்டு துவண்டுபோகா துணிவாளி!

இன்னல்களை
எதிர்த்து நின்று
இனிமையாக்கும் சாதனையாளி
தூரநோக்கு பார்வையாக
ஒற்றுமையே பலம் என
உறுதிமாறா உணர்வாளி

நட்புகள் தூரதேசம்
சென்றபோதும்
நலமாக நட்புறவு
காக்கப்பட வேண்டுமென
நலம் விசாரிக்கும் உன்னத
உயிர் நண்பன்!

மருத்துவ பணியே
மகத்தான பணியென
மனத்திடம்கொண்ட
மான்பமிக்க மருத்துவராக மட்டுமன்றி

வெயிலோடு உறவாடி
மழையோடு விளையாடி
பூமித்தாயை புனிதமாக்கி புதுமைகள்
படைத்த புத்திசாலி!

கைப்பிடித்தவள் கலங்கி நிற்க
கண்னெனக் காத்த
பிஞ்சுகள் ஏங்க
கல்நெஞ்சக் காலனவன்
அழைத்து விட்டான்
காரணமின்றி!

இல்லை!!!!

பாரினில் அவன் படும்
பாட்டை பார்த்த படைத்தவனும்,
போதும் உன் பூலோக
வாழ்க்கை!

பரலோகம் வந்துவிடு
அங்கு உன்னை
பல்லக்கில் தூக்கி
செல்ல பல்லாயிரம்
பேர் காத்துநிற்பர்!

நீ நேசித்த தலைவனும்
கருணையோடு சேவை
செய்தவர்களும் நட்சத்திரங்களாய்
ஒளிவீசுகின்றனர்!

உன்வரவால் ஒளியிழந்த நட்சத்திரங்களும்
ஒளிபெறும் ஒரு உன்னத
விடிவிற்காய்!

  • றோமகவாணி –