வரலாற்று புகழ்பூத்த குடாரப்பு தரையிறக்க பங்காளி மேஜர் அமுதா!



பேராற்றல்களின் பெண் வடிவம் மேஜர் அமுதா அவர்கள் என்று சொன்னால் அது ஒரு போதும் மிகையாகாது.

கரிகாலன் காலத்து அரியாத்தையாகிய மேஜர் அமுதாவின் ஆற்றல்களையும் தேசம் மீதான ஆழமான காதலையும் எளிதில் எழுத்தில் வடிக்க முடியாதவை ஆகும்.

எப்போதுமே சிரித்த முகத்துடனும்
எழுச்சி மனநிலையுடனும் ஓடித்திரிவார்
எங்கள் அமுதா அக்காள்.

விடுதலை வேண்டிட
நான் விதையாகிட
வேண்டும்
ஒரு பிடி மண்ணிட
நீங்கள் வர வேண்டும்…”

“எமக்கென ஒரு நாடு
இம் மண்ணில்
வேண்டும்
அதற்குள்ளே
நடுகல்லாய்
நான் புகவேண்டும்

சாதாரண போராளிகளுக்கும் உற்சாகமூட்டி அவர்களையும் சாதனையாளர்களாக ஆக்கிட வேண்டும் என ஓய்வுறக்கம் கடிந்து செயலாற்றியவர்தான் மேஜர் அமுதா ஆவார்.

தனது ஆளுகையின் கீழுள்ள மருத்துவபிரிவு போராளிகளை சர்வ வல்லமை படைத்தவர்களாய் புடம்போட
மேஜர் அமுதா அவர்கள் திருவுளம் கொண்டு செயலாற்றிய விடையங்கள் பல உண்டு.

அத்தகைய இன்னோரன்ன பற்பல
விடையங்களில் ஒன்றினை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் முகமாக ஒரு உபகதையினையும் கீழே தந்துவிட்டு தொடர்கின்றேன்.

தென்னியங்குளம் காட்டுப் பகுதியில் அன்று அமைந்திருந்த “மேஜர் திவாகர் ஞாபகார்த்த மருத்துவமனை”யில் சில போராளிகளுக்கு யான் ஆங்கிலம் படிப்பித்துக் கொண்டிருந்தேன்.

அந்த நேரத்தில் அங்கு வந்த அமுதா அக்காள் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கான உபகரணங்கள் குறித்து மிகவும் அக்கறை கொண்டு கதைத்துவிட்டுச் சென்றார்.

“ஆர்வம் அதிகம் செயற்பாடு மத்திமம்”என வாழும் மாந்தரில் அவரும் ஒருவர் என நினைத்துக் கொண்டேன்.

ஒரு கிழமை கடந்த நிலையில் மல்லாவி நகருக்கு சென்று வந்த அவர் சில ஆங்கிலப் பயிற்சி பொத்தகங்களையும் கொழும்பிலிருந்து வெளிவரும் பிரபல ஆங்கில பத்திரிகைகளான
Sunday Times,Sunday Leader போன்ற பத்திரிகைகளையும்
சில ஆங்கில சஞ்சிகைகளையும் வாங்கிக் கொண்டு வந்து தந்தார்.

அந்த நேரத்தில் வன்னியில் ஆங்கிலப்
பத்திரிகைகள் வருவது அரிதிலும் அரிது.

ஶ்ரீலங்கா இராணுவத்தின் சோதனை சாவடிகள் தாண்டி பத்திரிகைகள்
வன்னி நிலத்திற்கு வந்தாலும் இயக்கத்தின் சில முக்கிய உறுப்பினர்களின் கரங்களுக்கே அவை செல்லுவதுண்டு.

அவர்களின் தேவைகள் கருதியே இந்தியாவிலிருந்தும் கொழும்பிலிருந்தும் வெளிவரும் ஆங்கில பத்திரிகைகளும் சஞ்சிகைகளும் பெற்றுக் கொடுக்கப்படும்.

யாரோ ஒரு முக்கிய உறுப்பினர் மூலம் அந்த ஆங்கிலப் பத்திரிகைகளை பெற்று அடர் அடவிக்குள் கொண்டு வந்து தந்ததை இன்றும் வியப்பு
மேலிட நினைந்து பார்க்கின்றேன்.

ஆங்கில பத்திரிகைகள் சஞ்சிகைகளை என்னிடம் தந்த அவர் சமகாலஅரசியலைஆங்கில_மொழியூடாக அறிய முயலும் போது போராளிகள் ஆங்கிலத்தை ஆர்வத்துடன் கற்பார்கள் எனவும் ஆலோசனை சொன்னார்.

ஆம், மருத்துவ போராளிகள் அனைவருக்கும் ஆழமான ஆங்கில அறிவு
அத்தியவசியமானது என்பதை கருத்தில் கொண்டு செயற்பட்டவர்.

ஆம்,

தமிழீழ மருத்துவப்பிரிவின் மகளிர் பொறுப்பாளராக இருந்த இவர்
தனது ஆளுகையின் கீழுள்ள ஒவ்வொரு போராளியையும் ஆற்றல் மிக்கவர்களாகவும் மிகுந்த அர்ப்பணிப்பு உள்ளவர்களாக உருவாக்கிட அல்லும் பகலும் உழைத்தவர்.

யாழ் இடப்பெயர்வின் பின்னரான காலப்பகுதியில் யாழ் போதனா வைத்தியசாலையினை போராளிகள் பாவிக்க முடியாத பேரிடர் வந்த போது எங்கள் வன்னி பெருநிலப்பரப்பில் விடுதலைப்புலிகளின் மருத்துவப்பிரிவானது சத்திரசிகிச்சைக்கூடங்களுடன் பெரிய வைத்தியசாலைகளை நிறுவிட கடுமையாக உழைத்தவர்களில் இவரும் முக்கியமானவர்.

மேஜர் அமுதா அவர்கள் தனது செயலாண்மையாலும்
அன்பாலும் பல நூறு
பெறுமதியான மருத்துவ போராளிகளை செதுக்கிய மிகச் சிறந்த சிற்பி ஆவார்.

மருத்துவப்பிரிவிலிருந்து மாற்றலாகி மரபுவழிப்படையணியான மாலதி படையணிக்கு சென்றார்.

அந்த சண்டையணியிலும் தனது முத்திரையை பதித்தார்.

மிக குறுகிய காலத்திலேயே ஒரு அணியின்(கொம்பனி) இரண்டாவது அணித்தலைவியாக சமர்களில் பங்கெடுத்தார்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் பெயர் சூடி மேற்கொள்ளப்பட்ட
“ஓயாத அலைகள் 03 வலிந்து தாக்குதல் நடவடிக்கையின் தொடர் சண்டைகளில்
முழுமையாக பங்கெடுத்தவர்.

வன்னிப் பெருநிலப்பரப்பின் கிழக்கே உள்ள ஒட்டுசுட்டானில் தொடங்கிய நடவடிக்கை ஏ ஒன்பது (A9) பெருஞ்சாலையையும் கடந்து மேற்கு நிலமான மன்னார் மாவட்டத்தின் திருக்கேதீஷ்வரம் சந்தி வரை எமது நிலங்களை மீட்டெடுத்த தொடர் சமர்களில் ஓய்வின்றி சண்டை செய்த போராளிகளில் மேஜர் அமுதாவும் ஒருவர் ஆவார்.

ஓயாத அலைகள் – 03 நடவடிக்கையின் கட்டம் மூன்று வடக்கு நோக்கி நகர்ந்து ஆனையிறவையும் துவம்சம் செய்யத் தயாரன போது அதற்கான கடல் பயிற்சிகளையும் எடுத்துக் கொண்டு குடாரப்புத் தரையிறக்க தாக்குதலின் பெரும் பங்காளியும் ஆனார்.

மேஜர் அமுதா அவர்களின் நாட்குறிப்பிலிருந்து எழுத்தாளர் மிதயா கானவி பதிவு செய்த கவிதை ஒன்றினையும் இணைக்கின்றேன் கீழே படியுங்கள்.

“எமக்கென ஒரு நாடு
இம் மண்ணில்
வேண்டும்
அதற்குள்ளே
நடுகல்லாய்
நான் புகவேண்டும்

விடுதலை வேண்டிட
நான் விதையாகிட
வேண்டும்
ஒரு பிடி மண்ணிட
நீங்கள் வர வேண்டும்…”

மேஜர் அமுதா
கந்தையா சரஸ்வதி
கோப்பாய் வடக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 02.04.2000

வீரவணக்கம் அமுதா அக்கா!🎖