உதவிகளின் உள்நோக்கம் – உணர்வின் உரையாடல் – 24/02/2018

403

நடிகர் கமலகாஸன் கட்சி தொடங்கி விட்டார். “ஆட்சிக்கு வந்தால் இலவசமாக ஸ்கூட்டி தருவீங்களா” என்ற கேள்விக்கு “நீங்கள் மற்றவருக்கு ஸ்கூட்டி வழங்கும் அளவுக்கு வசதியாவீர்கள்” என்று பதில் சொல்லி உள்ளார். வளர்ச்சியை நோக்கிய நேரிய பார்வை இது.

“நான் உதவிக்கொண்டே இருப்பேன். நீ பெற்றுக்கொண்டே இரு” என்பது அடக்குமுறையின் ஒரு வடிவம். “இன்று நான் உனக்கு உதவுகிறேன்; நாளை நீ இன்னொருவனுக்கு உதவு” என்பதுதான் வளர்ச்சி; எழுச்சி; புரட்சி; மறு மலர்ச்சி. எங்கள் ஊருக்குத் தேவையானது இதுதான்.

என்னைப் பொறுத்தவரை ஒருவரின் வாழ்வாதாரத்திற்கு உதவுதல் என்பது அவருக்கு தொழில்வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்தலே. அது, கைத்தொழிலாக இருக்கலாம்; சுய தொழிலாக இருக்கலாம்; அல்லது வேறு வேலை வாய்ப்பாகவும் இருக்கலாம்.. நான் சாப்பிடும் இந்த வேளைச் சோறு யார் போட்டதாயும் இருக்கலாம். ஆனால் அடுத்த வேளைச் சோறு நான் ஆக்கினதாக இருக்க வேண்டும் என்றுதான் நான் விரும்புவேன். உழைக்கப் பின் நிற்காத வயாவிளான் மக்களும் அப்படித்தான் விரும்புவார்கள்..

ஆக, இன்று நாம் எம்மூர் மக்களின் தொழில் முனைவுக்கு உதவினால், அவர்கள் உழைத்து முன்னேறி, நாளை இன்னொருவரின் தொழில் முனைவுக்கு உதவுவார். இது அப்படியே தொடர்ந்து ஊரே வெளிச்சமாகி விடும். இதை “மூளையில்” பதிக்க வேண்டியது எல்லாருடைய தட்டிக் கழிக்க முடியாத பொறுப்பு ஆகும்.

இது ஏற்கனவே “மூளை”யில் பதிந்துதான் இருக்கு. இதைத்தானே செய்து கொண்டிருக்கிறோம். இவர் பெரிய ஆள் மாதிரிச் சொல்றார் என்று எந்த அமைப்பாவது திட்டினால், இச்சிற்றறிவாளன் உங்கள் திட்டை மனமுவந்து வாங்கிக் கொள்கிறேன்.

நிற்க, வயவனில் வந்த கட்டுரை இன்னொரு தளத்தில் வந்திருக்கு என்று ஒருவர் ஆதங்கத்துடன் சொன்னார். அவரின் கரிசனைக்கு நன்றி.

வயவனின் எழுத்துகள் சமூகத்தைச் சென்றடைய வேண்டும் என்பதே இலக்கு. அது யார்மூலம் நிறைவேறினாலும் மகிழ்ச்சியே. வயவனின் பதிவுகளை யாரும் கொப்பி பண்ண முடியாது. தாமே தட்டச்சி தமது தளத்தில் இடலாம். அத்தளமும் அதையேதான் செய்திருப்பார்கள். அதாவது அவர்கள் தங்கள் உழைப்பின் மூலம் வயவனின் கருத்தை மக்களிடம் சேர்த்திருக்கின்றார்கள். இது இரட்டிப்பு மகிழ்வு தரும் விடயம். அவர்களிக்கு வயவன் நன்றிதான் சொல்ல வேண்டும். நன்றி நண்பர்களே.

தொடர்ந்து உரையாடுவோம்.