நாள் 6
பால் : அறத்துப்பால்
அதிகாரம் : கடவுள் வாழ்த்து
செய்யுள் : 6
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்
உடல் என்னும் பொறிக்கு வாயில்களாக அமைந்தவை கண், காது, மூக்கு, வாய், தோல் ஆகியவை. இந்த ஐந்தையும் அவித்தவன் அதாவது பக்குவப்படுத்தியவன். பலர் அறுத்தவன் என்பார்கள். அப்படியென்றால் ஐந்தறுத்தான் என்று வள்ளுவர் சொல்லியிருப்பார். ஐந்தையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டவன் ஐந்தவித்தான். அவித்தல் என்னும் செயல் பக்குவப்படுத்தலைக் குறிக்கிறது..
அடுத்து சொல்வதுதான் உச்சம். பொய்தீர் ஒழுக்க நெறி நின்றார். ஐந்து புலன் களையும் கட்டுப்பாட்டில் உள்ளவனது அனைத்து வழிகளையும் அவர் சொல்லவில்லை, பொய்தீர் ஒழுக்க நெறி நின்றார் என்கிறார். பொய்தீர் என்றால் பொய்யற்ற என்று மேலாக பொருள் கொண்டாலும், பொய்யைத் தீர்க்கின்ற என்றே பொருள் கொள்ள வேண்டும். பொய்யைத் தீர்ப்பது பகுத்தறிவு. அந்தப்பகுத்தறிவு கொண்டு பொய்மையை அறுக்கும் வழி நிற்க வேண்டும். அப்படி வாழ்ந்தால் நீண்ட காலம் வாழலாம்.
ஆக, சொல்பவன் உணர்ச்சிகளுக்கு ஆளாகாதவனாக இருத்தல் வேண்டும். சொல்லும் வார்த்தைகள் பொய்களை, மூட நம்பிக்கைகளை அறுப்பதாக இருக்க வேண்டும். அப்படி சொல்லப்பட்ட பகுத்தறிவு வழிகளை பின்பற்றி வாழ்ந்தால் நீண்ட காலம் வாழலாம்.