உற்சாகமான உத்வேகமான பல காதைகள் சொல்லி எங்களையும் எழுச்சி கொள்ள வைக்கிறது “பகிரப்படாத பக்கங்கள்”.
தமிழீழ தேசத்தின் உண்மை வரலாற்றினை சில பக்கங்களை இயம்புகிறது.
இந்த நூல் ஈழமண்ணின் பல பகிரப்படாத பக்கங்களை ஒளிவு மறைவு இன்றிப் பகிரங்கப்படுத்துகிறது.
இப் பொத்தகம் சில இடங்களில் தமிழன் துயர் சொல்லி அழுகிறது. வாசிப்போரை சத்தமிட்டு அழவைத்துவிடவும் செய்கிறது. சில இடங்களில் மௌனமாக அழவைக்கிறது.
“வேரோடும் விழுதுகள்”எனும் பெயரில் கவிதைத் தொகுப்பு ஒன்றை முன்னர் எழுதி வெளியிட்டவர் கவிமகன்.
“பகிரப்படாத பக்கங்கள்” எனும் இந்த நூலில் இலக்கிய வித்துவத்தனம் காட்டும் கடும் தமிழ் இல்லாமல் எளிய தமிழில் கட்டுரைகளைப் படைத்துள்ளார்.
நெஞ்சை நிமிர வைக்கும் கட்டுரைகளும் உண்டு. நெஞ்சை கசக்கிப் பிழியும் கட்டுரைகளும் உண்டு.
வீரநெஞ்சம் கொண்ட லெப் கேணல் மணி/ஞானசுதன் அவர்களின் காதைகளையும் இப் பொத்தகம் கொண்டுள்ளது.
சாள்ஷ் அன்ரனி படைப்பிரிவில் அன்று சேவையாற்றிய மணியண்ணாவால் களத்திடை மீட்கப்பட்ட 94 வயது மூதாட்டியைப் பற்றிய அழகானதோர் ஈர வரலாற்றை இப் பொத்தகம் தன்னுள் அடக்கிப் பெருமை கொள்கிறது.
2000ஆம் ஆண்டு சித்திரை மாதம் 10ஆம் தேதி இத்தாவில் களமுனையில் அடித்து துவம்சம் செய்யப்பட்ட யுத்த தாங்கியில் இருந்த அல்பம் லெப். கேணல் மணி அவர்களை அழவைக்கிறது.
எதிரி குடும்பத்துக்காகக் கலங்கிய அந்த மானமாவீரனின் அதி உன்னத மானுட நேயத்தையும் அச்சொட்டாகப் பதிவு செய்துள்ளார் இ.இ.கவிமகன்.
நவம்பர் 18 ஆம் தேதி சேர்மனியின் ஷ்ருட்காட் நகரில் பகிரப்படாத பக்கங்கள் நூல் வெளியீட்டு விழா காண இருக்கிறது.
இந்த நிகழ்வில் பங்குகொள்ள அனைத்து தமிழுறவுகளையும் அன்புடன் அழைக்கிறார் நூலாசிரியர் திரு இ.இ.கவிமகன்.