ஈரமும் வீரமும் நிறைந்த களமுனை மருத்துவம்

3186

தமிழர்தம் கலாச்சாரத் தொட்டிலின் முகம் சிதைக்கப்பட்டு பல்லாயிரம் மக்களை நிர்க்கதி நிலைக்கு தள்ளியது சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கை.

அக்காலப் பகுதியான 1995 இல் கிளாலியில் தொடுவைப் படகெடுத்து வன்னிப் பெருநிலப்பரப்புக்கு வந்தார் #மாமருத்துவர் #கெங்காதரன் அவர்கள். 

உப்புநீரில் விளக்கெரியும் வற்றாப்பளை மண்ணில் உள்ள தனது தென்னந்தோப்பில் ஓய்வெடுக்கவே நினைத்தார். மலேரியா அதனுடன் செயற்கையாக அரசினால் ஏற்படுத்தப்பட்ட பஞ்சம் என மக்கள் பட்ட பெருந்துயர் கண்டு அங்கே தன் பணியைத் தொடரத் திருவுளம் கொண்டார்.

தனது 66வது அகவையில் இலவசமாக தன் மக்களுக்கு மகத்துவம் மிக்க மருத்துவ சேவையாற்ற ஆரம்பித்தார். 

1996 இல் கிளிநொச்சியில் “சத்ஜெய” இராணுவ நடவடிக்கையால் குறுகிய காலத்தில் இன்னுமோர் இடப்பெயர்வு நடைபெறுகிறது. மாட்டு வண்டியில் பிரசவ வேதனையில் பயணித்த இளம் தாய் ஒருவரை ஒலுமடுவில் வைத்து கண்டுகொண்டார்.

ஐம்பதுகளில்(50s) வளம் கொழிக்கும் எங்கள் வன்னி மண்ணில் தனது மகத்தான மருத்துவபணி மூலம் காக்கும் கடவுளருக்கும் கொஞ்சம் ஓய்வு கொடுத்தார்.

எழுபதுகளில்(70s) யாழ் வண்ணார்பண்ணை மண்ணில் தனியார் வைத்தியசாலையாகிய Van West Clinic & Nursing Home இனை நிறுவி அரும்பணி ஆற்றினார்.


தாய்க்கு மகப்பேற்று சத்திர சிகிச்சை அவசிய அவசரமானது. உடனடி அறுவைசிகிச்சை தேவைப்பட்டது. சிறிதே தாமதித்தாலும் தாய்சேய் மரணம் நிகழும் என்பதால் பக்கத்திலிருந்த குடிசையில் தன்னிடம் இருந்த அற்ப வசதிகளோடு அறுவைச்சிகிச்சை செய்து தாயுடன் சேயையும் வெற்றிகரமாகக் காத்தருளினார் எங்கள் மாமருத்துவர்.

 அங்கே தொடங்கிய அவரது உயிர்காக்கும் உன்னத பணி சுதந்திரபுரம் வரை அதாவது 2009 ஆம் ஆண்டுவரை பெருநிலப்பரப்பில் அவலங்களுக்கு நடுவே நீடித்தது.

“போர்த் தவிர்ப்பு வலயம்” என அறிவிக்க்கப்பட்டு பின் மிக மோசமான முறையில் ஆட்லறித் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட சுதந்திரபுரத்தில் மயிரிழையில் உயிர்தப்பினார். அதன் பின் தமிழீழ மருத்துவப்பிரிவினரதும் சக மருத்துவர்களினதும் வேண்டுகோளுக்கிணங்க வெளியேறினார்.

ஓய்வு நேரங்களில் புல்லாங்குழலிசை கொண்டு தனது இசையாலும் வி(ம)ருந்தளித்தார்.

வீரவரலாறுகளையும்,விருந்தோம்பல் பண்புகளையும் மிகுதியாகக் கொண்ட முல்லைத்தீவு மக்கள் நன்றி உணர்வும் குன்றிடாதவர்கள். 

1958இல் முல்லைத்தீவில் ஓர் சுகாதார வைத்திய அதிகாரியாக உப்பு நீரில் 
விளக்கெரியும் முல்லை மண்ணில் தடம் பதித்த மாமருத்துவர் அமரர்
 தி.கெங்காதரன் அவர்களை தங்கள் உள்ளக்கோவிலில் பூசிப்பவர்கள்.

 

அதன் வெளிப்பாடாக வைத்தியக் கலாநிதி 
தி. கெங்காதரன் அவர்கள் உயிருடன் இருந்த காலத்திலேயே அவரது பெயரில் முல்லைத்தீவு மாவட்டப் பொது வைத்தியசாலையில் ஓர் விடுதியைக் கட்டி அவரது திருக்கரங்களினால் திறந்தும் வைத்தனர்.

 

ஆறு தசாப்த காலம் அல்லது 
60 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் மண்ணில் மகத்தான சேவை ஆற்றியவர் மாமருத்துவர் தி. கெங்காதரன் அவர்கள். 

யாழ் இந்துக்கல்லூரியின்(JHC) இணையில்லா மைந்தர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும். 

(மாமருத்துவர் என்ற நல்லதோர் பதத்தினை வழங்கிய அல்லது சிபார்சு செய்த எங்கள் மதிப்புக்கும் அன்புக்குரிய 
Dr. க முருகானந்தன் அவர்களுக்கும் நன்றி)

 

1 COMMENT

  1. இவர்கள் மருத்துவர்கள் இல்லை. இவர்கள் “மகத்துவத்துவர்கள்”. என்றென்றும் நினைவில் வைத்து மதிக்கப்பட வேண்டியவர்கள்.