அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துகள்.
உலக நாடுகள் பலவற்றிலும் ஏற்பட்ட புரட்சிகளின் பிள்ளையாக இன்று நாம் கொண்டாடும் மே நாள் உள்ளது.
1800 களில் உலக நாடுகள் வளர்ச்சியடையத் தொடங்கிய போது, எழுந்த போட்டியின் விளைவாக அதிக நேரம் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டனர். ஒரு நாளில் 18 மணி நேரம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதனை எதிர்த்து செய்யப்பட்ட கிளர்ச்சிகளும் போராட்டத் தொடரிகளும் இன்றைய நாளுக்கான தோற்றுவாய்கள்.
1800 களின் முற்பகுதியில் இங்கிலாந்தில் எழுந்த வேலை நேரக் குறைப்புக்கான போராட்டம் வித்தானது.
1832 இல் அமெரிக்க துறைமுகத் தச்சுத் தொழிளாளிகள் 10 மணிநேரப் பணிக்கோரிக்கையுடன் பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டனர்.
அதன் தொடர்ச்சியாக 1834 ல் பிரெஞ்சிய நெசவாளர்கள், தமது 15 மணித்தியாலப் பணிநேரத்தைக் குறைத்து பத்து மணி நேரமாக்க வேண்டி “சனநாயகம் அல்லது மரணம்” என்ற உறுதிப்பாட்டோடு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இப்பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டோரிலிருந்தே தொழிலாளர் இயக்கங்கள் தோன்றின.
1835 இல் பிடல்பெனியாவில் தொழிலாளர்கள் 10 மணிநேரமே வேலை செய்வோம் என்று போர்க்கொடி தூக்கிப் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
1856 இல் அவுஸ்ரேலியாவில் 8 மணி நேரப் பணி நேரக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
1877 இல் பென்சில்வேனியாவில் பணிநேரக்குறைப்பை வலியுறுத்திப் போராடினர்.
இதனைத் தொட்டு அமெரிக்காவின் ஏனைய மானிலங்களிலும் போராட்டங்கள் வெடிக்க வேலைநேரக் குறைப்பு உரிமைப் போராட்டம் சங்கிலித் தொடராகியது.
ஆங்காங்கே நடந்த போராட்டங்கள் சலனங்களை ஏற்படுத்தினாலும் மாற்றம் எதனையும் ஏற்படுத்தவில்லை.
இதனால் அமெரிக்கத் தொழிலாளிகள் மானில வாரியாக தொழிலாளர் இயக்கங்களை அமைத்தனர். அவ்பாறு உருவான மானில இயக்கங்கள் இணைந்து “அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு” உருவானது. உருவான கையோடு 01-05-1886 இல் அமெரிக்கா தழுவிய பணிப்புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்தது.
அதனை ஏற்ற தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் குதிக்க அமெரிக்கா ஸ்தம்பித்தது. பெரும் நிறுவனங்கள் மூடப்பட்டன. அரசோ அடக்குமுறையை ஏவி விட்டது.
ஓரிரு இடங்களில் காவல் துறையின் தாக்குதலில் தொழிலாளர்கள் காயமுற்றனர். ஒரு சிலர் கொல்லப்பட்டனர். அடங்கி விடுவார்களென்ற அரசெண்ணத்தில் கொல்லி வைக்கப்பட்டது.
ஆம்.. இது வரை போராட்டத்திலிருந்து ஒதுங்கி இருந்தோரும் போராடத் தொடங்கினர். காட்டுத் தீ போல் பரவிய போராட்டம் ஆணவத்தின் ஆதிக்கக் கோட்டைகளை அழிக்கத் துவங்கியது. அமெரிக்க ஆலைகள் யாவும் அடக்கம் செய்யப்படும் நிலையை எட்டின.. அரசு கபடமாடத் தலைப்பட்டது.
தொழிலாளிகளுக்கு அகிம்சையாகப் போராடுங்கள் எனச்சொல்லிப் பாதுகாப்பு வழங்கியது. மறு புறத்தில் சதிவலை பின்னியது. குறிப்பிட்ட போராட்டக் களமொன்றில் குண்டு வெடித்தது. ஒரு காவலரிகாரி கொல்லப்பட பலர் காயமுற்றனர். அறவழிக்களத்தில் வன்முறை பூத்தது.
காவல் ஏவப்பட்டது.. தொழிலாளர்கள் வேட்டையாடப்பட்டனர். தொழிலார் தலைமைகள் கைதாகினர். சட்டமன்றம் மரணதண்டனை நிறைவேற்றியது. போராட்டங்கள் மரணித்து விட்டதாக ஆதிக்கம் நினைத்த நேரம் பிரான்சில் உலகளாவிய தொழிலாளர் இயக்கம் தோன்றியது.
உலகத் தொழிலாளர்கள் போராட்டம் பிரான்சைக் களமாக்கிக் கொண்டது. பிரெஞ்சு அரசியல் நிலைமையும் ஒத்து வர 1889 ஜூலை 14 இல் சர்வதேச தொழிலாளர் பாராளுமன்றம் கூடியது. பன்னாட்டுப் பங்காளர்கள் நானூறு பேர்வரை கூடினர்.
1890 மே 1 இல் உலகளாவிய ரீதியில் தொழிலாளர் இயக்கங்கள் போராட வேண்டும் என்று பிரகடனப்படுத்தப்பட்டது. அன்று தொட்டு இன்றுவரை மே ஒன்றில் தொழில்சங்கப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால், அண்மைக்காலமக அவை வெறும் சம்பிரதாயமாக மாறிவிட்டன.
ஏனெனில், எம்மில் பலர் நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரங்களை விட அதிக நேரம் விருப்பப்பட்டு வேலை செய்கின்றோம்.
ஆம்… 1800 களின் தொழிலாளர் நிலையில்தான் இன்றும் நாம்… அன்று கட்டாயத்தின் பேரில்.. இன்று…?
அகமும் புறமும் அகழ்ந்தாய்ந்து, அகப்போராட்டங்களை முன்னெடுத்து, நூதனமாகச் சிக்கவைக்கப்பட்ட சிறையை உடைக்க இன்றைய நாளில் உறுதிகொள்வோம்.
உழைப்பாளர் நாள் வாழ்த்துகள் அனைவருக்கும் உரித்தாகட்டும்.